செவ்வாய், 17 அக்டோபர், 2017

குர்திஸ்தான் மீது படையெடுக்கும் இராக் ராணுவம்


தினமணி : இராக்கின் குர்து இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில், குர்து படையினருக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது.
இராக் அரசின் எதிர்ப்பையும் மீறி, குர்திஸ்தானை தனி நாடாக அறிவிப்பது குறித்த பொது வாக்கெடுப்பை அந்த மாகாண அரசு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடத்தியது.
எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு சட்டவிரோதமானது என இராக் அரசு தெரிவித்தது.
பொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து குர்திஸ்தான் மாகாண அரசுக்கும், இராக் அரசுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அந்த மாகாணத் தலைநகர் கிர்குக்கில் குர்துப் படையினரின் வசமிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மீட்க இராக் ராணுவம், பயங்கரவாதத் தடுப்புப் படையினர் அந்த நகரை நோக்கி முன்னேறினர்.

இதையடுத்து, குர்துப் படையினரும், இராக் படையினரும் திங்கள்கிழமை அதிகாலை பரஸ்பர பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அரசுக்கு ஆதரவான படைகளை ஒருங்கிணைக்கும் இராக் கூட்டுப் படைத் தலைமையகம் கூறியதாவது:
கிர்குக் நகரில் பாதுகாப்பு நிலவரத்தை சீர் செய்வதற்கான ராணுவ நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கிர்குக் நகரின் தெற்குப் பகுதியில் 2 பாலங்கள், 2 முக்கிய சாலைகள், ஒரு தொழிற்பேட்டை, எண்ணெய்க் கிணறுகள், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, ஒரு காவல் நிலையம் ஆகியவற்றை மத்திய அரசின் படை கைப்பற்றியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்ட கிர்குக் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும், ராணுவ மையங்களையும், அமெரிக்கா மற்றும் இராக் ராணுவத்தின் உதவியுடன் குர்துப் படையினர் மீட்டனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதிகளை குர்துப் படையினரிடமிருந்து மீட்பதற்காக இராக் ராணுவம் முன்னேறி வரும் நிலையில், இராக் விவகாரத்தில் புதிய பிரச்னைகள் முளைப்பதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக பார்வையளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: