செவ்வாய், 11 ஜூலை, 2017

ஜவகருல்லா : பியுஸ் கோயல் மன்னிப்பு கேட்கவேண்டும் ... மின்சாரம் வழங்க அணுமின் நிலைய நிபந்தனையா?

மன்னிப்பு கேட்க வேண்டும் : ஜவாஹிருல்லாமத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல்,' அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தினை வழங்க முடியாது என்று கூறியுள்ளார், இது சர்வாதிகாரமானது. இந்த கருத்தை அவர் வாபஸ் பெறுவதோடு மன்னிப்பும் கேட்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று ஜூலை 10 ஆம் தேதி சிறையில் சந்திக்க வந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்,' அமர்நாத் புனித யாத்திரை சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதிமுக ஆட்சியைக் கலைக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளதன் மூலம், அதிமுக-பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளது பகிரங்கமாக தெரியவந்துள்ளது. மத்திய அரசு சாதனை புரிந்துள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைப்பதே மோடி அரசின் சாதனையாக உள்ளது. இதற்கு உதாரணமாக தமிழகத்தின் அமைச்சர்கள் வீட்டில் வருமான வரி சோதனை என்ற பெயரில் அதிமுக-வை மிரட்டி பணிய வைத்துள்ளது.
தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வண்ணம் மத்திய அரசு செயல்படவில்லை. எனவே இலங்கை தைரியமாக நடந்து கொள்கிறது. இலங்கை பறிமுதல் செய்த 149 படகுகளில் ஒன்றைக் கூட மீட்க முடியவில்லை. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை மீன் பிடி தொழிலுக்குள் புகுத்தி நமது தமிழக பாரம்பரிய மீனவர்களை ஒழித்துக் கட்ட மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்து அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தமிழகத்தில் கலவரம் வெடிக்கும் என்று கூறியுள்ளார். அவர் அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்படுகிறார். கலவரத்தை தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான திட்டங்களை திணிப்பது சட்ட விரோத செயல், நேற்று சென்னையில் பேட்டியளித்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல்,'அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தினை வழங்க முடியாது என்று கூறியுள்ளார். இப்படி அவர் கூறியிருப்பது சர்வாதிகாரத்தனமானது. இந்த கருத்தை வாபஸ் பெற்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: