வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆசிபா (8) வழக்கு: எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

மின்னம்பலம்: கத்துவா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முயன்றபோது தடுத்த
வழக்கறிஞர்களுக்கு எதிராக சூ மோட்டோ வழக்கு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு இந்த விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அரசு அதிகாரி, காவல் துறை அதிகாரி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்களன்று கைதான 8 பேர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கத்துவா நீதிமன்றத்துக்கு குற்றவியல் துறையினர் சென்றனர். அப்போது, பாஜக ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு எதிராக நீதிமன்ற வாசலில் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளை நீதிமன்றத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.
காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தும் போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கத்துவா வழக்கு: எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!அதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் பாதுகாப்புடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நேற்று நடத்தப்பட்ட போராட்டங்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் சௌத்ரி லால் சிங், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சாந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் பி.வி.தினேஷ், “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் மீது தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து சூ மோட்டோ வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்,
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராவதையும் கத்துவா பார் கவுன்சில் தடுத்தது என்று வழக்கறிஞர் பி.வி.தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் சந்திரசூட் அமர்வு, எதிர்த்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு ஆதாரத்துடன் மனு தாக்கல் செய்தால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும், அப்படி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தாலும் ஆதாரம் தேவை என்றும் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: