வெள்ளி, 25 நவம்பர், 2016

பாயும் திமுக, பதுங்கும் அதிமுக! ரூபாய் நடவடிக்கை..


தமிழக முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில், மத்திய அரசோடு மோதல் போக்கும் வந்துவிடாமல் அதே நேரம் எதிர்க்கட்சிகளோடும் இணைந்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறது அதிமுக. தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து அதிமுக எம்.பிக்களிடம் நலம் விசாரித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அதிமுக எம்.பிக்களும் மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தில் அடக்கியே வாசிக்கிறார்கள். இந்நிலையில் பழைய நிகழ்வுகளை நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வரும் முன்பிலிருந்து ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.
எப்போது மோடி சென்னை வந்தாலும் முதல்வரின் இல்லத்தில் விருந்துண்ணாமல் சென்றதில்லை என்ற நிலைதான் இருந்தது. இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில்தான், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அமைச்சரவை ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகம் செய்தபோது அதிமுக எம்.பிக்கள் மட்டும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் தமிழகத்துக்கு ஆளுநரை நியமிப்பதிலும் தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் இடையே பெரிய பனிப்போரே நடந்தது. இந்நிலையில் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று வரை இல்லம் திரும்பாத நிலையில் மோடி, இதுவரை முதல்வரின் நலமறிய சென்னைக்கு வரவில்லை. காவிரி பிரச்னையின்போது அதிமுக எம்.பிக்கள் பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றனர். ஆனால் சுவரில் அடித்தப் பந்தாக மோடியைக் காணாமல் திரும்பி வந்தனர். இந்நிலையில்தான் ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அதிரடியாக அறிவித்தார். கறுப்பு மற்றும் கள்ளப் பணத்துக்கு எதிரான மோடியின் நடவடிக்கையை தொடக்கத்தில் பிரச்னையின் தீவிரம் தெரியாமல் ஆதரித்தது திமுக. ஆனால், பொதுமக்கள் படும்பாட்டை கண்ட திமுக, சுதாரித்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன அறிக்கைகள் வெளியிடத் தொடங்கியது. இன்று காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சியினரோடு இணைந்து போராட்டங்களை நடத்தத் தொடங்கி விட்டது. ஆனால், அதிமுக எம்.பிக்களின் நிலைதான் குழப்பமாக இருக்கிறது. அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பட்டும்படாமல் மோடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதே நேரம், “தமிழக முதல்வர் கறுப்புப் பண ஒழிப்புக்கு என்றுமே எதிரானவர் அல்ல” என்று தமிழக அரசு செய்தி குறிப்பை வெளியிடுகிறது. மத்திய அரசு, கூட்டுறவு வங்கிகளின் நடவடிக்கைகளை முடக்கியதை மட்டும்தான் இதுவரை அதிமுக வெளிப்படையாக கண்டித்துள்ளது. இதைத் தவிர மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அமைச்சர்களோ, எம்.பிக்களோ, எம்.எல்.ஏக்களோ இதுவரை எந்த கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை. எதிர்வினையாற்றவும் இல்லை. இதற்குக் காரணம் தமிழக முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் மத்திய அரசினால் ஆட்சிக்கு ஆபத்து நேரலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் அரசியல் வெளியில் எழுந்துள்ளது. இந்நிலையில்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அதிமுக எம்.பி-க்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்திருக்கிறார். நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.பிக்கள் பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள். முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அதிமுக எம்.பிக்கள் நவநீத கிருஷ்ணன், மைத்ரேயன் ஆகியோரிடம் பிரதமர் நலம் விசாரித்துள்ளார். அப்போது அவர், “முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் கொண்டவர்” என்று பிரதமர் மோடி கூறியதாக அதிமுக எம்.பி-க்கள் தெரிவித்தனர். மோடி கூறுவது போல் தமிழக முதல்வர் போர்குணம் கொண்டவர்தான். அதனால்தான் உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களோடு இணையாமல் மத்திய அரசோடு யுத்தம் நடத்தி வந்தார். தமிழக முதல்வர் முழு உடல்நலத்தோடு இருந்திருந்தால் மோடியின் நடவடிக்கைக்கு போர் குணத்தோடு எப்படி எதிர்வினையாற்றியிருப்பார் என்பது யாருக்குத் தெரியும்?  minnambalam.com

கருத்துகள் இல்லை: