செவ்வாய், 6 ஜூன், 2017

எம்.எல்.ஏ.,க்களுக்கு தினகரன் கொடுத்த வாக்குறுதி!


டிஜிட்டல் திண்ணை : எம்.எல்.ஏ.,க்களுக்கு தினகரன் கொடுத்த வாக்குறுதி!“ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவின் பவர் செண்ட்ராக இருந்தது போயஸ் கார்டன். இப்போது அடையாறு. அங்கேதான் இருக்கிறேன். வெய்ட்!” என வாட்ஸ் அப்பில் இருந்து ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு அடுத்த மெசேஜ் வந்தது. “டி.டி.வி. தினகரன் அவரது அடையார் வீட்டில்தான் இருக்கிறார். நேற்று அவர் பரப்பன அக்ரஹாராவுக்கு சென்று சசிகலாவை சந்தித்து வந்ததில் இருந்தே அடையார் பரபரப்பாகி விட்டது. தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அவரை சந்தித்தபடி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் இன்று வந்து தினகரனை சந்தித்துவிட்டார். செந்தில்பாலாஜியுடன், தோப்பு வெங்கடாஜலம் உள்ளிட்ட சிலரும் வந்தார்கள். செந்தில்பாலாஜியிடம் தான் தினகரன் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசி இருக்கிறார்.
‘இப்போ நம்மோட நோக்கம் ஆட்சியை கலைக்கிறதோ அவங்களுக்கு எதிராக செயல்படுறதோ இல்லை. நமக்கு இருக்கும் செல்வாக்கையும், நம்ம பக்கம் இவ்வளவு பேரு இருக்காங்க என்பதையும் அவங்களுக்கு காட்டணும். நான் கட்சிப் பணியை தொடர்ந்து செய்வேன். அவங்க யாரு என்னை தடுக்க முடியும்? நம்ம சைடுல நாலு பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கணும்னு சொல்லி கேட்போம்.
எப்படி கொடுக்காம போயிடுறாங்கன்னு பார்க்கலாம். நம்ம ஆதரவு இல்லாமல் அவங்க ஆட்சி நடத்த முடியாது என்பது அவங்களுக்கு தெரியணும். அதே நேரத்துல நம்மால எந்த சூழ்நிலையிலும் ஆட்சிக்கு ஆபத்து வந்துடவும் கூடாது. மறுபடியும் ஒரு தேர்தல் வந்தால் இப்போ இருக்கும் சூழ்நிலையில் நாம ஆட்சியை பிடிக்கிறது சிரமம். அதனால மிச்சம் இருக்கும் நாலு வருசத்தை நாம அப்படியே ஓட்டணும். அதே நேரத்துல நாம சொல்றதையும் அவங்களை கேட்க வைக்கணும். சின்னம்மாவும் அதேதான் நினைக்கிறாங்க...’ எப்படியாவது அமைச்சரவையில் நாம் இடம் பிடிப்போம் என்று தினகரன் செந்தில் பாலாஜிக்கு வாக்குறுதி தந்தாராம்.
அதற்கு செந்தில்பாலாஜி, ‘நான் எப்பவும் உங்களுக்கு எதிரா செயல்பட்டது இல்லை. என்னை வளர்த்து எடுத்ததே சின்னம்மாதான். உங்க குடும்பத்துக்கு நான் துரோகம் நினைக்க மாட்டேன். நான் எப்பவும் உங்களோட இருப்பேன். நீங்க சொல்றதை கேட்க நான் தயாராக இருக்கேன்..’ என்று உருகியிருக்கிறார்.

இன்று தன்னை சந்திக்க வந்த எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் தினகரன் திரும்பத் திரும்ப சொன்ன விசயம், ‘எந்த சூழ்நிலையிலும் நம்மால இந்த ஆட்சிக்கு ஆபத்து வந்துடக் கூடாது. நாம எல்லோரும் அதிமுக என்பதையும் யாரும் மறந்துடக் கூடாது. எப்போ என்ன செய்யணும்னு நான் சொல்றேன். அதுவரைக்கும் எல்லோரும் அமைதியா இருங்க...’ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் இன்னொரு மெசேஜ்ஜும் வந்தது.
”டி.டி.வி. தினகரன் சிறையில் இருந்து வந்ததும் எடப்பாடி தரப்பை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ‘டெல்லிக்கு அவரு சகலையை கூட்டிட்டு எதுக்குப் போனாருன்னு எனக்குத் தெரியும். அங்கே எதுக்கு பணம் கொடுக்கறதுக்கு ஒத்துகிட்டாங்க. இங்கே என்ன யாருக்கும் செலவே இல்லாம இருக்கா? ஜெயா டிவி நடத்தணும். நமது எம்.ஜி.ஆர். நடத்தணும். இதுக்கெல்லாம் யாரு செலவு செய்வாங்க. யாரைக் கேட்டு இவங்க டெல்லியில கமிட் பண்ணினாங்க...’ என்று கொந்தளித்திருக்கிறார். எடப்பாடி தரப்பில் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம்!” என்று அந்த மெசேஜ் முடிய... “ இன்னும் கொஞ்சம் விரிவாக சொன்னால் நல்லது!” என ஃபேஸ்புக் கமெண்ட் போட... “ மே- 25-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நான் ஒரு விஷயம் சொன்னேன். அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே அனுப்பியிருக்கேன். அதை படித்தால் புரியும்...
'பிரதமரைப் பார்த்து பூங்கொத்து கொடுத்த போது ஜெயலலிதாவை பார்த்து அமைச்சர்கள் எப்படி வளைவார்களோ அப்படி வளைந்துவிட்டார் பழனிசாமி.
’நாங்க எப்பவும் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம். எந்தக் காரணத்துக்காகவும் இந்த ஆட்சிக்கு ஆபத்து வந்துடக் கூடாது. அதை நீங்கதான் பார்த்துக்கணும்..’ என்று முதல்வர் சொல்ல.. அதை மாணிக்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்கள் கொடுக்கும் பணம் எல்லாம் வசூல் செய்து கார்டனில் சேர்க்கும் பொறுப்பு எடப்பாடி பழனிசாமியிடம் தான் கொடுக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அது சம்பந்தமாக எந்தப் பேச்சும் இல்லை. ஆனால்
இப்போது, அமைச்சர்கள் கொடுக்கும் பணத்தில் 60 பர்செண்ட் டெல்லிக்கு வந்துவிட வேண்டும் என சில கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. ‘பணத்தை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக்குறேன்.. ஆட்சியை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க...’ என முதல்வர் டெல்லி வட்டாரத்தில் சொல்லியிருக்கிறார். ‘உங்க ஆட்சிக்கு எங்களால எந்த சிக்கலும் வராது. நீங்க தைரியமாக போங்க...’ என பிரதமர் சொன்னாராம்.’ - இது நான் அன்று சொன்னது. இப்போது புரிகிறதா?” என்று கேட்டது வாட்ஸ் அப்.
பேஸ்புக்கில் இருந்து தம்ஸ் அப் சிம்பள் வந்து விழுந்தது.
தொடர்ந்து ஒரு ஸ்டேட்டஸும் அப்டேட் செய்தது.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை 4.30 க்கு கோட்டையில் சந்தித்தார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,வான வெற்றிவேல். ‘யாரைக் கேட்டு ஜெயகுமார் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காரு. நீங்களும் அதை பார்த்துட்டு இருக்கீங்க. டி.டி.வியை ஒதுக்கவோ நீக்கவோ ஜெயகுமாருக்கு யாரு அதிகாரத்தைக் கொடுத்தது? அவரைப் போய் யாராவது பார்த்துட்டு வந்தால், கட்சியை விட்டு நீக்கிடுவாரா? நான் பார்த்துட்டுதான் வந்தேன். தைரியம் இருந்தா என்னை கட்சியை விட்டு நீக்கச் சொல்லுங்க பார்க்கலாம். எங்களோடையும் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கிற சூழல உருவாக்கிடாதீங்க.ஆனா ஒரு விஷயம், எங்களால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது.என ஏகத்துக்கும் சத்தம் போட்டிருக்கிறார். ‘அமைதியாக இருங்க. எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம். எல்லோரும் ஒரே கட்சியில்தான் இருக்கோம்.’ என சமாதானம் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்து மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: