சனி, 3 நவம்பர், 2018

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!
மின்னம்பலம்: தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசைக் கண்டித்து கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதிமுக என்ற கொள்ளையனிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உண்டு.
அதன் துவக்கம்தான் இந்த ஆர்ப்பாட்டம். ஆட்சியை ஏற்படுத்திய தமிழக மக்கள் வேதனையின் விளிம்பில் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஊழல் கறைபடிந்திருக்கும் ஒரு அமைச்சரவை இருக்கிறதென்றால் அது எடப்பாடி தலைமையிலான இந்த அமைச்சரவைதான். ஊழல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் முதல்வர் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று (நவம்பர் 3) அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 499, 500 (தமிழக அரசு மீது ஆதாரம் இல்லாமல் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அரசு வழக்கறிஞர் தனசேகரன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து தனசேகரன், முதல்வரைப் பேடி என்றும், அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார். இது அரசு, அமைச்சர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அனுமதி பெற்று வழக்கு தொடரப்பட்டது என்று கூறியுள்ளார்.
இதுபோன்று தமிழகஅரசையும் முதல்வர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக ஸ்டாலின் மீது அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் ஜூலை 11ஆம் தேதி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: