வெள்ளி, 9 ஜூன், 2017

அப்பாவின் அரவணைப்பு கிட்டாமல் போவதேன் .... மகளின் பார்வையில் ...

Sasi Kala :ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் தோன்றும் கேள்வி இது. சிறு குழந்தையாக இருக்கையில் தன்னை கொஞ்சி முத்தமிட்ட தந்தை ஒரு கட்டத்தில் தம்மை விட்டு விலகி நிற்பது ஏன் ? முக்கியமாக பெண் பிள்ளை தங்கள் பத்து வயதை கடந்த பின் அவளின் தந்தை அவளை விட்டு சற்று விலகியே இருக்கிறார். அதிலும் அந்தப் பெண் பூப்பெய்திவிட்டால் அவளை தொட்டுப் பேசக்கூட அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன ?? அல்லது யார் ??
தன் மகள் வளர்ந்த பிறகு அவளை தொட்டுப் பேசக்கூடாது என்றோ அவளை விட்டு சற்று விலகி நிற்க வேண்டும் என்றோ எந்த தந்தைக்கும் தோன்றாது என்பதுதான் உண்மை. அந்தப் பிரிவினையை ஏற்படுத்துவது வீட்டில் உள்ள பெண்கள்தான். உங்கள் மனைவியாகவும் இருக்கலாம் அல்லது உங்கள் தாயாகவும் இருக்கலாம். "அவ என்ன சின்னக்குழந்தையா தொட்டு கொஞ்சிக்கிட்டிருக்கீங்க" என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள். பின் சிறிது சிறிதாக அது ஒரு சுவராக மாறிவிடும்.
அவர்கள் சொல்வதை கேட்டு நீங்களும் மகளை சற்றுத்தள்ளி வைத்தே பார்க்க ஆரம்பிப்பீர்கள். என்னதான் பெண் பிள்ளை தன் தந்தையை நண்பராக கருதுவதாகக் கூறினாலும் அல்லது நீங்கள் அப்படிக் கூறிக்கொண்டாலும், தன் தந்தையின் ஸ்பரிஸத்தையும் அரவணைப்பையும்தான் எந்தவொரு மகளும் பெரிதாக நினைப்பாள். ஒரு வயதிற்கு பிறகு அந்த ஸ்பரிஸமும் அரவணைப்பும் விடுபட்டு கடைசி வரை அவளுக்கு அது கிடைக்காமலே போய் விடுகிறது.
மகளின் உணர்வை அவள் ஏக்கத்தை ராஜா சுந்தரராஜன் சார் அவரின் அழகு தமிழில் எழுதியுள்ள கவிதை..
Raja Sundararajan:
உணர்தல்
__________
நான் சமைந்தநாளில் என்னோடு
நீங்களும் அழுதீர்கள்.
“பாப்பா” என்று விளித்து கதவுதட்டி
என் அனுமதி பெறாமல், அதற்குப்பின்
என் தனிமைக்குள் நுழைந்ததில்லை நீங்கள்.
பள்ளியிறுதி அரசுத்தேர்வுகளில் நான்
உயர்மதிப்பெண் பெற்ற அன்றைக்கும்
என்னை தோளணைத்தீர்கள் இல்லை;
கண்ணீரை சிரிப்போடு கலந்து காண்பித்தீர்கள்
விலகியே நின்று.
ஈருருளி பயிற்றுவித்தபோதாவது
உங்கள் கைபட்டிருக்குமா?
எனக்கும் வேற்றுமை தெளிவில்லை.
எந்தக் காலத்தில் கலாச்சாரத்திலிருந்து
வந்தீர்கள், அப்பா? வரத்துமழை
வருமுன் வரும் மண்வாசனை எனவே.

கருத்துகள் இல்லை: