இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "திருப்பூரில் மதனை கைது செய்தவுடன், அவரிடம் விசாரிக்கவில்லை. இதனால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்கள் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். மாணவர் சேர்க்கைக்கு வாங்கிய பணம் தற்போது எங்கு உள்ளது என்று கேள்விக்கு அவர் முழு விவரத்தை தெரிவித்துள்ளார். அதில் ஒரு நடிகரை வைத்து வேந்தர் மூவிஸ், படம் தயாரிக்க முடிவு செய்தது. அதற்காக அந்த நடிகருக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. சில காரணங்களுக்காக அந்த படம் தள்ளிப்போனது. இதனால் அந்த பணத்தை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதுபோல பல இடங்களில் வசூலித்த பணத்தை கொடுத்திருப்பதாக மதன் தெரிவித்துள்ளார். அதில் சிலரிடம் கொடுக்கும்போது அதை ரகசியமாக வீடியோவாகவும் எடுத்ததாகவும் சொன்னார்.
ஏற்கெனவே கைதான மதனின் கூட்டாளி சுதீரிடம் விசாரணை நடத்தியபோது வசூலித்த பணம் தொடர்பாக வீடியோ இருப்பதாக தெரிவித்தார். அதுதொடர்பாகவும் மதனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த வீடியோ, எங்கே, எப்போது, யாரிடம் பணம் கொடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என்ற விவரத்தை கேட்டறிந்துள்ளோம். அடுத்து, மதன், பல வேடங்களில் இருக்கும் புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகின்றன. அதில் ஒரு படத்தில் மொட்டை தலையுடன் மதன் இருக்கிறார். இன்னொரு படத்தில் சாமியார் போலவும், மற்றொரு படத்தில் தாடியுடனும் இருக்கும் புகைப்படங்கள் உள்ளன. இந்தப் படங்கள் குறித்து மதனிடம் விசாரித்தபோது, வடமாநிலத்தில் சாமியாராக இருந்ததை அவர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் இருந்தால் போலீஸிடம் பிடிபடாமல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதனிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர் தெளிவாகவும், நிதானமாகவும் பதில் அளிக்கிறார். இதனால், எங்களால் இந்த வழக்குத் தேவையான விவரங்களையும் அவரிடமிருந்து பெற முடிகிறது" என்றார்.
வீடியோ அழிப்பு
மதனின் கூட்டாளி சுதீரை போலீஸார் கைது செய்தபோது மாணவர்களிடம் வசூலித்த பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தன்னுடைய செல்போனில், பணம் கொடுக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் பதிவான செல்போன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டுள்ளதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஏனெனில் அந்த வீடியோ வெளியானால் சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதற்காக அந்த வீடியோ அழிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த தகவலை தெரிந்த மதன் தரப்பினர் அந்த வீடியோ அழிக்கப்பட்டால் அந்த செல்போனில் இருந்த மெமரி கார்டை எங்களிடம் கொடுங்கள். ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அந்த வீடியோவை திரும்ப எடுத்துவிடலாம் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு அந்த வீடியோவில் ஒன்றும் இல்லை. டேபிளில் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக வீடியோவில் தெரிகிறது என்று கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்துள்ளனர் என்கின்றனர் போலீஸ் வட்டாரங்கள் எஸ்.மகேஷ்; vikatan.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக