சனி, 26 நவம்பர், 2016

முன்னேற்பாடாக பணத்தை சொத்துக்களாகிய பாஜகவினர்.. . ஐக்கிய ஜனதா தளம் கடும் குற்றச்சாட்டு


மோடியின் நடவடிக்கையை முன்பே தெரிந்துகொண்டு, வீடுகள் மற்றும் மனைகளை வங்கிக் குவித்து, தங்கள் வசமிருந்த கருப்புப் பணத்தை பதுக்கிவிட்டனர் பாஜக-வினர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது ஐக்கிய ஜனதா தளம். இதுகுறித்து, ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர்கள் சஞ்சய் சிங், நீரஜ்குமார் ஆகியோர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பீகாரில் பாஜக-வினர் நிலங்கள், வீடுகள், மனைகளை வாங்கி முதலீடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திலீப்குமார், ஜெய்ஸ்வால், சஞ்சீவ், சவுரசியா, லால்பாபு பிரசாத் ஆகியோர் தங்களது சொந்த மாவட்டங்களில் பிளாட்டுகள் வாங்கியிருக்கிறார்கள். பா.ஜனதா மேலிடத் தலைவர்களின் உத்தரவின்பேரிலேயே தாங்கள் இந்த பிளாட்டுகளை வாங்குவதாக கட்டுமான நிறுவனங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
கருப்புப் பணத்தை மாற்றுவதற்காகவே நிலங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதில் பா.ஜனதா மேலிடத் தலைவர்களுக்கு தொடர்புள்ளது. அவர்களது உத்தரவின்பேரிலேயே இந்த நில முதலீடுகள் நடைபெற்று இருக்கிறது. செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி லக்கி சாராய் என்ற இடத்தில் பாஜக-வினர் ரூ.4.7 கோடிக்கு நிலம் வாங்கியுள்ளனர். மதுபானி, மாதேபுராவில் செப்டம்பர் 14ஆம் தேதியும், கதிகாரில் செப்டம்பர் 16ஆம் தேதியும், கி‌ஷன் கஞ்ச், ஆர்வால் ஆகிய இடங்களில் செப்டம்பர் 19ஆம் தேதியும் நிலம் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததால்தான் இவ்வாறு முதலீடு செய்திருக்கிறார்கள். நிலம் வாங்க கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறினர். இதேபோல், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. பாய் பிரேந்திராவும், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு முன்கூட்டியே தெரிந்துவிட்டதால்தான் பாஜக-வினர் கருப்புப் பணத்தை மாற்றிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: