புதன், 31 அக்டோபர், 2018

காலை ஒருமணி நேரம், இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் - தமிழகத்தில் தீபாவளி..புதிய உத்தரவு

தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரம், இரவு ஒருமணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் - புதிய உத்தரவு
மாலைமலர் :தமிழகத்தில் தீபாவளியன்று காலை
ஒருமணி நேரமும், இரவு ஒருமணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி: தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுவதாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.< இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவு பெற்றது. கடந்த 23-ந்தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

சுப்ரீம்கோர்ட்டு இரவு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தமிழக மக்கள் தங்களுக்கு இருக்கும் பட்டாசு வெடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். மேலும் இரவில் 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கும் நிலை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் அதிகளவில் புகை மாசு ஏற்பட வழி ஏற்பட்டு விடும்.

எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிகாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு கூறி இருந்தது.

தமிழக அரசின் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடத்தப்பட்டது.

நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கும்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். நீதிபதிகளின் தீர்ப்பு விவரம் வருமாறு:-

தீபாவளி பண்டிகை தென் மாநிலங்களில் ஒரு நேரத்திலும், வட மாநிலங்களில் மற்றொரு நேரத்திலும் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்பதில் கோர்ட்டு தெளிவாக உள்ளது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அந்த 2 மணி நேரத்தை தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அம்மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ அனைவரது கருத்துக்களையும் கேட்டு அறிந்தபிறகு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து சட்ட நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று அல்லது நாளை பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.



இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று பட்டாசு வெடிப்பதற்கான புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று காலையில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கான நேரம் வரையறுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

ஆனால் காலை 1 மணி நேரம்,இரவு 1 மணி நேரம் என்பது நாங்கள் சொல்லும் அறிவுரைதான். எனவே தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அம்மாநில அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

நேரத்தை எப்படி மாற்றிக்கொண்டாலும் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. இந்த நேர ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதியாக உள்ளது.

தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கலெக்டர்கள் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

விதிகளை யாரும் மீறக் கூடாது. அப்படி மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பட்டாசு பிரியர்களிடம் மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தன்று 2 மணி நேரத்திற்குதான் பட்டாசு வெடிக்க முடியுமா? என்று பெரும்பாலானவர்கள் ஆதங்கத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் இரவில் 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தற்போதைய புதிய உத்தரவில் கட்டுப்பாடு வந்துள்ளது. கடந்த 23-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தபோது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று கூறி இருந்தது.

ஆனால் இன்று வெளியிட்டப்பட்ட புதிய உத்தரவில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக தீபாவளி தினத்தன்று இரவில் 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை ஜாலியாக பட்டாசு வெடிப்பார்கள். ஆனால் சுப்ரீம்கோர்ட்டின் புதிய உத்தரவால் தீபாவளி அன்று இரவு ஒரே ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அவகாசம் வெற்றி பெறுமா? என்பதற்கு தீபாவளி இரவுதான் விடை சொல்லும்.

கருத்துகள் இல்லை: