செவ்வாய், 17 அக்டோபர், 2017

மோடி : ஜி.எஸ்.டியில் காங்கிரஸுக்கும் பங்கு!

மின்னம்பலம் : சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதில் காங்கிரஸ் கட்சிக்குச் சரிபாதி பங்கு உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்  தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. ராகுல் காந்தி தொடர்ந்து குஜராத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் . ஆளும்கட்சியான பாஜகவும் தங்களின் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான கெளரவ யாத்திரை குஜராத்தில் நடைபெற்றது.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி காந்தி நகரில் நேற்று (அக்.16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, “காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது தொண்டர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள் என எனக்குத் தெரியும். இப்போது எங்களை நீங்கள் பெருமையடைய செய்து உள்ளீர்கள். எல்லா பக்கமும் காவியைப் பார்க்கின்றேன். உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அரசியல் ஆய்வாளர்கள், எதிர்க்கட்சியினரை 2019 தேர்தலை விடுத்து 2024 தேர்தல் மீது கவனம் செலுத்துங்கள் என கேட்டுக் கொண்டனர்.

பாஜக தேசத்துக்குச் சேவை செய்வே உறுதிபூண்டு உள்ள ஒரே அமைப்பாகும். பொய்யைப் பரப்புவதிலேயே கவனம் செலுத்தும் கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி குஜராத் மாநிலம் மீது இரண்டாம்பட்ச நிலையே கொண்டிருந்தது. குஜராத் மாநிலம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களுடைய கட்சிக்கும் கண்ணுக்குள் முள்ளாக இருந்தது. அவர்கள் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் மொரார்ஜி தேசாய்க்கும் என்ன செய்தார்கள் என்பதை வரலாறு அறியும்.
திட்டங்களை முடிப்பது என்பது காங்கிரஸிடம் இயற்கையாகவே கிடையாது. 40 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். வளர்ச்சி திட்டங்களில் எங்களுடன் மோத காங்கிரஸுக்குச் சவால் விடுக்கிறேன். நேர்மறையாக எண்ணும் திறனை காங்கிரஸ் இழந்துவிட்டது. அதனால்தான் மதவாதம், சாதியம் மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்துவது போன்றவற்றை தேர்தல் ஆயுதமாக எடுத்துள்ளது
ஜி.எஸ்.டி. என்பது நான் ஒருவன் மட்டும் எடுத்த முடிவுல்ல. ஜி.எஸ்.டி. தொடர்பாக 30 கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸுக்கும் ஜி.எஸ்.டி. முடிவில் சரிபாதி பங்கு உள்ளது. அவர்கள் ஜி.எஸ்.டி. குறித்து பொய் பரப்பக் கூடாது. ஜி.எஸ்.டியில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஜி.எஸ்.டியில் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் பதிவு செய்து வருகிறார்கள். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் எந்த ஒரு சத்தமும் கிடையாது.
குஜராத் தேர்தலில் குடும்ப அரசியல் முடிவுக்கு வரும். காங்கிரஸின் எண்ணம் எல்லாம் ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதுதான். நாட்டைக் காப்பாற்ற கிடையாது. காங்கிரஸ் ஒருபோதும் வளர்ச்சிக்காகப் பணியாற்றியது கிடையாது. இந்தத் தேர்தல் வளர்ச்சிக்கும் வம்சத்துக்கும் இடையேயான சண்டை. இதில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெறாது” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: