திங்கள், 16 அக்டோபர், 2017

திமுகவுக்கு ஆதரவாக எந்த ஊடகமும் இல்லை... சமுகவலையில் திமுக அடித்து தூள் ....

Sowmian Vaidyanathan : இதை யார் ஏற்றுக்கொண்டாலும் சரி... இல்லையென்றாலும் சரி...
இன்றைய நிலையில்... இன்னும் சரியாகச் சொல்லப்போனால், கடந்த ஆறேழு ஆண்டுகளாக தனது தரப்பு நியாயத்தை, தனக்கு எதிரான அவதூறுகளுக்கான பதிலடிகளை மக்கள் மன்றத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்க்கு திமுகவுக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் திமுகவின் இணையதளப் படை மட்டுமே...!
திமுகவின் இணையதளப் படை என்றால் அதில் செயல்படுபவர்கள் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அணியைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சியில் பொருப்புக்களை வகிப்பவர்களோ கிடையாது. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், இதில் இயங்கும் பலருக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை கூட கிடையாது..!
ஆனால் தலைவரோ, தளபதியோ இன்றைக்கு ஒரு அறிக்கை கொடுத்தாலும், அல்லது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினாலும்... அதை அட்சரம் பிசகாமல் சற்றேரக்குறைய இரண்டு கோடி தமிழர்களிடம் இவர்கள் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவார்கள். தலைவர், தளபதி மற்றும் திமுகவுக்கு எதிரான எந்த விமர்சனம்... அது தமிழக முதல்வரிடமிருந்தே வந்தாலும் அடித்து ஆடி தூள் பரத்திவிடுவார்கள்.

ஒட்டுமொத்த ஊடகங்களும் திமுகவுக்கு எதிராக களமாடுவதை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து தொங்கவிட்டுக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் தான். சின்னச் சின்ன துணுக்குகள் துவங்கி, மீம்ஸ் மற்றும் பெரிய கட்டுரைகள் வரை திமுகவுக்கு ஆதரவாகவும், திராவிட இயக்க கருத்தியல்களுக்கு ஆதரவாகவும், 24 X 7 இவர்களிடமிருந்து வந்து கொண்டே இருக்கும். அவை மக்களையும் சென்றடைந்து கொண்டே இருக்கும்.
திமுகவை அழிக்கத் துடிக்கும் ஆரிய சக்திகளுக்கும்... அவைகளின் பினாமியாக செயல்படும் தமிழ்தேசிய வியாதிகளுக்கும் எதிராக வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அப்பாவி இளைஞர்களை அவர்களின் மூளைச்சலவையிலிருந்து காப்பாற்றி, திமுகவில் தக்க வைக்க இந்த அணியினர் படும் பாடு அபாரம்...!
திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட சம பலமான வாக்கு வங்கியைக் கொண்டிருந்தாலும், ஆரிய சதிகள், தமிழ்தேசிய அடிஅறுப்புக்கள், ஊடக மொள்ளமாறித்தனங்களால்... நடுநிலையாளர்களின் பெரும்பான்மை வாக்குகள் திமுகவுக்கு எதிராக மாற்றப்பட்டு அவைகள் அதிமுகவுக்கு மடை மாற்றம் செய்வது தான், எப்பொழுதுமே திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கின்றன.
ஆரிய, தமிழ் தேசிய மற்றும் ஊடகங்களின் இந்த சதியை முறியடித்து நடுநிலையாளர்களை திமுக பக்கம் ஈர்க்க கடந்த தேர்தலில் இந்த அணியினர் ஆற்றிய காரியங்கள் அளப்பறியது.
இன்றைக்கு அதிமுகவினருக்கும், ஆரிய சக்திகளுக்கும் இருக்கின்ற பெரிய எரிச்சலே... அழிந்து போகும் என்று நினைத்திருந்த திமுக, இன்றைக்கு பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக உருவெடுத்து சட்டமன்றத்தையே ஆட்டிப் படைப்பது தான்.
இத்தகைய நிலைக்கு இந்த அணியினரும் ஒரு முக்கிய காரணம் என்பதை திமுகவினர் உணர்ந்திருக்கின்றார்களோ இல்லையோ அதிமுகவினரும், ஆட்சித் தலைமையும் நன்றாகவே உணர்ந்திருக்கின்றது.
ஆகவே தான் இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமூக வலைத்தளங்கள் மீது அதிகமான கிடுக்கிப் பிடியைப் போட்டு திமுகவுக்கு ஆதரவாகவோ அல்லது அதிமுக அரசை விமர்சித்தோ எழுதுபவர்களுக்கு தொடர்ந்து செக் வைத்துக்கொண்டே வந்தது.
அதன் உச்சக்கட்டமாகத்தான் ஜெயலலிதா கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது, உடல் நிலை பற்றி வதந்தி பரப்புவதாகச் சொல்லி திமுக இணையதளப் படையினரை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் அதிமுக அரசு அதி தீவிரமாக ஈடுபட்டது.
அதிமுக ஆட்சியாளர்கள் களமாடும் திமுக தொண்டர்களை விட தளமாடும் திமுகவினர் மீது அதிக கோபத்துடன் இருப்பதையும் உணர முடிந்தது.
காவல் துறையினரின் இப்படியான தொடர் மிரட்டல்களால், இணையதள திமுகவினருடைய செயல்பாடுகளில் அப்பொழுது ஒரு வார காலம் சற்று பின்னடைவு அல்லது தயக்கம் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை.
உடனடியாக நமது செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அதற்கான முன்னெடுப்புக்களை துவங்கி, இது சம்பந்தமாக அரசுக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் கமிஷனரிடம் புகார் என்ற செயல்பாட்டினால்.., திமுக இணையதள தோழர்களிடையே பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். அரசும் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கியது.

திமுகவுக்கு ஆதரவாகப் பேச தமிழகத்தின் எந்த ஊடகமும் தயாராக இல்லை... எந்த கட்சியும்... ஏன்? கூட்டணிக் கட்சியான காங்கிரஸே தயாராக இல்லை... இந்த நேரத்தில் திமுகவின் மக்கள் ஊடகமாக செயல்படும் இணையதள தோழர்களுக்கு திமுகழக தலைமை கண்டிப்பாக பாதுகாப்பு அரணாக நின்றே தீர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்பொழுது மீண்டும் அதே மாதிரியான அச்சுறுத்தல்கள் எடப்பட்டி அரசின் மூலம் இணையதள திமுகவினருக்கு வந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
இம்முறையும் நமது செயல் தலைவர் அரசுக்கு எதிராக இதற்கான அஸ்திரத்தை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் எது எப்படி இருந்தாலும் மக்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை திமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே இருக்கின்றது என்பதை உண்மையான நடுநிலையாளர்களும் உணர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது..

கருத்துகள் இல்லை: