சனி, 15 ஜூலை, 2017

ட்ராபிக் ராமசாமி தற்கொலை போராட்ட முயற்சி! முதல்வர் அமைச்சர்களை கைது செய்ய கோரிக்கை!

நக்கீரன் :டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்! முதல்வர், அமைச்சர்களை கைது செய்யக்கோரி தற்கொலை கடிதம்!
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 3 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்தனர். பின்னர் வலுக்கட்டாயமாக மாடியில் இருந்து கீழே இறக்கினர். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கடந்த 30-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாளை காலைக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், முதல்வர் பதவி விலகவும் வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் இன்று மாலையில் திடீரென தனது வீடு மற்றும் அலுவலகம் உள்ள இடத்தின் மூன்று மாடி கட்டிடத்தின் மீது ஏறி நின்று அக்கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

போலீசார் அவரை சமாதானப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வந்தனர். ராமசாமி போலீசாரிடம் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்தார். இதையடுத்து அவர் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார்.

ராமசாமி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தில், கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரை விடுதலை செய்ய வேண்டும், டிஜிபி பதவி விலக வேண்டும், பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். படங்கள் : செண்பகபாண்டியன்படங்கள் : செண்பகபாண்டியன்

கருத்துகள் இல்லை: