வியாழன், 19 அக்டோபர், 2017

நிலவேம்பு பிரசாரம் ஒரு சதுரங்க வேட்டை .... சமுக விரோதிகளை வளர்த்து விடும் விகடன் வகையறா .


மனோகர் ஆல்டோ : நிலவேம்பு/ சிறியாநங்கை குடிநீர் மூலம் டெங்கு வைரஸ் காய்ச்சலைக் குணப்படுத்த முடியும் என்று லாபி செய்துவந்த சித்த மருத்துவர் சிவராமன் நிலவேம்பு சூரணத்தை விற்கும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி அதிபர் என்ற தகவல் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை. டெங்கு கொள்ளை நோயாக பரவி தெருவுக்கு ஒரு அகாலமரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று வலியுறுத்தியவர்களை மருந்துக் கம்பெனி அடியாட்கள் என்று நம்பவைத்து ஊடகங்களில் தோன்றி, அரசாங்கத்தை நம்பவைத்து தனது கம்பெனி தயாரிப்புகளை வியாபாரம் செய்வது 'சதுரங்க வேட்டை'யையே மிஞ்சுகிறது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த திரு சுந்தர் ராஜன் சித்த மருத்துவர் சிவராமனின் இன்னொரு கம்பெனியில் பங்குதாரர் என்பது இந்த லாபி எவ்வளவு ஆழமானது என்பதோடு பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கும், சமூகத்திற்கும் ஆதரவாகச் செயல்படுவதாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் எவ்வளவு மலிவாக மனிதர்கள் இறங்கி விடுகிறார்கள்.


பாரம்பரியம், சுற்றுச்சூழல், மரபு ஆர்வலர்கள் என்ற அடைமொழிகளுடன் வந்து உண்மையான அறிவியலாளர்களை பன்னாட்டு நிறுவன கைக்கூலிகள் என்றும், சிலநேரங்களில் விவசாயப் பல்கலைக்கழகங்களையும் வசைபாடுபவர்கள் எல்லாமே vested interest உடன் வலம்வரும் போலிகளே.
செல்வச்சீமானாகவோ பெரும்பதவியிலோ இருப்பவர்களாக இருந்தாலும் சரி, அன்றாடங்காய்ச்சியாக இருந்தாலும் சரி, தன் பிள்ளையின் சவத்தைத் தூக்கிச்சென்று அடக்கம் செய்வதுபோல வலிமிகுந்த, கனத்த ஒன்று எதுவுமே இருக்கமுடியாது. தமிழகத்தில் இன்று பல பெற்றோர்கள் டெங்குவிற்கு பிள்ளைகளைப் பலி கொடுத்துவிட்டு வேதனையிலும், விரக்தியிலும் இருக்கும்போது நிலவேம்பு குடிநீர் பாதுகாப்பானது, அலோபதியில் டெங்குவுக்கு மருத்துவமே இல்லை என்று பிரச்சாரம் செய்துவரும் பிணந்தின்னி ஜென்மங்கள் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் தங்களது வரும்படி குறையாமல் பார்த்துக்கொள்ளும் ஒட்டுண்ணிகளே.
தமிழகத்துக்கு வாய்த்த சுகாதாரத்துறை அமைச்சரின் நேர்மையும், யோக்கியதையும் தெரிந்ததே. ஆனால் அத்துறையின் செயலாளராக இருக்கும் இராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகளே தங்களது தொழில் அறத்துக்குப் புறம்பாக பேசுவது இந்த போலி மருத்துவ, ஹீலர் கும்பல்களின் லாபி எவ்வளவு திட்டமிட்டு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
விதைத் திருவிழா என்றபெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்புகள் உள்ளூர் இரகங்களைத் திருடுவதற்கு, நாட்டு மாடு சல்லிக்கட்டு என இளைஞர்களைத் திசைதிருப்புவது, தடுப்பூசி போகக்கூடாது பிரசவத்துக்கு மருத்துவமனை செல்லக்கூடாது என பிரச்சாரம் செய்யும் செம்மைவனம் போன்ற அமைப்புகள், கார்ப்பரேட் எதிர்ப்பு என்றுசொல்லியவாறே இன்றுவரை துறவிபோல நம்ப வைக்கப்பட்ட நம்மாழ்வார் போன்ற உளறல் பேர்வழிகள், யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நதிகளைக் காப்போம் என வலம்வரும் ஜக்கி வாசுதேவன் என அத்தனை சமூகவிரோத சக்திகளையும் இனம்கண்டு வளர்த்துவிடுவதில் விகடன் குழுமம் Vikatan EMagazine முன்னணியில் நிற்கிறது.
Drug mafia, cartel என்றெல்லாம் அலோபதி மருத்துவத்துறையை குறிவைக்கும் நபர்கள் இந்த நாட்டுமருந்து மாபியாவை மயிலிறகால் வருடிக்கொடுப்பார்கள் பாருங்கள்.

கருத்துகள் இல்லை: