விகடன் : "எப்படா படம் தயாரிக்கப் போகிறோம்'’ என்று வெளியிலில் இருப்பவர்களையும், ‘"ஏண்டா படம் தயாரிக்க வந்தோம்?'’ என்று உள்ளே இருப்பவர்களையும் எண்ண வைப்பது சினிமா. வெளியிலிருந்து பார்க்கும்போது கலர் கலராய்க் காட்டும் சினிமா, தொழில் என்று உள்ளே வந்தபின் கோவணத்தையும் உருவி விடுவதுதான் கொடுமை. தமிழ்நாட்டில் மொத்தம் 1070 தியேட்டர்கள் மட்டுமே இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் 2, 3, 5, 8, 10, 16 ஸ்கிரீன்கள் என்று இயங்கும் மால் மற்றும் மல்டி ப்ளக்ஸ் திரைகளும் அடக்கம்.
இந்தத் தியேட்டர்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. .பலாஸோ, ஐநாக்ஸ், சத்யம், லக்ஸ் போன்றவற்றிற்கு படத்தின் தரத்தைத் தாண்டி தியேட்டருக்காகவே கூட்டம் வரும். இவற்றில் 200-250 திரைகள் இருக்கும்.
2. தியேட்டருக்காகப் பாதி, படத்துக்காக மீதி கேட்டகிரி கமலா, தேவி போன்றவை. இந்த வகையில் 300-350 தேறும்.
3. சிறு நகரம் மற்றும் வளர்ந்த கிராமங்களில் இருக்கும் ஓரளவு நல்ல தியேட்டர்கள் 250-300. இந்த வகை தியேட்டர்களுக்குக் குடும்பங்களோ அல்லது இளைய தலைமுறைப் பெண்களோ விரும்பி வருவது கிடையாது. ஆனால் "தங்கல்', "பாகுபலி' மாதிரி நல்ல படங்கள் போட்டால் வந்து பார்த்துவிட்டுப் படத்தைப் பாராட்டி விட்டு, தியேட்டரைத் திட்டிவிட்டுச் செல்வார்கள்.
4. கடைசியாக வரும் 200-250 தியேட்டர்கள். எப்படி நடத்துவது என்று அவர்களுக்கும் தெரிவதில்லை. ஏன் அதில் படம் போடுகிறோம் என்று தயாரிப்பாளர்களுக்கும் தெரிவதில்லை.
முதல் இரண்டு வகை தியேட்டர்களில் கணினி டிக்கெட் உண்டு. ஓரளவு நல்ல கணக்கு வழக்கு உண்டு. எனவே தயாரிப்பாளர்களை ஏமாற்றுவது மிகக்குறைவு. என்ன.. பார்க்கிங், கேண்டீன் என்று அவர்கள் பெறும் கொள்ளை’ லாபத்தில் தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது. அடுத்த இரண்டு வகைகள் பெரும்பாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துபவை.
தயாரிப்பு பற்றி சொல்லப்போனால், பெருவாரியான புதிய மற்றும் ஓரளவு அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களுக்கு சரியான திட்டமிடுதலோ, பட்ஜெட்டுக்குள் படம் எடுக்கும் ஆற்றலோ, எடுத்த படத்தை எந்தெந்த வழிகளில் வெளியிட்டுக் காசு பார்ப்பது என்கிற ஞானமோ இருப்பதில்லை. எனவே, "தயாரிப்பில் அனாவசியச் செலவு' முதல் "படத்தை வெளியிட உதவி செய்கிறேன்' என்று வரும் இடைத்தரகர்களின் கையாடல் வரை தயாரிப்பாளர்களுக்கு இழப்புக்குமேல் இழப்பு வருகிறது.
ஒரு படத்தை...
-தியேட்டர் மூலம்
-பெரிய சேனல்கள் (அதிகபட்சம் 5 வருடங்கள்) மூலம்
-லோக்கல் சேனல் மற்றும் கேபிள் டி.வி. மூலம்
-ஆம்னி பஸ்களுக்கு உரிமை கொடுப்பது மூலம்
-அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹீரோ டாக்கீஸ் போன்ற இணையத் தளங்களில் படம் வெளியாகி மூன்று நாட்கள், ஒரு வாரத்தில் வெளியிடுவதன் மூலம்
-ஒரிஜினல் டிவிடி மூலம்
-டி.டி.எச். மூலம்
-வெளிநாட்டு உரிமையை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பிரித்து விற்பதன் மூலம்
-ஆண்ட்ராய்டு போனில் நேரடியாகக் கொடுப்பதன் மூலம்...
என்று சட்டபூர்வமாக சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு.
இதுபற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் ‘ஆடத்தெரியாத தயாரிப்பாளர்கள் "கூடம் கோணல்'’ என்று பழி போட்டு கோவணத்தோடு போய்ச் சேரும் காட்சி வாடிக்கை.
தட்டுத்தடுமாறி, விட்டுவிடாமல் தொட்டுத் தொடர்ந்துகொண்டிருந்த சினிமாத் தொழிலின் மேல் ‘ஜி.எஸ்.டி.’ பார்வை விழுந்தது. 28% மற்றும் 18% வரி. வாங்கிய அடி காணாது என்று கடப்பாரை கொண்டு சாத்தியது தமிழக அரசு. அதாவது ‘ஜி.எஸ்.டி.’ வரிபோக தனியாக கேளிக்கை வரி 30% என்று அறிவித்தது. இந்தத் தனி அறிவிப்புக்குப்பின் ஒரு சூட்சுமம் உண்டு. கலைஞர் ஆட்சியில் ‘"தமிழில் பெயர் வைத்தால் முழு வரிவிலக்கு'’என்கிற அறிவிப்பு, அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசியல்வாதிகளுக்கும், சில அதிகாரிகளுக்கும் லஞ்சம் கைமாறும் கணையாழியாகச் செயல்பட்டது. அதாவது "யு'’சான்றிதழ் இருந்தால்தான் ‘வரிவிலக்கு’ என்ற இடத்துக்குப் போக முடியும். எனவே "யு' வாங்க அதிகாரிகளுக்குக் கையூட்டு. அடுத்து ஆளுங்கட்சி சார்ந்த சிலர் படம் பார்த்து ‘"வரி விலக்கு பெற தகுதியான படம்தான்'’என்று சொன்னால்தான் ‘டேக்ஸ் ஃப்ரீ. அதற்கு சில லட்சங்கள் முதல் கோடி வரை கைமாறியதாகக் கேள்வி.
வெறும் ஜி.எஸ்.டி. என்றால் இங்கிருக்கும் ஆட்களுக்கு சம்பாத்தியம் ஏது? எனவே, அரசு விடாப்பிடியாக குறைந்தபட்சம் "தமிழ்படங்களுக்கு 10%, பிறமொழிப் படங்களுக்கு 20%' என்று அறிவித்தது. இப்போது தமிழ்ப் படங்களுக்கு 8% என்று பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவாகியிருக்கிறது.
ஏற்கெனவே பண மதிப்பிழப்பு என்ற கோடரியால் வெட்டுப்பட்ட மக்கள், ஜி.எஸ்.டி. என்ற கடப்பாரைக் குத்தும் வாங்கி கையில் பணப்புழக்கமே இல்லாமல் நொந்து போயிருக்கும் வேளையில், டிக்கெட்டின் விலையும் அதிகரித்தால் தியேட்டருக்கு ஆர்வத்தோடு எப்படி வருவார்கள்? டிக்கெட் மட்டுமா? "சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால்பணம்'’என்று 150 ரூபாய்க்கு டிக்கெட் என்றால், 250 -300 ரூபாய்க்கு பார்க்கிங் & பாப்கார்ன் விலை. "குறைந்தபட்சம் தமிழக அரசு அறிவித்த கேளிக்கை வரியாவது வாபஸ் பெற வேண்டும். அப்போதுதான் ஏற்கெனவே தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 40% ஆகக் குறைந்திருப்பது இன்னும் குறையாமல் தாக்குப்பிடிக்க முடியும்' என்கிற பொதுநோக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் போட்டுக்கொண்டிருந்த சண்டையெல்லாம் மறந்து, திடீர் நண்பர்களாகி அரசுக்கு எதிராக ‘"இனி கேளிக்கை வரியைத் திரும்பப் பெறும்வரை புதிய படங்கள் எதையும் வெளியிடுவதில்லை'’என்கிற போராட்டம் அறிவித்தனர்.
சில நாட்களில் டிக்கெட் விலையை 25% வரை உயர்த்தி அரசிடமிருந்து அறிவிப்பு வந்தது. "டிக்கெட் விலை உயர்வு எல்லா இடங்களுக்கும் சமமாக இல்லை' என்ற ‘கோரிக்கையோடு திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர்களைத் ‘தனியாகச் சந்தித்ததாகவும், "10% கேளிக்கை வரி பரவாயில்லை. விஷால்தான் முட்டுக்கட்டை'’என்று போட்டுக்கொடுத்து, தங்களுக்குச் சாதகமான வகையில் சாதித்துக் கொண்டதாக விஷால் காதுகளுக்குத் தகவல் வந்து சேர்ந்தது. கொதித்து எழுந்துவிட்டார் விஷால். திடீர் நட்பும் மறுபடி பகையாகிவிட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் பதவிக்கு வந்ததிலிருந்து இதுவரை விஷால் என்ன சாதித்திருக்கிறார் என்று பார்த்தால், ஜி.எஸ்.டி.க்கு எதிராக, ஃபெஃப்சிக்கு எதிராக, "கியூப்' தொழில்நுட்ப கட்டணத்துக்கு எதிராக... குரல் கொடுத்தாலும்... இவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாகவே முடிந்து போயிற்று.
"வெறும் அறிவிப்பாளர்' என்கிற அவப்பெயரை நீக்க வேண்டுமானால், "பொங்கி எழுந்து சாதித்தால்தான் முடியும்' என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். பொங்கி எழுந்த வேகத்தில் பலமணி நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசித்து சில முக்கியக் கோரிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்.
* எந்தத் தியேட்டராக இருந்தாலும் அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி டிக்கெட் விலையை விற்கக் கூடாது.
* கேண்டீனில் பொருட்களின்மேல் எம்.ஆர்.பி. விலைக்கு மேல் விற்கக்கூடாது.
* எந்தத்
தியேட்டரிலும் -அது "மால்' என்றாலும் "மல்ட்டி ப்ளக்ஸ்' என்றாலும்
கடைக்கோடியிலிருக்கும் சிங்கிள் தியேட்டராக இருந்தாலும் -பார்க்கிங்
இலவசம். ஏனெனில் தெலுங்கானாவில் தியேட்டர்களில் பார்க்கிங் இலவசம்.
* தியேட்டரில் ‘அம்மா’ குடிநீர் விற்பனை செய்யப்பட வேண்டும். வீட்டிலிருந்தும் தண்ணீர் எடுத்துச் செல்லலாம்; தடுக்கக்கூடாது.
* மிக அதிகமாக வசூலிக்கப்படும் ஆன்லைன் முன்பதிவுக் கட்டணம் பெருமளவில் குறைக்கப்பட வேண்டும்.
* எந்தத் தியேட்டராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி அதிக விலைக்கு, முக்கியமாக பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும்போது முதல் மூன்று நாட்கள் அடித்துப் பிடித்து படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களிடம் 500, 1000 என்று பணவேட்டை நடத்தினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
விஷால் சொல்லியிருப்பதெல்லாம் அருமையான விசயங்கள்.
என்ன.. இப்போது வெளியிட்டிருப்பதில் கசியக்கூடிய ஒரு செய்தி...… விஜய்யின் "மெர்சல்'’படம் அடையப்போகும் பாதிப்பு. 100 "சி'யைத் தாண்டி விழுங்கியதாகச் சொல்லப்படும் "மெர்சல்'’தமிழக தியேட்டர்களில் குறைந்தபட்சம் 110-120 கோடி வசூல் செய்தால்தான் தயாரிப்பாளரின் பங்கான 60-65 கோடி கைக்கு வந்து சேரும். நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்றால் முதல் மூன்று நாட்களில் தோராயமாக வசூலாகும் மொத்தத் தொகை 40-45 கோடி மட்டுமே. அதற்குப் பின், படம் நன்றாக இல்லாவிட்டால் உண்டாகும் பாதிப்பு, இணையத் திருடர்களினால் ஏற்படும் பாதிப்பு... என்று வசூல் குறைவதற்குக் காரணங்கள் கண்முன்னே நிறைய உண்டு.
"விஷால் வேண்டுமென்றே விஜய் படத்துக்குத் தொந்தரவு செய்கிறார்' என்கிற கூற்றில் உண்மை இல்லையென்றாலும் இரண்டு விசயங்கள் முக்கியமானவை.
1. டிக்கெட் விலை நிர்ணயித்தால் "மெர்சல்' நஷ்டம் அடைந்தால் இனி தயாரிப்பாளர்கள், கண்மூடித்தனமாகச் செலவு செய்யாமல் கணக்குப்போட்டு தொழிலைத் தொழிலாகச் செய்யும் வாய்ப்பு அதிகமாகும்.
2. தியேட்டரில் விலை குறைந்து சீரானால், படம் பார்க்கும் மக்கள் வரவு அதிகமாகும்.
முடிவெடுத்தபடி... உறுதியாக இறுதிவரை நின்று போராடினால் அது உண்மையில் பெரிய சாதனைதான். மாறாக, ஏதாவது காரணங்களைச் சொல்லி காம்ப்ரமைஸ் ஆகிவிட்டால் இனி சினிமா துறை என்பது... தயாரிப்பாளர்கள் எந்தக் காலத்திலும் எழுந்திருக்கவே முடியாத சவக்குழியாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக