திங்கள், 29 அக்டோபர், 2018

BBC :படேல் சிலை ரூ.3000 கோடி - குஜராத் விவசாயிகள் கோபம்


உலகின் மிக உயரமான சிலையானது இந்தியாவில் அக்டோபர் 31ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு 3000 கோடி ரூபாய். இதுகுறித்து பிபிசி குஜராத்தியின் ராக்ஸி கக்டேகர் அங்கிருக்கும் விவசாயிகளுடன் பேசினார். தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் ஒரு சிலைக்காக பல கோடி ரூபாய் செலவிடுவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். குஜராத்தை சேர்ந்த 39 வயதான விவசாயி விஜேந்திர தட்வி, தனது 3 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.
மிளகாய், சோளம் மற்றும் கடலை ஆகியவற்றை பயிறுடும் இவர், தண்ணீருக்கு மற்ற விவசாயிகளை போல பருவ மழையையே நம்பியிருக்கிறார். அல்லது நிலத்தடி நீரை பம்ப் மூலமாக பயன்படுத்துவார். ஆனால், மழையை தொடர்ந்து வரும் நீண்ட வறண்ட கோடைக்காலம், வறட்சியை ஏற்படுத்தி, தட்வி போன்ற விவசாயிகளின் வருமானத்தை குறைத்துவிடுகிறது.

அதனால், தன் வருமானத்தை அதிகரிக்க, ஒரு கட்டுமான தளத்தில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் தட்வி. 182 மீட்டர் (600 அடி) உயரம் கொண்ட சிலையை குஜராத் மாநில அரசு கட்டி வந்தது. இதுவே உலகின் உயரமான சிலை என்று கூறப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுமார் 3,000 கோடி ரூபாய் செலவில் வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதிக்கும் மேற்பட்ட செலவினை குஜராத் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள செலவு மத்திய அரசு அல்லது பொது நன்கொடையினில் இருந்து பெறப்பட்டது. re> "ஒரு பெரிய சிலைக்கு செலவு செய்ததிற்கு பதிலாக, விவசாயிகளுக்காக அரசு செலவழித்திருக்கலாம்" என்கிறார் தட்வி. மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலருக்கும் அடிப்படை நீர்ப்பாசன வசதிகள்கூட இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சிலை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. "ஒற்றுமைக்கான சிலை" என்று அறியப்படும் இது, பட்டேலின் நினைவுச்சின்னமாக நிற்கும்.
வல்லமைமிக்க தேசியவாத தலைவரான சர்தார் பட்டேல், குஜராத்தில் பிறந்தவர். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தார் பட்டேல்.
2010ஆம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, இந்த சிலை செய்வதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோதி முன்னெடுத்தார். பட்டேலின் பெருமைகளை போற்ற பல ஆண்டுகளாக முயற்சி எடுத்துவரும் ஆளும் பா.ஜ.க., நேருவின் வாரிசுகளுக்கு உதவும் வகையில், பட்டேலின் பெருமைகளை காங்கிரஸ் ஒதுக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டியது.re>இந்தியா சுதந்திரம் பெற்ற 71 ஆண்டுகளில், 49 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்தது.
பட்டேலின் நினைவுச்சின்னம் தொர்பான திட்டத்தில், அங்கு 3-ஸ்டார் ஹோட்டல், அருங்காட்சியம் மற்றும் அவருக்கு நெருக்கமான விஷயங்கள், அதாவது "நல்லாட்சி" மற்றும் "விவசாய வளர்ச்சி" ஆகிய பாடங்களில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மையம் அமைப்பதும் அடங்கும்.
இவை அனைத்தும் உள்ளது தட்வி வசிக்கும் நானா பிபலியா கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில். இந்த கிராமம் பெரும்பாலும் ஏழை மக்கள், கிராமப்புற மற்றும் பழங்குடியினர் வாழும் நர்மதா மாவட்டத்தில் உள்ளது.
2016ஆம் ஆண்டு மாநில அரசாங்கத்தின் அறிக்கைப்படி, அங்கு பலரும் பட்டினியில் வாழ்கின்றனர். ஆரம்பப்பள்ளி சேர்க்கை வீழ்ச்சியில் உள்ளதோடு, ஊட்டச்சத்து குறைபாடும் தொடர்கிறது. ஆனால், இந்த சிலை அமைத்துள்ளது மாவட்ட பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. ஏனெனில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இதனால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, அப்பகுதியில் சுற்றுலாவாசிகளின் வருகையும் அதிகரிக்கும்" என்கிறார் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி சந்தீப் குமார்.
ஆனால், உள்ளூர்வாசிகளுக்கு இதில் நம்பிக்கை இல்லை. "விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஒரு தொகையை ஒதுக்கி அரசாங்கம் ஏன் திட்டம் அமைக்கவில்லை" என கேள்வி எழுப்புகிறார் பழங்குடியின ஆர்வலரான லக்கன். "பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்கள், ஆனால் இன்றும் அதே நிலைதான் உள்ளது" என்கிறார்.
நானா பிபலியா கிராமத்தின் அருகில் அணை இருப்பதால், பாசனத்திற்கு அவர்கள் அங்கிருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தானும் அங்குள்ள மற்ற விவசாயிகளும், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக தட்வி கூறுகிறார்.
"நான் ஒரே ஒரு பயிர்தான் வளர்க்கிறேன். பாசன வசதிகள் இருக்கும் விவசாயிகள் மூன்று பயிர்கள் வரை வளர்க்கிறார்கள்" என்று கூறும் போலா தட்வி, பாசனத்திற்காக மழைநீரை மட்டுமே நம்பியிருக்கிறார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, அம்மாவட்டத்தின் 85 சதவீத மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு நீர் கிடைக்கப்பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என பிபிசி குஜராத்தியிடம் பேசிய மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், லக்கன் கூறுகையில், நீர் இல்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவதிப்படுவதாக கூறுகிறார். இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிபேர் வயல்வெளிகளில் வேலை பார்க்கிறார்கள். ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 15 சதவீதம் மட்டுமே.
இந்தியாவில் விவசாய வளர்ச்சி 1.2 சதவீதம் நலிவடைந்துள்ளது. விவசாயத்தில் பல ஊழியர்கள் வேலை செய்தாலும், அதன் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிர்கடன்களை கட்டவே போராடி வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களின் விவசாயிகள் அவர்கள் படும் அவதிகளை வெளிப்படுத்த, மண்டை ஓடுகளை மாலையாக அணிவித்துக் கொண்டும், எலியை கடித்தும் பலதரப்பினரது கவனத்தை ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: