ஞாயிறு, 9 ஜூலை, 2017

சிரியாவில் போர் நிறுத்தம் ! அமெரிக்க ரஷ்ய உடன்படிக்கை அமலுக்கு வந்தது US - Russia new Syria ceasefire deal


சிரியா நாட்டில் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆறாண்டு காலமாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த அமெரிக்கா-ரஷியா இடையே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை இன்று அமலக்கு வந்தது. சிரியாவில் உள்நாட்டு போர் நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்தது. டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டன. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்கா இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.

இந்நிலையில், ஜெர்மனி நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் முதன்முறையாக சந்தித்துப் பேசினர். சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், அமெரிக்கா, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் முயற்சியால் சிரியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இருதரப்பினரையும் வலியுறுத்தும் வகையில் கடந்த 7-7-2017 அன்று புதிய போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

சிரியா ராணுவத்தினரும் அதிபருக்கு ஆதரவான தனிநபர் படைகளும், கிளர்ச்சியாளர்களும் ஆயுதங்களை துறந்து அமைதி காக்க வேண்டும் என அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி, (உள்நாட்டு நேரப்படி) இன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து சிரியாவின் தென்மேற்கு பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்தது. இப்பகுதியில் கடந்த ஆறாண்டுகளாக முழங்கிக் கொண்டிருந்த துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இன்று மவுனமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: