வியாழன், 13 ஜூலை, 2017

பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!

thetiemestamil.comn :அ. குமரேசன்:அது ஒரு முழு நீளக் கதைத் திரைப்படம் அல்ல. ஒரு ஆவணப்படமே. ஆகப்பெரும்பாலும் இந்தியாவில் ஆவணப்படங்கள், கருத்துடன்பாடு உள்ள அவையோர் முன்னிலையில் திரையிடப்படுகின்றன. பொதுவெளியில், பொதுமக்களிடம் நேரடியாக வருவது மிக மிகக் குறைவு. அப்படியொரு ஆவணப்படம் ‘Argumentative Indian’ (வாதாடும் இந்தியர்). நோபல் விருது பெற்றவரான பொருளாதார ஆய்வாளர் அமர்த்தியா சென் பற்றிய அந்த்ப் படம். இந்த ஒரு மணிநேரப் படத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கியவர் இயக்குநர் சுமன் கோஷ். அமர்த்தியா சென்னும் அவரது மாணவரான கவுஷிக் பாசு என்ற பொருளாதார வல்லுநரும் உரையாடுகிறார்கள். இடையிடையே பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் சென் பற்றிய தங்களது கருத்துகளைக் கூறுகிறார்கள்.
ஏற்கெனவே நியூயார்க், லண்டன் நகரங்களில் திரையிடப்பட்டுள்ள இந்தப்படம் முந்தாநாள் கொல்கத்தாவில் காட்டப்பட்டது, நேற்று திடீரென திரைப்படத் தணிக்கை வாரியம், அந்தப் படத்தில் அமர்த்தியா சென் வாயிலிருநது வருகிற நான்கு சொற்களை நீக்கினால்தான் அல்லது ‘பீப்’ ஒலியால் மறைத்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறிவிட்டது. (அதுவும், பெரியவர்களோடு வரக்கூடிய குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ‘யுஏ’ சான்றிதழ்.)

அந்த நான்கு சொற்கள் என்ன தெரியுமா? “பசு”, “குஜராத்”, “இந்து இந்தியா”, “இந்துத்துவக் கண்ணோட்டத்தில் இந்தியா” ஆகியவையே அந்த நான்கு சொற்கள் என என்டீடிவி செய்தி கூறுகிறது..
தணிக்கை வாரிய ஆணையால் இந்தியாவில் வேறு எங்கும் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“அரசாங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் அது பற்றிப் பேசட்டும். மற்றபடி நான் இந்த நிபந்தனை பற்றி எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை,” என்கிறார் சென்.
தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநரான கோஷ், “கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். முதல்முறையாக நானே அதை நேரடியாக அனுபவிக்கிறேன்,” என்று கூறுகிறார்.
தணிக்கை வாரியத்தின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்றும் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதே படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் இணையத்தில் வெளியிட முடியும்! அதைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் வாரியத்திற்கு இல்லை!
இணையத்தில் பார்ப்பதற்கு வழியில்லாத, அப்படிப் பார்க்க விரும்பாத ஆவணப்பட ஆர்வலர்கள் சார்பாகக் கேட்கிறேன், அந்த நான்கு சொற்கள் குறித்து அரசுக்கு என்ன அச்சம்? அமர்த்தியா சென்னோ, ஆவணப்படமோ தவறான கருத்துகளைச் சொல்வதாக அரசு நினைக்குமானால், அதைச் சுட்டிக்காட்டலாம், கடுமையாக எதிர்க்கலாம், உறுதியாக மறுக்கலாம், உண்மை நிலவரம் என்ன என்பதை உரக்கச் சொல்லலாம். அதிகார பலம், பண பலம், ஊடக பலம், பிரச்சார பலம் எல்லாம் இருக்கிறபோது, ஒரு ஆவணப்படத்தில் வருகிற விமரிசனங்களை எதிர்கொள்ளும் அரசியல் அறம் இல்லாமல் போனது ஏன்? அதை விடுத்து, அந்த நான்கு சொற்களை மறைக்க நிர்ப்பந்திப்பதன் மூலம் எதை மறைக்கப் பார்க்கிறார்கள்?
அ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)

கருத்துகள் இல்லை: