ஒட்டு மொத்த ஊரே போராட்டக் களத்தில் இருக்கும்போது நீங்கள் ஏன் அங்குச் செல்லவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பிலிருந்து பின்வாங்குகிறீர்களா?
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 1998-ல், நான் போட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நானே வாதிட்டேன். ஏழு நாட்கள் நடந்த விசாரணையில் ஏழு மணி நேரம் வாதாடினேன். அப்போது நீதிபதிகளே வியந்து பாராட்டினார்கள். ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படவேண்டும் என்பது என் உறுதியான முடிவுகளில் ஒன்று. அதை ஒருபோதும் மாற்ற இயலாது. 2013-ல், விஷப்புகை தாக்கியபோதே மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டது. இப்போது மக்கள் வெகுண்டெழுந்துவிட்டார்கள். இதை இன்னும் கொதிநிலைக்கு கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைத் திட்டமிட்டுச் செய்வேன். இப்போது நியூட்ரினோ எதிர்ப்புப் பணிகளில் உள்ளதால் விரைவில் களத்தில் இறங்குவேன்.
ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியக் காலம் தொட்டே எதிர்க்கிறீர்கள், என்ன காரணம்?
ஸ்டெர்லைட் ஆலைக்கு குஜராத், கோவா, மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாகத்தான் அது தூத்துக்குடிக்கு வந்தது. அமெரிக்காவில் தாமிர உருக்காலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கடைசி வரை சரிசெய்ய முடியவில்லை. இதை அறிந்தவன் என்பதால் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறேன். ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடி நகரமே நச்சுக்காற்றால் மூழ்கும் என்பதால் எதிர்க்கிறேன். ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடி, நோயாளிகளின் கூடாரமாக மாறும் என்பதால் எதிர்க்கிறேன்.
தமிழகத்தில் மட்டும் ஸ்டெர்லைட்டுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?
பொதுவாக நான் மறைந்தத் தலைவர்களைக் குறை சொல்வதில்லை. இப்போது பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளதால் பின்னணியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. 1994-ல், மகாராஷ்டிராவில் விரட்டியடிக்கப்பட்ட இரண்டே வாரத்தில் ஸ்டெர்லைட்டை விதிமுறைகளை மீறி தமிழகத்தில் அனுமதித்தார் ஜெயலலிதா. பாதுகாக்கப்பட்ட தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவின் 25 கிலோமீட்டருக்குள் மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகளை நிறுவக்கூடாது என்பது கட்டாய விதி. இதைக் காலில் போட்டு நசுக்கியிருக்கிறது ஸ்டெர்லைட். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கிலும் அதிமுக அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. போதாத குறைக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ‘ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்பு இல்லை’ என்றே கூறியது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி தூத்துக்குடியில் நச்சுப்புகை பரவி பலரும் மயங்கினர். மக்களோடு சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தினேன். வேறுவழியில்லாமல் ஆலையை மூட உத்தரவிட்டார் ஜெயலலிதா. ஆனால் ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துவிட்டது.
நீதிமன்றங்களின் மூலம் ஸ்டெர்லைட், தடைகளை உடைத்து வருகிறதே?
என்ன செய்வது, இந்தியாவில் அவ்வப்போது நீதிமன்றங்களாலேயே நீதி அழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்தானே. 2010, செப்டம்பர் 28-ம் தேதி ஸ்டெர்லைட்டை முழுமையாக மூட, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கினோம். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் அதற்கு இடைக்காலத் தடை வாங்கியது ஸ்டெர்லைட். 2013-லும் இதேதான் நடந்தது.
ஸ்டெர்லைட் உங்களுக்கும் குடைச்சல் கொடுத்திருப்பார்கள்தானே? ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் பலமுறை உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். நான்கு முறை கைதுசெய்யப்பட்டிருக்கிறேன். வைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிவரை நடைப்பயணம் சென்றிருக்கிறேன். ஒருமுறை மறியலின்போது பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். அன்றிரவு ஸ்டெர்லைட்டில் ஏற்பட்ட விபத்தில் இரு தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஆலை நிர்வாகம் ‘வைகோ விடுதலைப் புலிகளை வைத்து இரண்டு பேரைக் கொலைசெய்துவிட்டார்’ என்று கிளப்பிவிட்டது. அதன் பின்னரே நீதிமன்றங்கள் மூலம் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தேன்.
> உங்களிடம் ஸ்டெர்லைட் தரப்பு பேசியிருக்கிறதா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்த காலத்தில், ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் என்னைச் சந்திக்க, பல வழிகளிலும் முயன்றார். அட்டர்னி ஜெனரல் ஜி.ராமசாமி மூலமாகவும் முயற்சிசெய்தார்கள். ‘ஒருபோதும் அவரை நான் சந்திக்க மாட்டேன்’ என்று மறுத்துவிட்டேன்.
ஸ்டெர்லைட் தரப்பில், ‘ஆலை விரிவாக்கத்தால் பாதிப்பும் இல்லை, இதனால் இருபதாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்’ என்று சொல்லப்படுவது குறித்து..? மக்களின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் கேடு விளைவித்துவிட்டு வேலைவாய்ப்பு வேஷம் போடுவதா? அங்கு வேலைசெய்யும் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சுற்றுவட்டா ரங்களில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நுரையீரல் பாதிப்பும் பெருகியுள்ளது. நாட்டுக்குத் தேவை எனக் காரணம் காட்டி, மக்களை வதைப்பது வளர்ச்சி அல்ல; அது அழிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக