வியாழன், 24 நவம்பர், 2016

ஐயப்பன் கோயில் இனி ஸ்ரீ அய்யப்ப சுவாமியாம்! சமஸ்கிருத பெயர் மாற்றம்: கேரள அரசு கண்டனம்!

கேரளாவில் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் இனி சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் திருவாங்கூர் தேவசம் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
திருவாங்கூர் தேவசம் நிர்வாகத்தின் கீழ், பல்வேறு சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் மட்டுமே ஐயப்பன் இன்றளவும் வாழ்வதாக நம்பப்படுகிறது. அதனால், ‘சபரிமலை தர்ம சாஸ்தா’ என்னும் பெயரை, மாற்றி ‘சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்’ என்று புதிதாக மாற்றப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோயில் பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக பம்பையில் இருந்து சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர போர்டுகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்ற நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றத்துக்காக கேரள அரசு, தேவசம் போர்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது, “கோயிலின் பெயரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு திடீரென மாற்றியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது தொடர்பாக தேவசம் போர்டு கேரள அரசிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. கடந்த சில மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் பலமுறை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பெயரை மாற்றுவது குறித்து தேவசம் போர்டு எந்த ஆலோசனையும் முன்வைக்கவில்லை.
அரசுக்கு தெரிவிக்காமல் அதை ரகசியமாக வைத்தது ஏன் என தெரியவில்லை. இது தொடர்பாக தேவசம் போர்டிடம் விளக்கம் கேட்கப்படும். சபரிமலை தந்திரியிடம் கேட்டபோது கோயில் பெயர் மாற்றம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்து விட்டார்” என்றார்.
இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “சபரிமலை கோயிலின் பெயரை மாற்றுவது தொடர்பாக கடந்த மாதம் 5ஆம் தேதி நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. சபரிமலை கோயில் தொடர்பாக முடிவெடுக்க தேவசம் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. போர்டின் முடிவை தேவைப்பட்டால் அரசு ரத்து செய்யலாம்” என்றார்  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: