புதன், 7 ஜூன், 2017

விஜய் மல்லியா .. விராட் கோஹ்லி விருந்தில் .. டுபாக்கூர்களின் அரசால் தேடப்படும் சாராய மன்னன் ..தொண்டு நிறுவன தொடக்கமாம்

இந்திய இளைஞர்களின் புதிய மதம் கிரிக்கெட் என்றால் மிகையில்லை. சந்தடி சாக்கில் கிரிக்கெட்டோடு தேசக்தியை கலந்து காக்டெயில் பறிமாறுவது தேஷபக்தர்களின் பழக்கம். நடப்பு ’சாம்பியன்ஸ் கோப்பை’ கிரிக்கெட் போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி லண்டனில் உள்ள் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அங்கு பார்வையாளராகக் கலந்து கொண்டு இந்திய அணியை உற்சாகமூட்டினார் பொதுத்துறை வங்கிகள் தேடும் ஜெப்டி திருடர் விஜய்மல்லையா. ஒருவேளை கிரிக்கெட்டின் தேஷபக்தியில் தனது திருட்டுத்தனம் அடித்துச் செல்லப்படும் என்று அவர் நம்பியிருக்கலாம். இந்நிலையில் நேற்று இலண்டனில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்தியாவில் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக ஒரு தன்னார்வத் ’தொண்டு’ நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

அந்த தொண்டுப் பணி நடத்தும் பொருட்டு புரவலர்களிடம் இருந்து பணம் திரட்டுவதற்காக இலண்டனில் ஒரு நிகழ்ச்சியை நேற்று நடத்தியுள்ளார். இதில் இந்தியாவின் ’சிறந்த இந்தியர்கள்’ பலர் கலந்து கொண்டனர். அவர்களுள் சூப்பர் தேஷபக்த இந்தியரான விஜய் மல்லையாவும் ஒருவர். இதனையும் இந்திய ஊடகங்கள் பரபரப்பு செய்தியாக்கின. இதனால் பீதியடைந்த பிசிசிஐ, ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு விஜய் மல்லையாவை விராட் கோலி வரவேற்கவில்லை என்றும், அவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட வேறொருவரின் விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

அதாவது ராமசாமியின் நிகழ்வுக்கு ராமசாமியால் அழைக்கப்பட்ட குப்புசாமி என்பவர் அவரது நண்பரான சேஷாசலத்திற்கு தகவல் சொல்ல சேஷாசலம் அவரது எதிர் வீட்டு ஏகாம்பரத்தை கூட்டி வந்தாராம். தனது வருமான வரி ’விலக்கு’க்காகத் தொண்டு நிறுவனங்களைத் தொடங்கும் பிரபலங்களின் வரிசையில், கோஹ்லி இணைந்திருப்பதும் அதிசயமில்லை.
அதே போன்று தனது வருமானத்திற்காக பொதுத்துறை வங்கிகளை மொட்டையடித்த மல்லையாவும் கெத்தாக கோஹ்லி நிகழ்வுக்கு வருகை புரிந்ததும் அதிசயமில்லை. கிரிக்கெட்டில் பாக் தோல்வியை கொண்டாடிய தேஷபக்தர்களை உற்சாகப்படுத்துவதற்காக போட்டியில் கலந்து கண்ட மல்லையா, பாக் வீரர்களுக்கு உற்சாக பானமோ இல்லை பணமோ கொடுத்திருந்தால் கூட அதுவும் அதிசயமில்லை. வினவு

கருத்துகள் இல்லை: