சனி, 10 ஜூன், 2017

GST ..சினிமாவை அழிக்க மூன்றெழுத்து அரக்கன்!

எம்.கே.டி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் சிம்பு தனுஷ் வரை திரைப்படத் துறையில் எப்போதும் ஏதோ ஒரு மூன்றெழுத்து மந்திரம் ஆளுமை செய்யும். இந்த முறை சினிமாவை அழிக்க முளைத்துள்ள மூன்றெழுத்து சாபம்தாம் GST. முதலில் சினிமாக்காரர்கள்தானே, வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான்தானே, சமுதாயத்திற்கு என்ன பயன், என்பதை மீறிக் கெடுக்க வந்தவர்கள்தானே என்றெல்லாம் பேசும் அனைவரும் இதோடு விலகி இணையத்தின் பயனுள்ள பதிவுகளுக்குச் செல்லுங்கள். GST எனும் அரக்கன் அனைவரையும்தான் தாக்கப் போகிறான். அதில் சினிமாவும் உண்டு.
GST என்னும் புதிய வரிக் கொள்கை சொல்வது என்ன? ஒரு தொழில் செய்யும் போது தேவைப்படும் அனைத்து வகை பொருட்களையும் கொள்முதல் செய்யும் போது பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தும் போது என அனைத்து நிலையிலும் தயாரிப்பு நிறுவனம் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட GST வரியைச் செலுத்த வேண்டும். பின்னர்த் தயாரான பொருட்களை விற்பனை செய்யும் போது வாங்கும் நபர் அல்லது அந்நிறுவனத்திற்கு GST வரியையும் சேர்த்துப் பில் எழுப்பி வரி வசூல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில் வரித்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்தும் போது முதலில் நாம் கொள்முதல் அல்லது தயாரிப்பு நிலையில் செலுத்திய வரித்தொகையை எடுத்துக் கொண்டு மீதியைச் செலுத்தினால் போதும் (reverse credit)
நம்மிடம் பொருள் கொள்முதல் செய்தவர் மக்களிடம் விற்பனை செய்யும் போது அவரும் அவர் செலுத்திய தொகையைக் கழித்துக் கொண்டு மீதியை அரசாங்கத்திற்குச் செலுத்துவார். இன்னமும் விளங்க விவரமாகச் சொல்வதானால் மக்கள் தாங்கள் பொருள் அல்லது சேவையைப் பயன்படுத்தும் போது செலுத்தும் வரியை அந்தப் பொருள் தயாரிப்பவரும் விநியோகம் செய்பவர்களும் முதல் கட்டத்திலேயே அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டுமாம். பின்னர்க் கடை நிலை பயன்பாட்டாளர் வரி செலுத்தும் போது திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
அக்கிரமத்திலும் அக்கிரமம் எனப் பல விஷயங்கள் உண்டு. GST சினிமாவுக்குச் செய்யும் அக்கிரமம் இந்த வகைதான். ஹோட்டல்களில் A B C மூன்று வகைகள் பிரித்து 5% 18 % 24 % என வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலணிகளில் கூட 500 ரூபாய்க்குக் குறைவு எனில் வரி இல்லை, பின்னர் அதிக விலைக்கேற்ப வரி விகிதம். மேஜிக் காட்சிகள் கச்சேரிகள் மற்றும் பல மேடை நிகழ்ச்சிகளுக்கும் பல விதப் பிரிவுகளில் வரி.
இப்போது திரைப்படத் துறைக்கு என்ன விதத்தில் எல்லாம் சங்கடம் எனப் பார்க்கலாம். 25 லட்ச ரூபாயில் பிராந்திய மொழியில் எடுக்கப்பட்ட படமோ 500 கோடியில் எடுக்கப்பட்ட உலகச் சந்தைக்கான படமோ ஒரே அளவு விகிதத்தில் வரியாம். அரசாங்கம் என்ன செய்தது கொடுமை எனில், இந்தத் துறையினரின் அலட்சியம், ஒற்றுமையின்மை, அடிப்படை அறிவின்மை சரியாகக் கோரிக்கை வைக்கக் கூடத் தெளிவில்லாத தன்மைதான் கொடுமையிலும் கொடுமை.
ஓவியம், இசை, நாடகம், சிலை வடித்தல், மற்றும் பல வகை கலை வடிவங்களுக்கும் பல வித விலக்கு தந்த அரசாங்கம் திரைப்படத்தொழிலை மட்டும் சூதாட்டம் லாட்டரி வரிசையில் வைத்து வதம் செய்கிறது. திரைப்படம் தயாரிப்பது கலையா? வணிகமா? இயக்குநரின் கனவாக இருக்கும் வரை கலை. முழுப் படைப்பையும் பார்க்காமலே நம்பித் தயாரிப்பாளர் முதலீடு செய்யும் வரை கலை. படைப்பாளிகள் நம்பி வேலை செய்து முதல் பிரதிக்காகக் காத்திருக்கும் வரை கலை, பல வகையில் படைப்பைச் சிறப்பாக்க நேர்த்தியாக்க இழைக்கும் வரை கலை, திரைப்படம் தயாராகித் தணிக்கை செய்த பின் மக்கள் பார்வைக்கு வரும் போது, அதே படைப்பை முதல் நாள் நம்பி மக்கள் திரையரங்கில் கொடுக்கும் போது ஆரம்பிக்கிறது வணிகம்.
பல படைப்புகள் பாதியில் நின்று போகிறது. பல படைப்புகள் மக்கள் பார்வைக்கு வராமலே தேங்கி விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் பானை செய்யும் குயவன் போல, சிலை செய்யும் சிற்பி போல, படைக்கும் போதே பலத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ள தொழில்தான் சினிமா.
இந்த உண்மையை அரசுக்கு உரக்கச் சொல்லாத, சொல்லத் தெரியாத, இந்திய அளவிலான திரைப்படத்துறையின் முக்கியஸ்தர்களும் சொன்னால் கூடப் புரிந்து கொள்ளாத அரசாங்கமும்
அதிகாரிகளும் பல வகையில் மக்களைச் சந்தோஷப்படுத்தியும் cheapest entertainment cinema என்பது உண்மையாக இருந்தும் அனாதையாக இருக்கிறது இந்தியத் திரைப்படத்துறை.
அரசாங்கத்திற்கு அதிக அளவு வருமானம் தரும் இந்தச் சினிமா, அவசரக் காலங்களில் அரசுக்கே உதவும் இந்தச் சினிமா, திருட்டு விசிடி எனும் அரக்கனால் அரசுக்கு மட்டும் கோடிக்கணக்கில் வருமானம் இருப்பதால் திருடர்களைக் கண்டுகொள்ளாத அரசையும் தட்டிக் கேட்காத இந்தச் சினிமா, GST எனும் அரக்கனால் அழியப் போகிறது. குறிப்பாகச் சிறிய தரமான பிராந்திய மொழிகளில் குறுகிய அளவு மட்டுமே மார்க்கெட் உள்ள படங்கள் முற்றிலும் பாதிக்கப்படும்.
கமல், அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால் போன்ற நட்சத்திரங்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கலாம். அதே போல வெற்றி பெற்ற சில பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கூட வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் GST, KST, LST என இன்னும் எவ்வளவு புது வரி வந்தாலும் கவலைப்பட்டாலும் பயப்பட வேண்டியதில்லை. பிரச்சனை, ஆபத்து, கவலை, பயம், கலக்கம் எல்லாம் இப்போது இந்தியா முழுவதுமுள்ள முடிந்த, முடியும் நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான திரைப்படத் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கக் குரல்கொடுக்க யாரும் இல்லை.
மக்களும் இனி வரி சுமை அதிகமாவதால் டிக்கெட் விலை அதிகரிப்பதால், புதிய திரைப்படங்கள் இணையத்திலும் தெரு முனைகளிலும் கிடைப்பதால் திரை அரங்கு பக்கம் வரப் போவதே இல்லை. இந்தத் துறை மட்டும் அல்ல மக்கள் செலுத்த வேண்டிய வரியை முதல் கட்டத்திலேயே முதலாளிகள் கட்ட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த GST வரி திணிப்பு இன்றைய அரசுக்கும் நாளைய இந்தியாவுக்கும் பெரும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: