வெள்ளி, 14 ஜூலை, 2017

RSS இன் கோரப்பிடியில் மக்கள் ! அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு !

தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது
அமர்த்தியா சென் பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் கோஷ். இந்த ஆவணப்படம், இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் பகுதிக்கான படப்பிடிப்பும், 2017-ம் ஆண்டில் இரண்டாம் பகுதிக்கான படப்பிடிப்பும் நடைபெற்றது.
இந்த ஆவணப்படத்தில், பல்வேறு சம்பவங்கள் குறித்த தனது கருத்தை அமர்த்தியா சென் உட்பட பலரும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக 2002 குஜராத் கலவரம், பசுப் பாதுகாவலர்களின் அத்துமீறல் மற்றும் ஹிந்துத்துவ இந்தியா குறித்தும் அவர்கள் பேசியிருக்கின்றனர். இந்த ஆவணப்படத்தை பொதுத் திரையிடலுக்காக அனுமதி கேட்டு கொல்கத்தாவில் உள்ள ‘மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின்’ முன் கடந்த ஜூலை 11 அன்று திரையிடப்பட்டது.

மத்திய திரைப்பட தணிக்கை குழு, படத்தயாரிப்பாளர் சுமன் கோஷிடம் , குஜராத், பசு, ஹிந்து இந்தியா, இந்தியாவின் ஹிந்துத்துவப் பார்வை ஆகிய வார்த்தைகளில் பீப் ஒலியை ஒலிக்க விட்டால்தான் தணிக்கைச் சான்றிதழ் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து மும்பையில் உள்ள தமது தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில், இந்த ஆவணப்படத்தில் உபயோகப்படுத்தியுள்ள வார்த்தைகள் குறிப்பிட்ட பிரிவினரின் மனதைப் புண்படுத்தும் என்றும் குஜராத் மாநிலத்தின் பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்கும் என்றும் ‘ஹிந்து இந்தியா’ என்ற சொல், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது கொல்கத்தா திரைப்படத் தணிக்கைக் குழு.
குஜராத் கலவரம் பற்றி பேசும் போது ‘குஜராத்’ என்ற வார்த்தையை ஒலிக்காமல் ‘பீப்’ செய்த பின்னர் அது குறித்து பேசுவதில் ஏதும் பொருள் உண்டா? கோட்சேவை குறிப்பிடாமல் காந்தி கொலை குறித்து பேச முடியுமா? குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்து உலகமே காறி உமிழ்ந்த பின்னர், ‘குஜராத்’ என்ற ஒரு வார்த்தையால் அந்த மாநிலத்தின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என்பது அயோக்கியத்தனமில்லையா? அதைப் போலவே ‘பசு’ என்ற வார்த்தையை ‘பீப்’ செய்வதும், ‘ஹிந்து இந்தியா’ என்ற வார்த்தை மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்பதும் கொல்கத்தாவின் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.
இதனை பல்வேறு ஜனநாயக சக்திகளும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ள இந்தத் திருத்தங்களைத் தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் தமது நிலையில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் சுமன் கோஷ் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் அமர்ந்தது முதல் பல்வேறு அரசுத் துறைகளிலும் சங்கப்பரிவாரக் கும்பலை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தியது பாஜக. தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தொடங்கி, உயர்கல்வித்துறை வரையிலும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மற்றும் அனைத்து கலாச்சாரத் துறைகளிலும் சங்கப்பரிவாரக் கும்பல்களை தலைமைப் பொறுப்பிற்கு நியமித்தது.
ஹிந்துத்துவ கழிவுகளை எல்லாம் கலாச்சாரம் என்னும் பெயரில் மக்களிடம் பரப்புவதும், அறிவியலுக்குப் புறம்பானவற்றை எல்லாம் அறிவியல் என பிரகடனம் செய்வதும், முசுலீம்களுக்கும், தலித்துகளுக்கும் எதிரான கருத்துக்களைப் பரப்புவதும், பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாகவும், வீட்டில் அடங்கி குடும்பத்தைப் பேண வேண்டிய அடிமையாகவும் சித்தரிக்கும் விதமான கருத்துக்களையும் பரப்புவதும் தான் நியமிக்கப்பட்ட இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலின் நோக்கம். அதோடு தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இந்நிலையை அனுமதிப்போமானால், தேசபக்தி என்ற பெயரிலும், மத நல்லிணக்கம் என்ற பெயரிலும் அரசின் கொடும் நடவடிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் சிறைவாசம் நிச்சயம் என்ற அவசரகால கட்ட நிலைமை அறிவிப்பின்றியே நம் தலையில் மீண்டும் சுமத்தப்படும். வினவு

கருத்துகள் இல்லை: