வெள்ளி, 14 ஜூலை, 2017

முள்ளிவாய்க்கால் மீண்ட தமிழினம் சாதி முள்வேலி அமைக்கும் கொடுமை ..வடமராட்சியில் கோவிலுக்கு தங்கத்தில் தேர் கூடவே ஒரு சாதிவேலி

kathiravan.com: தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் 
புத்தகக்கடைகள், பதிப்பகங்களை விட நகைக்கடைகள் அதிகம் திறக்கிறார்கள்.
 சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சியில் ஒரு, பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள்.
இயற்கையான மரத்திற்கு தங்கமுலாம் பூசி அலங்கோலப்படுத்தியதைப் போல இந்தக் கோவில் நிர்வாகசபையினரின் மனங்களில் சாதிவெறி இறுகப் பூசி மனிதத்தை கேவலப்படுத்துகிறது.
அறுபதாம் ஆண்டுகளில் இலங்கை கம்யுனிஸ்ட்டுக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையினரும் சாதிக் கொடுமைகளிற்கு எதிராகப் போராடினார்கள். தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை கோவில்களில் சமமாக நடத்து என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கோவில்கள் போராட்டத்தின் விளைவாக தங்களது சாதிவெறியை மறைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிற்கு வாசல் திறந்தன. ஆனால் இன்று தச்சன்தோப்பு பிள்ளையாரின் சாதிவெறிக் கதவுகள் தாழ் திறக்கவில்லை.
தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை உள்ளே விடவில்லை என்று தானே போராட்டம் நடத்துகிறீர்கள், நாங்கள் ஒருவரையுமே உள்ளே விடப்போவதில்லை என்று கோவிலை மூடினார்கள். முள்வேலி போட்டார்கள். பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்தார்கள். நிர்வாகசபைக்காரர்கள் மட்டும் கோவிலிற்கு உள்ளே சென்று பிள்ளையாரை வெளியே கொண்டு வருவார்கள்.
நிர்வாகசபைக்காரர்கள் இரு மரபும் துய்ய வந்தவர்கள் என்பதை எழுதித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பிள்ளையாரின் புனிதத்தையும், சைவ வேளாளர்களின் மானத்தையும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து காப்பாற்றி விட்டார்களாம்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்படும், கொடுமைகளிற்கு உள்ளாக்கப்பட்டும் இன்னும்  இலங்கையில் தான் இந்த சாதிவெறிக் காட்டுமிராண்டித்தனம் நடக்கிறது. சாதி என்ற மண்டை கழண்ட சிந்தனையை வைத்துக் கொண்டு சக மனிதரை, சக தமிழரை ஒடுக்கும் கொடுமை இந்த நூற்றாண்டிலும் நடக்கிறது.
அறிவற்ற தமிழரின் மானத்தை கேவலப்படுத்தும் அவலம் இங்கு தான் நடக்கிறது.
தமிழ்மக்களிற்காகவே உயிர் வாழ்கிறோம் என்று சொல்லி பதவிகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கும் அரசியல்வாதிகள் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை அவமதிக்கும் இந்த சாதிவெறியர்களிற்கு எதிராக என்றுமே பேசுவதில்லை. இந்த சாதிவெறிக் கோவில்காரர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி  குடும்பத்தினரும் அடங்குவர். தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும், தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக தமிழர் விடுதலை கூட்டணியின் பின்னால் அணி திரண்டு வாக்குகளை அள்ளி வழங்க வேண்டும் என்றும் ஒற்றுமை பற்றிப் பேசிய கூட்டணியின் தலைவர் தமது சொந்த குடும்பக் கோவிலில் பிள்ளையாருடன் சேர்ந்து தமிழ்மக்களின் மானம், மரியாதை, பண்பாடு எல்லாம் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டதைப் பற்றி வாயே திறந்ததில்லை.
ஏனென்றால் யாழ் வேளாள தலைமைகளிற்கு தமிழ்மக்கள் என்றால் அது வசதி படைத்த மேட்டுக் குடி வேளாளர்கள் மட்டும் தான், அதற்குள் ஒடுக்கப்படும் தமிழ்மக்களிற்கு இடமில்லை. அவர்களின் அடிப்படை உரிமைகள், தன்மானம் என்பன சாதிவெறியர்களால் காலில் போட்டு மிதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல்  சாதி, பிரதேச வெறியர்களின் பங்காளிகளாக இருக்கிறார்கள். கிளிநொச்சியில் குடியேறி வாழும் மலையக தமிழ்மக்களின் பெண்களை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்ட "உதயன்" பத்திரிகைக்கு எதிராக அந்த மக்கள் போராடிய போது "குடியேறி, தோட்டக்காட்டார் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்" என்று சரவணபவானின் உதயன் பத்திரிகைக்காக வர்க்க பாசத்துடன் பிரதேசவெறியைக் கக்கினார் தம்பி சிறிதரன்.
குழந்தைகள் தண்ணீர் குடிக்கும் பாடசாலைக் கிணற்றிலேயே நஞ்சள்ளிக் கொட்டும் பாதகர்களை உருவாக்குவது தான் இந்த சாதிவெறி சைவசமயம். தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிப்பெண்களை காதலித்து திருமணம் செய்யும் ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களை கொலை செய்கிறார்கள் சாதிவெறியர்கள். பிராமணருக்குப் பிறக்கும் குலக்கொழுந்துகள் தான் பூசை வைக்க முடியும் என்ற மூளை கெட்ட சாதிவெறியில் தொடங்குகிறது சைவப்பயங்கரவாதம். இவ்வாறு சாதி சமுதாயத்தை மேலிருந்து கீழாக பிரித்து புற்றுநோய் போல பரவி தமிழ்ச்சமுதாயத்தின் எல்லாமட்டங்களிலும் மனிதத்தை அழித்து வருகிறது.
அறுபதுகளில் ஒடுக்கப்பட்ட மக்களையும், முற்போக்கு சக்திகளையும் ஒன்று திரட்டி கம்யுனிஸ்ட்டுக்கள் நடத்திய வீரமிகு போராட்டங்களைப் போல மறுபடி ஒரு போராட்டத்தை முற்போக்குசக்திகள் முன்னெடுத்து தமிழ்மக்களை பிளவுபடுத்தும் சாதிவெறியை, மதப்பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் பிறப்பை வைத்து உயர்வு, தாழ்வு பேசும் முட்டாள்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.  நன்றி  புதிய ஜனநாயக மக்கள் முன்னணி –

கருத்துகள் இல்லை: