‘என்ன ஏதோ அந்தக் காலத்து லாட்டரி விற்பனை செய்யும் வண்டியில் கேட்ட குரல் மாதிரி இருக்கு..?’ என்று கமெண்ட் அடித்தது ஃபேஸ்புக்.
வாட்ஸ் அப்பில் அடுத்த மெசேஜ் தடதடத்தது. “சொல்றேன். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக துணை முதல்வரைச் சந்தித்திருக்கிறார் லாட்டரியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு நபர்.
பன்னீருடன் சாதாரணமாகப் பேச ஆரம்பித்த அந்த நபர், ‘தமிழ்நாட்டுல மறுபடியும் லாட்டரிச் சீட்டைக் கொண்டுவந்தால் என்ன சார்?’ என கேட்டாராம். அதற்கு பன்னீர், ‘அதெல்லாம் நடக்கிற காரியமா?’ என சிரித்திருக்கிறார். நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார் அந்த லாட்டரி அதிபர்.
‘ஏன் நடக்காதுன்னு நினைக்கிறீங்க. லாட்டரி மட்டும் தமிழ்நாட்டுல மறுபடியும் வந்தால் வருஷம் 40 ஆயிரம் கோடி அரசுக்கு லாபம் வரும். ஏற்கெனவே உங்களுக்கு டாஸ்மாக்ல 23 ஆயிரம் கோடி வருமானம் வருது. லாட்டரியில அதைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். லாட்டரி விற்பனை தொடங்கிட்டால் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அரசாங்கத்தை யாரும் எதுவும் சொல்ல முடியாது. இதை ஆரம்பத்துல எதிர்க்கிறவங்க எதித்துட்டுதான் இருப்பாங்க. அதையெல்லாம் காதுல வாங்கிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவுல மற்ற சில மாநிலங்களிலும் நான் பேசியிருக்கேன். டெல்லியில் உள்ள பிஜேபியின் முக்கிய தலைவர் மூலமாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் லாட்டரி கொண்டு வர அவங்க ஓகே சொல்லிட்டாங்க. சீக்கிரமே பைனல் ஆகிடும். எனக்கு மற்ற மாநிலங்களை விட நம்ம தமிழ்நாடுதான் முக்கியம்... நீங்கதான் இதை எடப்பாடி அண்ணன்கிட்ட பேசணும்..’ என்று சொன்னாராம்.
பன்னீரோ நேராக அந்த லாட்டரி அதிபரை எடப்பாடியிடமே அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். எடப்பாடியிடம் இந்த லாட்டரி புராஜெக்டை விவரித்திருக்கிறார் லாட்டரி அதிபர். கவனமாகக் கேட்டுக்கொண்டாராம் எடப்பாடி. ‘நீங்க சொல்றபடி லாபம் வருது என்பது நல்ல விஷயம்தான். எதிர்ப்புகளை சமாளிச்சுடலாம். அதுல எதுவும் பிரச்னை இல்லை. ஆனால், பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று சொல்வாங்களே..’ என கேட்டிருக்கிறார் எடப்பாடி.
அதற்கு லாட்டரி அதிபர், ‘யாரையும் போய் லாட்டரி சீட்டு வாங்குங்கன்னு நாம கட்டாயப்படுத்த போறது கிடையாது. விருப்பம் இருக்கிறவங்க வாங்கப் போறாங்க. ஏழையைக்கூட ஒரே நாளில் லட்சாதிபதியாக மாற்றக்கூடியது லாட்டரிதான். டாஸ்மாக் கடையில அதிகம் விழுந்து கிடப்பது ஆண்கள்தான். லாட்டரி அப்படி இல்லை. பெண்கள்கூட லாட்டரி வாங்குவாங்க. பூ விற்கிற பெண்கள் தொடங்கி, வேலைக்குப் போற பெண்கள் வரைக்கும் லாட்டரி வாங்கியதை நானே பார்த்திருக்கிறேன். இது ஒரு அதிர்ஷ்டப் போட்டி மாதிரிதானே... எல்லாத்துலயும் ஆபத்துகள் இருக்கும். 50 ரூபா கொடுத்து ஒரு லாட்டரி வாங்குறதால என்ன குடி முழுகிடப் போகுதா? அரசாங்கத்தோட வருமானத்துக்குதான் நான் வழி சொல்றேன்’ என்றாராம்.
சில அதிகாரிகளையும் அழைத்து எடப்பாடி இது சம்பந்தமாகப் பேசியிருக்கிறார். பிறகு, எந்த மாநிலங்களில் எல்லாம் லாட்டரிக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார்கள் என்றும் விசாரித்தாராம். அது மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள பிஜேபி தலைவர்கள் சிலருடனும் இது சம்பந்தமாக எடப்பாடி பேசியிருக்கிறார்.
அதன் பிறகு அந்த லாட்டரி அதிபரை மறுபடியும் கூப்பிட்டுப் பேசிய எடப்பாடி, ‘ நீங்க சொல்றது சரின்னுதான் படுது. நானும் டெல்லியில் பேசியிருக்கேன். கூடிய சீக்கிரமே நல்லது நடக்கும். பார்த்துக்கலாம்!’ என்று சொல்லி அனுப்பினாராம். முதல்வரின் பதிலைக் கேட்டு செம ஹேப்பியாக இருக்கிறாராம் லாட்டரி அதிபர். ‘சீக்கிரமே தமிழ்நாட்டில் லாட்டரி வரப் போகுது. முதல்வர் ஓகே சொல்லிட்டாரு...’ என்று சொல்லி வருகிறராம் லாட்டரி அதிபர். ஆக, தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி என்பது உறுதியாகிவிட்டது” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘’குடிக்க வெச்சு மக்களை நாசப்படுத்தியதோடு இல்லாமல், லாட்டரியை மறுபடியும் கொண்டுவந்து குடும்பங்களை குட்டிச்சுவராக்காமல் ஓயப் போவதில்லை என முடிவெடுத்துவிட்டார்போல முதல்வர்!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக