புதன், 18 அக்டோபர், 2017

மகாவீர் நிர்வாண் தினம் : இறைச்சி விற்க தடை!

மகாவீர் நிர்வாண் தினம் : இறைச்சி விற்க தடை!
மின்னம்பலம் : இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் ஜைன மதமும் ஒன்று. ஜைன மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர். பிற உயிர்களுக்கு தீங்கு அளிக்காத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் முக்கியமானதாக இருந்தது. கடவுள் உலகை படைத்தார் என்ற கருத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை. உலகம் இயற்கையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனிடத்தில் மறைந்து கிடக்கும் உயர்ந்த குணங்களும் நற்பண்புகளும்தான் கடவுள் என கூறினார். அவரை பின்பற்றி அவரது வழியில் நடப்போர் ஜைனர்கள் அல்லது சமணர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஜைன மதத்தில் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒன்று திகம்பரர்கள், மற்றொன்று ஸ்வேதாம்பரர்கள். திகம்பரர்கள் ஆடை அணியாமல் உடல் முழுவதும் திருநீறு பூசியபடி இருப்பார்கள். மகாவீரரின் பரிசுத்த நிர்வாணம் என்ற கொள்கையால் உடலில் ஆடை அணிவதை அவர்கள் நீக்கினார்கள்.
காற்றிலுள்ள கண்ணுக்கு தெரியாத அணுக்கள் சுவாசிக்கும்போது மூக்கின் வழியாகச் சென்று இறந்துவிடக் கூடும் என கருதி மூக்கில் மெல்லிய துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும். கால்களில் செருப்பு அணிந்தால் அது ஒரு உயிரின் மீதுபட்டுவிடும் என்பதால் காலனி அணிய கூடாது. இவ்வாறு உலக வரலாற்றில் தீவிர அகிம்சைக் கொள்கையை போதித்தவர் மகாவீரர்.
மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு நாளை (அக்டோபர் 19) இறைச்சிக் கூடங்களில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று ( அக்டோபர் 18) உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், “மகாவீர் நிர்வாண் நாளை முன்னிட்டு, நாளை (அக்டோபர் 19) சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பனை, பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: