புதன், 11 ஏப்ரல், 2018

சீமான் மீது கொலை முயற்சி வழக்கு: வலது கரத்தைத் தேடும் போலீஸ்!

சீமான் மீது கொலை முயற்சி வழக்கு: வலது கரத்தைத் தேடும் போலீஸ்!மின்னம்பலம்:  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரைக் கைதுசெய்து ரிமாண்ட் செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான போட்டி நடைபெற்றது.
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினர் எதிர்பார்க்காத அளவில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, விசிக போன்ற கட்சிகளும் அமைப்புகளும் இளைஞர்களும், அண்ணா சாலையிலும் ஸ்டேடியத்தைச் சுற்றியும் பல ஆயிரம் பேர் கூடினார்கள். ஒரு கட்டத்தில் தலைவர்களுடன் பேசி சுமார் 700 பேரைக் கைது செய்தது போலீஸ். அதில் முக்கியப் பிரமுகர்களை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்திருந்தனர், மற்றவர்களைப் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாகப் பூட்டிவைத்திருந்தார்கள் போலீஸார்.


காவல் துறையினரைத் தாக்கியதாக சீமான் ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீது 506 பிரிவு உட்பட எட்டுப் பிரிவுகளில் திருவல்லிக்கேணி டி-1 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து ரிமாண்டுக்கு அனுப்பியுள்ளார்கள்.

அதே காவல் நிலையத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்ற மைதானத்தில் காலணிகள் வீசி, கறுப்புக் கொடி காட்டியதற்கு 11பேர் மீது 506(1) பிரிவு உட்பட சில பிரிவுகளில் தனியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து ரிமாண்டுக்கு அனுப்பியுள்ளார்கள், மற்றவர்களை நேற்று இரவு 1.00 மணிக்கு விடுவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேரைச் சிறைக்கு அனுப்பியுள்ளது காவல் துறை.
தவிர, சீமானுடன் எப்போதும் இருக்கும் பாஸ்கர் என்பவரைக் கைது செய்வதற்குத் தனிப்படை அமைத்து ரகசியமாகத் தேடிவருகிறார்கள், அவர் போலீஸை கடுமையாகத் தாக்கிய காட்சிகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன.
‘பாஸ்கரைக் கைது செய்து, அவர் யாரை அடித்தாரோ அதே போலீஸை வைத்து பாஸ்கரை அடிக்க வைக்க வேண்டும்’ என்று போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காவல்துறை தாக்குதல்
இந்நிலையில் காவல்துறையும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறது. காவல்துறை நடத்திய தடியடியில் இயக்குனர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். மேலும் இயக்குனர் களஞ்சியம் தலைமையிலான தமிழர் நலப் பேரியக்கத்தின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் ரமேஷ் படுகாயமடைந்தார். அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடன் காயமடைந்த இயக்குனர் களஞ்சியமும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: