வெள்ளி, 2 நவம்பர், 2018

ரஃபேல் ஒப்பந்தமும் அவதூறு வழக்குகளும்!

மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத்  தீர்மானம் மீதான விவாதம் கடந்த ஜூலை 20ஆம் தேதி நடைபெற்றது. இதில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடி தேசத்திடம் பொய் கூறுகிறார். விமான கொள்முதல் மதிப்பை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது; பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நாம் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

பிரதமருக்கும் தொழில் அதிபர்களுக்கும் உள்ள பந்தம் குறித்து அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் ரூ.45 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார். தன் வாழ்நாளில் ஒரு விமானத்தைக்கூட அந்தத் தொழிலதிபர் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடம் இருந்து ஏன் இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று நீண்ட உரையை நிகழ்த்தினார். அதன் பின்னர்தான் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனமோ, தங்களுக்கு எதிரான விமர்சனங்களை அவதூறு வழக்கைக் கொண்டு நசுக்கப் பார்க்கிறது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் மீது ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து வருகிறது.
அவதூறு வழக்குகள்
என்டிடிவி, தி சிட்டிசன் மற்றும் தி நேஷனல் ஹெரால்ட் ஆகிய ஊடகங்களிடம் நஷ்ட ஈடு கேட்டு அகமதாபாத் சிவில் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ரிலையன்ஸ் கேட்டுள்ள நஷ்ட ஈடு தொகையின் மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி ஆகும். (என்டிடிவி - ரூ.10 ஆயிரம் கோடி, தி நேஷனல் ஹெரால்ட் - ரூ,5 ஆயிரம் கோடி, தி சிட்டிசன் - ரூ.7 ஆயிரம் கோடி)
இது தவிர தனிநபர்கள் மீதும் நஷ்ட ஈடு கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.72 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு பல்வேறு வழக்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்துள்ளது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸ் லிமிடெட்டின் நிகர மதிப்பை விட அதிகமான தொகை நஷ்ட ஈடாகக் கேட்கப்பட்டுள்ளது.
என்டிடிவிக்கு எதிராகத் தொடர்ந்துள்ள மனுவில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக, அந்நிறுவனம் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் அடிப்படை ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகள் டிஆர்பிக்காகச் சேர்க்கப்பட்டுள்ளதாகப் புகார் கூறியுள்ளது.
அகமதாபாத் ஏன்?
நிகழ்ச்சி டெல்லியில் உள்ள என்டிடிவி ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்ட நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாமல், அகமதாபாத் நீதிமன்றத்தில் ஏன் ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
என்டிடிவிக்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்துள்ள மனுவில், 'என்டிடிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சி இணையம் வழியாக அகமதாபாத்திலும் கிடைக்கப்பட்டுள்ளது.
மின்னணு ஆதாரம் என்ற வரம்பின் கீழ் நிகழ்ச்சி வருகிறது. அகமதாபாத் நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது' என்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
இந்த இடத்தில், மாதவன் நாயருக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நாம் கவனிக்க வேண்டும். இணையம் மூலம் ஒரு தகவல் கிடைக்கிறது என்பதாலேயே ஒரு வழக்கின் மேல் எந்த நீதிமன்றத்துக்கும் அதிகார வரம்பு உள்ளதாகக் கருத முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அகமதாபாத்தில் வழக்கை தாக்கல் செய்வதற்கு மிகவும் பொருத்தமான காரணத்தை குஜராத் நீதிமன்றக் கட்டண சட்டம் 2004 இல் காணலாம்.
வழக்கமாக, மான நஷ்ட வழக்கில், கோரப்படும் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் நீதிமன்றக் கட்டணமாக வசூலிக்கப்படும். சேதத்தை மிகைப்படுத்தி கூறுவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது.
ஆனால், குஜராத் நீதிமன்றக் கட்டண சட்டம் 2004இன்படி மானநஷ்ட வழக்குக்கான அதிகப்படியான கட்டணம் ரூ.75 ஆயிரம் மட்டுமே. அதனால்தான் பெரும்பாலான அவதூறு வழக்குகள் அகமதாபாத் நீதிமன்றத்திலேயே தொடரப்படுகிறது. அகமதாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு முக்கியமான அவதூறு வழக்கு தி வயர் ஊடகத்திடம் ரூ.100 கோடி கேட்டு அமித் ஷா மகன் ஜே ஷா தொடர்ந்த வழக்கு ஆகும்.
தமிழகத்தில் நகர சிவில் நீதிமன்றத்தில் ரூ.25 லட்சம் வரை கேட்டு மட்டுமே அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மேலான தொகை என்றால், உயர் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும். மேலும், என்டிடிவிக்கு எதிரான இதே தொகையை கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் கட்டணமாக ரூ.100 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
- மா. முருகேஷ்
ஆதாரங்கள்:
https://scroll.in/article/899162/from-anil-ambani-to-jay-shah-why-do-indias-rich-and-powerful-go-to-ahmedabad-to-sue-their-critics
https://barandbench.com/debriefed-reliance-infrastructures-22000-crore-defamation-juggernaut-against-the-media/

கருத்துகள் இல்லை: