புதன், 31 அக்டோபர், 2018

மோடி மௌனத்தின் பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களாக வந்த சில பிரச்சினைகள் நாட்டையே
குலுக்கிக்கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அதைப் பற்றியெல்லாமல் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார். அவர் பிரதமர் பதவியேற்ற பிந்தைய ஆண்டுகளில் மிகப் பெரும்பாலான காலத்தில் இது அவருடைய ஒரு வழிமுறையாகவே இருந்துவந்துள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் பலரும், பொது விவாதங்களில் பங்கேற்போரும் திரும்பத் திரும்ப இத்தகைய பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் பிரதமரின் கருத்து என்னவென்று கேட்டு வந்திருக்கிறார்கள். அவருடைய மௌனம் அரசாங்கத்தை அவரால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை, எல்லாம் கை மீறிப் போய்க்கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடுதான் என்று சித்தரிக்கிறார்கள்.
ஆனாலும் மோடியின் மௌனம் தொடர்கிறது.
ரஃபேல் விமானம், மீ டூ இயக்கம், தற்போது வெடித்திருக்கும் சிபிஐ விவகாரம் – எதுவானாலும் மௌனம்தான். அடுத்த மக்களவைத் தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம், ஆயினும் அவர் தன்னுடைய செயல்முறையை மாற்றிக்கொள்வது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஏன்? ஒரு வேளை தனது இந்த மௌனம் தனக்கு எதிராகப் போய்விடாது, தனக்குச் சாதகமான நிலைமையையே ஏற்படுத்தும் என்று கணக்குப் போடுகிறாரா? அதற்கு வாய்ப்பிருக்கிறதா?

கார்ப்பரேட் ஆக மாறும் அரசாங்கம்?
ஒரு மாறுபட்ட விளக்கம் இருக்கிறது. மோடியின் கீழ் அரசாங்கச் செயல்முறையே எப்படி கார்ப்பரேட் நிறுவனம் போல மாற்றப்பட்டு வருகிறது என்ற புதிய நிலைமைலிருந்து அந்த விளக்கத்தைக் காணலாம். மோடி தன்னை ஒரு உயர் ரக வணிக அடையாளமாக முன்வைக்கிறார் (தன்னைத்தானே மேலே வைத்துக்கொள்கிறார் என்றும் இதைப் படிக்கலாம்). அந்த உயர் ரக அடையாளத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று காட்டிக்கொள்கிறார். மேலும், அவர் தன்னை ஒரு புரியாத புதிராக வைத்துக்கொள்கிறார். அதன் மூலம், வாக்காளர்கள் தன்னைப் பற்றிய எந்த முடிவுக்கும் வரவிடாமல் ஊகித்துக்கொண்டே இருக்குமாறு விடுகிறார். தற்போதைய பதவிக் காலத்தில் மோடி எடுத்த பல முடிவுகள், ஒன்று அவருடைய கட்சி சந்திக்க நேர்ந்த பல்வேறு தேர்தல்களில் உடனடி ஆதாயம் அடைகிற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டவையாக இருந்துள்ளன; அல்லது, பிரதமர் நாற்காலியை இரண்டாவது முறையாகக் கைப்பற்றுகிற நோக்கத்துடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய மௌன வியூகமும்கூட பிரதமராக அடுத்த சுற்று வருவதற்கான ஒரு தயாரிப்பு வேலைதான்.
ஒரு வகையில், வாக்காளர்களிடையே வளர்ந்துவரும் வெறுப்பையே தனக்கு ஆதாயமாக மாற்றுகிற முயற்சியும்கூட இதில் இருக்கிறது எனலாம். எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் அவநம்பிக்கை கொள்கிறார்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு விரக்தியில் மூழ்குகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு மோடி என்ற தனி மனிதர் சமூக வேறுபாடுகளைத் தாண்டி, சட்டப்பூர்வ நிறுவனக் கட்டமைப்புகளின் மெத்தனங்களைத் தாண்டி, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்க்கத் தொடங்குவார்கள் என்ற கணக்கு அது!
நிறுவனக் கட்டமைப்புகள் அனைத்தையுமே சிக்கலின் விளிம்பில் தள்ளிவிடுகிற முயற்சிகள் திட்டமிட்ட முறையில் நடந்து வந்திருப்பதைக் காணலாம். நீதித்துறையில் தொடங்கி, உயர் கல்வி நிறுவனங்கள், பல்வேறு புலனாய்வு அமைப்புகள் என்று தொடர்ந்த அந்த முயற்சிகள், இன்று நடுத்தெரு வன்முறைகளுக்கு மறைமுக ஒப்புதல் அளிப்பதில் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. கூர்ந்து கவனித்தால் ஒன்று தெரியவரும். உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தனித்திறமை ஏதுமற்ற சராசரிகளாக, ஏதாவதொரு குற்றத்திற்கென சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இவை ஒருபுறமிருக்க, சாதாரணர்கள் பலரும் எளிதில் பலியிடப்படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட நிறுவனக் கட்டமைப்புகளின் செயல்பாட்டில் ஒரு கண்கூடான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாகக் கூட்டுச் சேர்ந்து வந்து நம்மை ஆக்கிரமிக்கிற குழப்பங்களும் சிக்கல்களும் துயரங்களும், எப்படிப்பட்ட அபாயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற சித்தரிப்புகளும், அந்நிய எதிரிகளையும் உள்நாட்டு எதிரிகளையும் பற்றிப் புகட்டப்படும் அச்சங்களும், எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு தீர்மானகரமான தலைவராக இருந்தால் அவரைச் சார்ந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கின்றன.
பிரிந்து கிடக்கும் எதிர்க் கட்சிகள்
எதிர்க் கட்சிகளைப் பொறுத்தமட்டில் தலைமைகள் பிரிந்து கிடக்கின்றன. உறுதியற்ற செயல்திட்டம். ஆகவே பலவீனமாகவும் திறனற்றவையாகவும் பார்க்கப்படுகின்றன. நடுத்தெரு வன்முறைகள் அதிகரிப்பதோடு, நீதித்துறைக்குள் நடந்த மோதலும், தற்போது சிபிஐ அலுவலகத் தகராறுமாக நிறுவன அமைப்புகளுக்குள் எழுந்த நெருக்கடிகளும் சேர்ந்துகொள்ள, மோடியின் வழிமுறை நம்பகமானதுதான் போல என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. தன்னை இந்தச் சில்லறை விவகாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக, மற்றவர்களெல்லாம் தார்மிகச் சீர்குலைவு, ஊழல், உள் சண்டை, அறிவற்ற தெரு வன்முறை என்ற புதைமணலில் மூழ்கிக்கொண்டிருக்க, தன்னை மட்டும் தேச நிர்மாணத்தில் முனைப்போடு ஈடுபட்டிருப்பவராகக் காட்டிக்கொள்வதற்கும், தனது தார்மீக மேலாதிக்கத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்வதற்குமான உத்தியாக மோடிக்குக் கிடைத்திருப்பது மௌனம்.
தற்போது உருவாகிவரும் நிலைமைகள் குறிப்பாக நரேந்திர மோடிக்கும் அவரது கட்சிக்கும் பாதகமான தேர்தல் சூழலை ஏற்படுத்தும் என்று பார்க்கிற அரசியல் விமர்சகர்கள் ஓரிரண்டு முக்கியப் புள்ளிகளைக் கவனிக்கத் தவறுகிறார்களோ என்று தோன்றுகிறது.

சிக்கல்கள் அதிகரிக்க அதிகரிக்க, பெருகிவரும் இந்த நெருக்கடியிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற வேண்டுகோள்கள்தான் மோடியை நோக்கி விடுக்கப்படுகின்றன. ஊடகங்களில் அந்த வேண்டுகோள்கள்தான் இடம்பெறுகின்றன. ஆனால் மோடி ஒரு காவிய அமைதியைக் காத்துவருகிறார். அதில் புராணப் புதிர் போன்ற உத்தி இருக்கிறது.
தற்செயல் நிகழ்வாக வந்ததல்ல தற்போதைய பொதுவான சிக்கல்கள். இதன் மறுமுனை என்னவென்றால் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்படுவதுதான். மோடியின் மௌனம், அவர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சரிப்படுத்த அதிரடியாக ஏதோ செய்துகொண்டிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. தன்னால் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியும், அதன் விளைவுகளைச் சந்திக்க முடியும் என்று காட்டுவதற்கு எடுத்துவைத்த முதலடிதான் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.

நாட்டின் வேறு எந்த பிரதமரையும் விட மிக அதிகமாக இடையறாமல் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், இந்தப் புதிரான எதிர்பார்ப்பை மேலும் தீட்டிவிடுகின்றன. இந்தப் பயணங்களின் விளைவுகள் இனி வரும் நாட்களில்தான், உலக அளவிலான முதலீடுகள் எந்த அளவுக்குப் பாய்கின்றன, உலக அரசியலில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்கும், உலக அரங்கில் இந்தியாவின் தோற்றம் எப்படிப் பொலிவு பெறும் என்பதையெல்லாம் பொறுத்துத் தெரியவரும்.
மேலும் திட்டவட்டமாகச் சொல்வதானால், இந்தப் புதிரான எதிர்பார்ப்பு ‘புதிய இந்தியா’, ‘தொலைநோக்கு – 2022’ என்றெல்லாம் கட்டமைக்கப்படுவதோடு சேர்த்துக் கட்டிப்போடப்பட்டிருக்கிறது.

அந்த 2022 என்ற தொலைநோக்கு அவரது அடுத்த சுற்றுப் பதவிக்கான நோக்கத்திலிருந்து புறப்பட்டதல்ல, அத்துடன் முடிந்துபோகப் போவதுமல்ல என்று காட்டப்படுகிறது. அதெல்லாம் உண்மையான இலக்குகள், நம்பகமான இலக்குகள், தேர்தல் பிரச்சாரத்துடன் சம்பந்தப்படாத இலக்குகள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அதற்காகவே, இரண்டு தேர்தல்களுக்கு நடுவில் உள்ள ஒரு ஆண்டு முன்வைக்கப்படுகிறது. இன்று போடப்படும்  அடித்தளங்கள் அடுத்த சுற்றுப் பதவிக் காலத்தில் பலனளிக்கும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது.
ஆகவே, 2022க்குள் வறுமையை ஒழிப்பேன், ஒவ்வொருவருக்கும் வீடு கொடுப்பேன், அதற்கெல்லாம் மேலும் செய்வேன் என்றெல்லாம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பைக்கூட மோடி தவற விடுவதில்லை. மணிப்பூர் மாநிலத்தின் ‘கடைசி கிராமம்’  (அதாவது மிகத் தொலைவான, ஒதுங்கிய கிராமம் என்று அர்த்தம்) உள்பட நாட்டின் எல்லாக் கிராமங்களுக்கும் வெற்றிகரமாக மின்சார இணைப்புக் கொடுத்துவிட்டதாக அவர் சொல்லிக்கொள்வதில், அவரது இந்த உத்தி எடுபடுவதை உணரலாம்.
மோடியின் திறன்களைச் சுற்றிப் பல மாயப் புதிர்கள் சூழ்ந்திருக்கின்றன என்றாலும்கூட, இவை அவரது தொடக்க நிலை வெற்றிகள்தான்.
அஜய் குடாவர்த்தி
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/narendra-modi-rafale-metoo-cbi

கருத்துகள் இல்லை: