செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஐ.பி.எல்: தமிழன் காவிரி அணி வெற்றி! சென்னை மீண்டும் குலுங்குகிறது ....

ஐ.பி.எல்: தமிழன் காவிரி அணி வெற்றி!

மின்னம்பலம் :எப்போதுமே சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்த பிறகே லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படும் ஆனால் இன்று (ஏப்ரல் 10) போட்டி ஆரம்பிப்பதற்கு பலமணி நேரம் முன்பே ஆட்டத்துக்கு எதிரான, போராட்டத்தை ஒளிபரப்புவதற்காக சேப்பாக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் ஆரம்பித்துவிட்டது...
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்றும், விளையாட்டை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்தார் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா.
இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று இரவு எட்டு மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதோடு, ரசிகர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை போட்டது சேப்பாக்கம் மைதான நிர்வாகம். இதனைத் தொடர்ந்து மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கருப்பு சட்டை அணிந்து எவர் வந்தாலும் அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து விரட்டும் பணியிலே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
;பூட்டு போட்டு தொடங்கி வைப்பு...
இந்நிலையில் காலை 11 மணியளவில் சேப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தனித் தனியாக வந்து மைதானம் அருகே ஒன்றுகூடிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் மைதானத்தின் ஒரு பகுதி நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய அவர்கள், ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் முழங்கினர். ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக என்று அச்சிடப்பட்ட கருப்பு பலூனை மைதானம் பகுதியில் பறக்க விட்டனர். இதேபோல வாலாஜா சாலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரவைத்த மாலை

மாலை 4மணிக்கு மேல் சேப்பாக்கத்தை ஒட்டியுள்ள அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகள் மெல்ல மெல்ல போராட்டக் களமாக மாற ஆரம்பித்தன. சென்னை, அண்ணா சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஐபிஎல் போட்டிக்கு எதிராக மறியல் செய்தனர். அப்போது ஐபிஎல் டிக்கெட் நகல்களை தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸார் அவற்றை கைப்பற்ற முயன்றதால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விசிக போராட்டம்
இதே நேரம், வாலாஜா-பெல்ஸ் சாலை சந்திப்பில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ஷா நவாஸ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திரளாகத் திரண்ட சிறுத்தைகள் ஊர்வலமாக மைதானம் நோக்கி முன்னேற போலீஸார் அவர்களை நோக்கிப் பாய்ந்து தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் சாலையிலேயே அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
முடங்கியது அண்ணா சாலை
இவர்களைப் போல பல்வேறு குழுக்களாக போராடிய பல்வேறு அமைப்புகளும் 5மணியளவில் அண்ணா- வாலாஜா சாலைகள் பிரியும் அண்ணா சிலை பகுதியில் ஒன்றுதிரண்டு ஒரே குழுவாக ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தன. அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இவ்விடத்திலிருந்து படிப்படியாக சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி முன்னேறும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். ஆனாலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பல்வேறு குழுக்களாகத் திரண்டு வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர்கள் வ.கவுதமன், ராம், வெற்றிமாறன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். பாரதிராஜா கூறுகையில், "தமிழர்கள் கண்ணியமான முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் அல்ல. காவிரி மேலாண்மை வாரியத்திற்கான போராட்டம். காவல்துறை அனுமதி பெற்று அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து, “காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஸ்கீம் என்றாலும் ஒன்றுதான். கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் அல்ல. காவிரிக்கு ஆதரவான போராட்டம் நீதிகேட்டுப் போராடவே நாங்கள் வீதிக்கு வந்தோம்” என்று தெரிவித்தார்.
சீமான் பேசுகையில், "ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களும், போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கைதான பாரதிராஜா
போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதி ராஜா, அமீர், சீமான், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மைதானத்திற்கு அருகே நடிகர் கருணாஸ் தலைமையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் ஆடைகளை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைதானம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களும் பத்திரிகையாளர்களும் காயமடைந்தனர். போட்டியை பார்வையிடச் செல்லும் ரசிகர்களுக்கு மைதானத்திற்கு வெளியே கறுப்புப் பட்டை விநியோகித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புறவாசல் வழியாக புறப்பட்ட வீரர்கள்

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கிரவுன் பிளாசா ஹோட்டலில்தான் இன்று போட்டியில் ஈடுபடும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு தகவல் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மைதானத்துக்கு பேருந்தில் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. ஹோட்டல் வாசலிலும் போராட்டக் குழுவினர் திடீரெனக் கூடலாம் என்று தகவல் கிடைத்ததால்.. ஹோட்டலின் பின்பக்க வாசல் வழியாக வீரர்கள் ரகசியமாக சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்டனர். இதுவே போராட்டக் குழுவினருக்கு முதல் வெற்றியானது. மாலை 5.30 அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் டிரைடர்ஸ் அணி வீரர்கள் கிளம்பி 5.50 மணியளவில் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.
காலியான மைதானம்!

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி பல்வேறு திசைகளில் இருந்து ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் 8மணிக்குப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், 40 ஆயிரம் பேர் அமர்ந்து காணக்கூடிய மைதானத்தின் கேலரிகளில் இன்று மாலை 7 மணி வரை சில நூறு ரசிகர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் போராட்டக்கார்கள் நிறைந்து காட்சியளிக்கின்றது.
"வேண்டும் வேண்டும்" "காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பியும் வருகின்றனர். சோறா, ஸ்கோரா என்ற குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மாலை 7 மணி நிலவரப்படி ஐ.பி.எல்.லுக்கு எதிரான போட்டியில் தமிழனின் காவிரி அணி முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது!

கருத்துகள் இல்லை: