சனி, 15 ஜூலை, 2017

அய்யாக்கண்ணு மீண்டும் டெல்லியில் போராட்டம் ! ஏமாற்றியது மோடி, எடப்பாடி அரசுகள்.. ரயில் நிலையத்தில் பேட்டி!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்தனர். பின்னர் அவர்கள் சென்டிரலில் இருந்து கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். நாளை காலை அவர்கள் டெல்லி சென்றடைகின்றனர். பயணத்தின்போது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அய்யாக்கண்ணு, நாளை காலை டெல்லி சென்றடைவோம். நாளை காலை முதல் போராட்டத்தை துவங்குவோம். தமிழகத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இது சம்பந்தமாக பிரமரை சந்தித்து முறையிட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தினோம்.


அப்போது தமிழக முதல்-அமைச்சர் எங்களை நேரில் சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று தருவதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

60 நாள் பொறுங்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னார்கள். ஆனால் 90 நாட்கள் ஆகிவிட்டது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஊருக்கெல்லாம் சோறு படைக்கும் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டாதீர்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 3 லட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு செய்தால் என்ன என்று கேட்கிறோம்.

தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும் தனிநபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் 50-க்கும் மேற்பட்டோர் தற்போது டெல்லிக்கு சென்று ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

-வே.ராஜவேல்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: