செவ்வாய், 11 ஜூலை, 2017

ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்!

thetimestamil.com   :அ. குமரேசன்: ஏர் இந்தியா விமானங்களின் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்கிற சாதா வகுப்பினருக்கு (எகனாமிக் கிளாஸ்) அசைவ உணவு வழங்கப்படுவது கடந்த ஜூன் நடுவிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பயணிகளுக்கு இனிமேல் அ-அசைவ உணவுகள் மட்டும்தானாம்.
ஆனால் உயர் வகுப்பினருக்கு (பிசினஸ் கிளாஸ், எக்சிகியூட்டிவ் கிளாஸ்) அசைவ உணவும் உண்டாம்.
அசைவ உணவுகள் அ-அசைவ உணவுகளோடு கலந்துவிடுகின்றன. அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு என்கிறது நிர்வாகம். அத்துடன், உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை என்று நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோஹானி கூறியிருக்கிறார்.
நம்ம கேள்விக்கு வருவோம்:
உயர் வகுப்புகளில் அ-அசைவ உணவுகளோடு அசைவ உணவுகள் கலக்காதா? கலக்காது என்றால் அது எப்படி சாத்தியமாகிறதோ அந்த ஏற்பாட்டை சாதா வகுப்பிலும் செய்ய வேண்டியதுதானே?
உயர் வகுப்புகளில் உணவு வீணாகாதோ? செலவு பிரச்சனையில்லையோ? அல்லது அதற்கெல்லாம் சேர்த்து டிக்கெட்டில் தீட்டிவிடுகிறார்களா?
உயர் வகுப்புகளின் பயணம் செய்பவர்கள் யார்? அவர்களுடைய உணவுத் தேவைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை!

விமானப் பயணிகளில் அதிகமானவர்கள் சாதா வகுப்பில்தான்தான் செல்கிறார்கள். சிக்கனத்தின் பெயரால் அவர்களுடைய உணவு விருப்பத்தில் கை வைக்கப்படுகிறது. இது அ-அசைவத் திணிப்புப் பிரச்சாரத்தோடு சேர்ந்ததா இல்லையா? நானும் அ-அசைவ உணவுக்காரன்தான். ஆனால் அந்தப் பழக்கத்தை எந்தப் பெயராலும் மற்றவர்களுக்கு வலுக்கட்டாயமாகப் புகட்ட மாட்டேன்.
விமானப் பயணங்களில் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் எது எதற்கோ ஊழியர்களோடு வம்புச் சண்டையில் ஈடுபட்டு ரகளை செய்கிறார்கள். நிர்வாகத்தின் இந்த அப்பட்டமான உணவு உரிமை மீறலை எதிர்த்து ஏன் பிரச்சனை எழுப்பக்கூடாது?
அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)

கருத்துகள் இல்லை: