திங்கள், 16 அக்டோபர், 2017

பள்ளியில் ஆசிரியருக்குக் கத்திகுத்து!

மின்னம்பலம்:  போளூர் அருகே பள்ளி வளாகத்திலேயே ஆசிரியரை அரிவாளால் தாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பாலகிருஷ்ணன் கண்ணையன் தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான கார்த்திகேயன் (39). அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வழக்கம் போல் இன்று (அக் 16) பள்ளிக்குச் சென்ற அவர் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர், பெற்றோர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்தக் கூட்டத்தின் போது இளைஞர் ஒருவர் கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களும், பெற்றோர்களும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார் கார்த்திகேயனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: