திங்கள், 5 ஜூன், 2017

கத்தார் நாட்டுடன் ராஜாங்க உறவுகளை துண்டித்த அரபு நாடுகள் . சவூதி எகிப்து அமீரகம் ,பஹ்ரீன் ..


வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன. இதன் உடனடித்தாக்கம் இந்தியாவை எப்படி பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது இதனால் இந்தியாவுக்கு உடனடியான எதிர்மறை விளைவுகள் ஏற்படாது என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பதற்றம் நீடித்தால் வேறுபாடுகள் ஊதிப்பெருக்கப்பட்டால் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்பகுதியில் அரசியல் உறவுகள்: இஸ்லாமிய ராணுவ கூட்டணி மற்றும் சவுதி கூட்டணியின் அங்கமாக விளங்கும் கத்தார், ஏமன் தலையீடுகளில் பங்கு வகிப்பதால் சவுதி நாடுகளுக்கும் கத்தாருக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. கத்தாரை கழற்றி விட எடுக்கப்பட்ட முடிவின் பின்னால் ‘பிராந்திய பயங்கரவாதம்’ என்பதை வளைகுடா நாடுகள் முன்வைத்தாலும் கத்தார் அமீர் அல் தானி இரானுடன் வைத்திருக்கும் உறவுகளும், இரான் அதிபர் ரூஹானியின் தொலைபேசி அழைப்பை ஏற்றதும் பிரதான காரணமாக இருக்கலாம் என்று சிலதரப்புகள் கூறுகின்றன.


இந்நிலையில் கடந்த சில நாட்களில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், யுஏஇ, மற்றும் பிற வளைகுடா நாடுகள் கத்தாரை தொடர்பு கொண்டு ‘எந்தப்பக்கம் இருக்கிறது?’ என்ற கேள்வியை கேட்டு வந்தது. இதில் பொதுவாக இந்தியா இந்த ஷியா-சன்னி, அராபிய-பெர்சிய, வஹாபி-சலாமி பிரிவினைகளில் தலையிடுவதில்லை. அனைவருடனும் சுமுக உறவுகளைப் பேணிகாத்து வருகிறது. ஆனால் மேற்கு ஆசியாவை மேலும் பிளவுபடுத்த பதற்றங்கள் தொடாமல் பிளவுபடுத்த மிகவும் நைச்சியமான அரசியல் தந்திரங்கள் தேவை. மோடி இப்பகுதியில் உள்ள நாடுகள் அனைத்துடனும் அதன் உள் முரண்களைத் தாண்டி நல்ல உறவுகளை வைத்துள்ளார்.

வர்த்தகமும் உழைப்புச் சக்தியும்

இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியில் பாதிக்கும் மேல் பெர்சிய வளைகுடாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. மேற்கு ஆசியாவில் சுமார் 60 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவுக்கு இதன் மூலம் அவர்களால் 63 பில்லியன் டாலர்கள் கடந்த ஆண்டு பயனேற்பட்டது. “இதில் எந்தவித தாக்கமும் ஏற்படும் என்று நினைக்கவில்லை. நமக்கு கத்தாரிலிருந்து நேரடியாக கடல்வழியாக எரிவாயு வருகிறது.” என்று பெட்ரோநெட்டின் நிதித் தலைவர் ஆர்.கே.கார்க் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

எனவே எரிவாயு-எரிசக்தி இறக்குமதிகள் உடனடியாக பாதிக்க வாய்ப்பில்லை. வளைகுடா நாடுகள் அதற்கான தடையை விதிக்காமலிருக்கும் வரை பிரச்சினையில்லை. ஏமன், லிபியா, லெபனானின் நாம் பார்த்து போலவே வளைகுடாநாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிகிறது. கத்தாரில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், இதில் பெரும்பாலானோர் 2022 ஃபிபா உலகக்கோப்பை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கத்தாருடன் இந்தியா குறிப்பிடத்தகுந்த வாணிப உறவுகளை வைத்துள்ளது. கத்தார் 9 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்துடன் இந்தியாவின் 19-வது பெரிய வாணிபக் கூட்டணி நாடாக திகழ்கிறது. ஆனால் இதைவிடவும் சவுதி அரேபியா, யு.ஏ.இ. ஆகியவற்றுடன் பெரிய வர்த்தகக் கூட்டுறவுகளை இந்தியா வைத்துள்ளது. மோடி அங்கு சென்று வந்த பிறகு யுஏஇ, கத்தார் நிதி ஆதாரங்களிலிருந்து இந்தியாவுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சவுதி அரேபியாவும் யு.ஏ.இ.யும் இந்தியாவுடன் பயங்கரவாத எதிர்ப்புக்கான வலுவான கூட்டணி மேற்கொண்டுள்ளது. ஆனால் சவுதி அரேபியா, யுஏஇ, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கனில் தாலிபான் எழுச்சியை ஆதரித்து வருகிறது. எனவே சிக்கல் நிறைந்த இந்த உறவுகளில் விரிசல் தோன்றுவது பயங்கரவாதத்திற்கு எதிரான போரை எப்படி பாதிக்கும் என்பதும் இப்போதைக்கு கணிக்க முடியாததாக உள்ளது.

விமான சேவை:

ராஜாங்க உறவுகளை கத்தாருடன் கத்தரித்துக் கொண்ட வளைகுடா நாடுகள், தங்கள் நாடுகளுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் நுழைய தடை விதிக்கவும் முடிவெடுத்துள்ளது. இதனால் தோஹாவை மையமாகக் கொண்டு வளைகுடா நாடுகளின் மற்ற இடங்களுக்கு செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படும். தற்போது வாரம் ஒன்றுக்கு கத்தார் ஏர்வேஸ் 24,000 பயணிகளை இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்கிறது. சமீப மாதங்களில் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளுக்காக கிளை நிறுவனம் ஒன்றை இந்தியாவில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரியுள்ளது. இந்தத் திட்டங்களெல்லாம் எப்படி பாதிக்கும் என்பது இப்போதைக்குக் கணிக்க முடியாததாகவே உள்ளது. tamilthehindu.com

கருத்துகள் இல்லை: