

‘வாழ்வதற்குத் தகுதியில்லாதவரின் வாழ்வைச் சிதைப்பதற்கான அனுமதி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்த புத்தகத்தின் சாரம் இதுதான்:
வாழ்வதற்கு லாயக்கற்றோர் பட்டியலில் இருக்கும்
மனநோயாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஊனமுற்றவர், வயது
முதிர்ச்சியினால் முடங்கிக் கிடப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதார ரீதியில்
செலவு செய்வது தேவையற்றது; எனவே அவர்களுக்கு ’விடுதலை’ அளிக்க கருணைக்கொலை
என்ற வழிமுறையே சிறந்ததாகும் என்று அந்த புத்தகத்தில் கார்ல் பைண்டிங்கும் ஹோக்கும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
சகமனிதனுக்குத் துளியளவும் பயன்படாத உயிர்கள், சமூகத்திற்கு
மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாக இருக்கிறார்கள்; அதனால் அவர்களுக்கு
விடுதலை அளிக்கவேண்டும்; அது கொலையல்ல, கருணைக்கொலை; சட்டரீதியாகவும்
அதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர். ஜடங்களாய்
வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு மரணம் விடுதலை கொடுக்கும் ,மேலும்
இவர்களைப் பராமரிப்பதால் ஏற்படும் கடுஞ்சுமையிலிருந்து சமூகத்திற்கும்
விடுதலை கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
’சமூகத்தில் மனிதர்கள் மரபுரீதியாகச் சமமானவராக
இருக்கமுடியாது’ என்ற கருத்தியலை, அறிவியலாளர்கள் மற்றும் படித்த
மேட்டுக்குடியினர் மெல்ல ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மரபியல் நிபுணர்கள்,
மானுடவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், பல்வேறு அறிவியல் இதழ்வெளியீடுகள்,
புத்தகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் ஊசியில் ஏற்றப்பட்டது. மேலும், இந்தக்
கருத்தியலை அரசியல் சட்டகத்தில் புகுத்தி தூய இனத்தை உருவாக்குவதற்காகவும்
தகுதியற்றவரை ஒதுக்கி விலக்குவதற்கான ஒரு புதிய அரசியல் கருத்தியல்
உருவாக்கப்பட்டது.
1912-ல் அமெரிக்க உளவியலாளரும் யுஜெனிக்ஸ் அமைப்பின்
முன்னோடியுமான ஹென்ரி கோடார்ட் என்பவர் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
அறிவுத்திறன் அலகிடுதலில்(IQ) சிறிது மாற்றம் செய்து, அறிவுத்திறன் 50
முதல்70 வரை உள்ளவர்கள் அமெரிக்க ஜனநாயகத்திற்கு தகுதியற்றவர்கள் என்றவர்,
அவர்களை ‘மோரான்’கள் என்ற புதிய பதத்தில் அழைத்ததுடன், அவர்களை தனி
காலனிகளில் அடைக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் மோரான்கள் நாட்டின்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் குற்றச்செயல்களுக்கு
முக்கிய காரணமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
மோரான்களின் சந்ததிகள் உருவாகாமல் இருக்கவும் ஒரு வலுவான ,
பரிசுத்தமான அமெரிக்க மரபுணுகளை உருவாக்கவும் வேண்டுமென்றால் மோரான்களுக்கு
குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்றார். அதன்படி, ஒப்புதலின்றி பல
ஆயிரக்கணக்கானோருக்கு விரைகள், கருப்பைகள் பிடுங்கி எறியப்பட்டன.1907 முதல்
1939 வரை 27 அமெரிக்க மாகாணங்களில் 30000த்திற்கும் மேற்பட்டோர்
வலுக்கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டனர்
எல்லிஸ் தீவில் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு
குடியேறச் சென்றவர்களை கோடார்ட் ஆய்வுசெய்தார். கொடார்டின் கீழ்
பணிபுரிந்தவரகள் குடியேறியவர்களை பார்த்தமாத்திரத்திலேயே மோரான் என்று
முத்திரையிட்டனர். மோரான்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள்
விரட்டப்பட்டனர்.
கோடர்டின் இந்த ’ஆய்வு’ முடிவுகள் பிற்காலத்தில் நாஜி
ஜெர்மனியில் மரபணுத் தூய்மை இனவாதம், வலதுசாரி பாசிச அரசியல்
கருத்தியலுக்கு வலுசேர்த்தது. மரபணுரீதியாக தாழ்நிலையில் உள்ளவர்கள்
அறுவைச்சிகிச்சையின் மூலம் ஒடுக்கப்படவேண்டும் அல்லது தனி காலனிகளில்
ஒதுக்கப்படவேண்டும் என்ற வாதம் மேலோங்கியது. நடைமுறையிலும் அரங்கேறியது.
முதலாம் உலகப்போரின் தொடக்கத்தின்போது கோடார்டின்
எழுத்துகளும், போர் முடிந்தவுடன் இருந்த பொருளாதாரத் தேக்கநிலையும், கார்ல்
பைண்டிங் மற்றும் ஆல்பெரெட் ஹோக் எழுதிய புத்தகமும் இரண்டாம் உலகப்போரில்
ஹிட்லரின் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க யார் தேவை யார் தேவையில்லை
என்று தரம் பிரித்து ,வாழ்வதற்கு லாயக்கற்றவர்களுக்கு மரணமே பரிசு என்று
கொல்வது நியாயப்படுத்தப்பட்டது. முன்னர் வெளிவந்த புத்தகங்கள், அறிவியல்
கட்டுரைகளில் அதற்கான மேற்கோள்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நெருக்கடி
நிலையில் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்பை அரசின் மீது திரும்பாமல் திசை
திருப்பி அப்பாவி நோயர், வயோதிகர், மனவளர்ச்சி குன்றியவர் மீது குவியச்
செய்து திட்டமிட்ட படி படுகொலைகளை நிகழ்த்தி வெற்றியும் கண்டது பாசிச அரசு.
1930களின் முற்பகுதியில் நாசி ஜெர்மனியில் தொடங்கிய அப்பாவி
மக்கள் மீதான கொடூர வன்முறை தாக்குதல் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு
துல்லியமாக திட்டமிடப்பட்டு மேல்மட்டத்திலிருந்து கீழ்வரை மிகவும்
நேர்த்தியாக செயல்படுத்தபட்டது. 1934 கில் தொடங்கிய கட்டாயக் கருத்தடை
அறுவை சிகிச்சைகள் 3 லட்சம் முதல் – 4 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
(மோரான்கள், மனச்சிதைவு நோயாளிகள், வலிப்பு நோயாளிகள்) என்று பல்வேறு மனநல
நிறுவனங்கள், திருச்சபை நடத்தும் வைத்திய நிறுவனங்களில் அரங்கேறியது. ரோமன்
கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள், பிஷப்கள் அதை எதிர்த்தனர். இந்த
கட்டாயக் கருத்தடையைச் செயல்படுத்த கருத்தடைச் சட்டமும், இரண்டு மருத்துவர்
ஒரு நீதிபதி உள்ளடக்கிய 200 மரபணு சுகாதார நீதிமன்றங்கள் ஜெர்மனி
முழுவதும் தொடங்கப்பட்டன. கடுமையாக கருத்தடைகள் அரங்கேற்றப்பட்டன. ஆரிய
இனத்தைத் தூய்மைப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் அதற்கான தேவை, அதற்கு
’தடை’யாக, ’பொருளாதார சுமையாக’ இருக்கும் மனநலம் பாதித்தவர், மனவளர்ச்சி
குன்றியவர் என பலவிதமானவர்கள் வலுக்கட்டயாமக கருத்தடை செய்யப்பட்டனர். அதே
சமயம் மக்கள் ஆதரவை வலுப்படுத்த திரைப்படங்கள் மூலமாகவும், பல்வேறு அரசு
செய்தித் தொடர்பு நிறுவனங்கள் மூலமாகவும் ஹிட்லரின் கட்டாயக் கருத்தடை சேவை
நியாயப்படுத்தப்பட்டது.
பள்ளிக் கணக்குப் பாடப்புத்தகத்தில் உபயோகமில்லா உயிர்களின்
பொருளாதாரச் சுமைக்குறித்தும் மாணவர் மனதில் புகுத்தப்பட்டது. கத்தோலிக்க
மதகுருமார்களின் எதிர்ப்பொலியும் ஒரு சில மருத்துவர்களின் எதிர்ப்பொலியும்
சேர ஹிட்லர் கட்டாயக் கருத்தடையை தற்காலிகமாக 1938-வாக்கில்
நிறுத்திவைத்தார். இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில் தன்னுடைய ஆரிய
இனத்தூய்மையை சுலபமாகச் செயல்படுத்தவும் முடியும் என்று ஹிட்லர் கூறினார்.
1939-ன் பிற்பகுதியில் கருணைக்கொலை என்ற பெயரில் சுலபமாய் தன்
திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று ஹிட்லர் தெரிவித்தார். போர்காலத்தில
மனித உயிர்களின் மதிப்பு மலிவான போது ஹிட்லர் தன்னுடைய செயல் திட்டத்தை
வேகமாய் செயல்படுத்த தொடங்கினார். தன்னுடைய தலைமை மருத்துவர் காரல்
பிரான்ட்ட்க்கு அப்பணியயை செவ்வனே அரங்கேற்றி செயல்படுத்தவும் அதிகாரம்
வழங்கினார். மாற்றுத்திறனாளிகள், வயதுமுதிர்ந்தோர் மீதான திட்டமிட்டே
கட்டமைக்கப்பட்ட வன்முறைகளுக்கு போர் ஒரு கரும்போர்வையாகவே அமைந்தது.
கருணைக் கொலைகள் என்ற சொல்லுக்கு புதிய உள்ளர்த்தம்
கற்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் பிறவிக்குறைபாடோடு பிறக்கும்
குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியக் குழந்தைகள் நச்சு மருந்துகள் கொடுத்து
கொல்லப்பட்டனர்.
வயதானவர்களுக்கு ரகசிய திட்டமான ‘ஆக்டியான் டி4 திட்டம்’
செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி அரசு, மற்றும் மத நிறுவனங்களில்
தங்கி வைத்தியம் பார்க்கும் நோயாளிகளை, வயது முதிர்ந்தவர்களுக்கான
விடுதிகளில் இருப்பவர்களை ஒரு குழு ஆய்வு செய்து ஒரு தாளில் அவர்களை உடல்
நிலை மட்டுமன்றி, அவர்களின் பயன்பாடு, வேலை செய்யும் திறன்பற்றிய தகவல்களை
சேகரித்து மேலிடத்திற்கு அனுப்பும்.அந்த தகவல்களை ஒரு குழு கூறாய்வு
செய்தனர்.அந்த குழுவில் மருத்துவர்கள், குறிப்பாக மனநலமருத்துவர்கள்
இருந்தனர். நோயர்களையோ, வயோதிகர்களையோ நேரடியாக பாராமல் ஒரு காகிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வைத்து அவர்கள் பென்சில்களால் குறியிட்டனர்.
சிகப்புக் கூட்டல் குறி- மரணம், நீலக் கழித்தல் குறி- உயிரோடு
இருக்கலாம், கேள்விக்குறி- மறுஆய்வு என மனித உயிர்கள் காகிதத் தகவல்களின்
அடிப்படையில், வாழ்வதற்கு தகுதியானவரா இல்லையா எனத் தீர்மானிக்கப்பட்டு,
குறியீடுகளாகச் சுருக்கப்பட்டனர். சிகப்பு கூட்டல் குறியினர் அவரவர்
தங்கும் இடங்களிலேயே கொல்லப்பட்டனர். முதலில் விஷ ஊசியின் மூலம் உயிர்
பறிக்கப்பட்டு பின்னர் அவர்களை எரித்து சாம்பலாக்கினர். பிற்கால ஆய்வில்
விஷ ஊசி செலுத்தும் முறையைவிட கார்பன் மோனோ ஆக்ஸைடு வாயு செலுத்துவது
சாவின் வேதனையைக்குறைக்கும் என்றும், சுலபான வழிமுறையாகவும் இருந்ததால்
அந்த முறை பின்பற்றப்பட்டது.
ஹார்தியம், சோனன்ஸ்டின், கிராஃப்னெக், பெர்ன்பெர்க், ஹாடமார்,
பிராண்டென்பெர்க் ஆகிய ஆறு ஊர்களிலும் தனியே கட்டப்பட்ட கொல்கலன்கள்,
‘கூட்டல் குறிகளுக்கு’ வாயு சேம்பர்களில் விஷவாயு குளியல் செலுத்தப்பட்ட,
கூட்டல் குறிகளை சாம்பலாக்கிக் கரைத்துவிட உதவியது.
ஆரிய இனத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கிலும், பொருளாதார வீண்
சுமையைக் குறைப்பதிலும் 1940 ஜனவரியிலிருந்து 1941 ஆகஸ்டு வரை 70273
கூட்டல் குறிகள் சுழியங்களாக ஆக்கப்பட்டன. மிகவும் ரகசியமாய்
அரங்கேற்றப்பட்ட டி4 திட்டம் வெளியே கசியத் தொடங்கியதும் ஒரு சில ஊர்களில்
கத்தோலிக்க திருச்சபையும், சில நீதிபதிகளும் எதிர்த்தனர். எதிர்ப்புக்குரல்
வலுக்கவும் அதை தொடக்கத்தில் ஒடுக்கும் முயற்சியிலும் ஈடுபடத்தொடங்கினர்.
இறுதியாக எதிர்ப்புக் குரல்களால் 1941 ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று ‘டி4’
திட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் 1941- 1945 வரை ’T 14 F 13’ என்ற திட்டத்தின்
கீழ் சிறைக்கைதிகள் ஆய்வு செய்யப்பட்டு, உடல் உழைப்பபுக்குத்
தகுதியில்லாதவர், நோயினால் பாதிப்படைந்தவர் என்று 20000 த்திற்கும்
மேலானோர் கொல்லப்பட்டனர். யூதர்கள், ஜிப்சிகள், போலிஸ், ருசிய, ஜெர்மானிய
சிறைக்கைதிகள் இதில் அடங்குவர்.
நிற்க!

“நியாயப்படி
இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச
காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம்
நன்றாகச் செய்யும்போல.”
மகாராஷ்டிர வங்கிப் பணியாளர் பிரேமலதா ஷிண்டேவைப் பற்றி
ஜெயமோகன் எழுதியவைதான், இந்த வரிகள். இதில் கொப்பளிக்கும் எதிர்மறை
உணர்வுகளும் ’ஆக்டியான் டி4’ திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும் என்ற
உள்ளர்த்தத்திலும் அந்த எழுத்துகளில் ஒளிந்திருக்கும் அரசியல் அதற்கான
திறவுகோலாகவும் அமைகிறது.
வயது முதிர்ந்தவர், மாற்றுத்திறனாளி, உடல் நோயால்
பாதிக்கப்பட்டவர் வேலையில் நிதானமாக இருப்பவர்கள் தூக்கியெறியப்படவேண்டும்,
கழுத்தைப்பிடித்து வீச வேண்டும் என்பது டி4 திட்டம். அதன் கீழ்
எல்லோரையும் பரிசோதித்து, பொருளாதார ரீதியாக உபயோகற்றவர் ,வேலைக்கு
லாயக்கற்றவர் , வாழ்வதற்கே தகுதியற்றவர் என்று முத்திரைக்குத்தி
சமூகத்திற்கு சுமையானவர்கள் என்று சிகப்பு பென்சிலில் கூட்டல்குறி
இடப்பட்டது போன்று, ஜெயமோகனின் வரிகள் பிரேமலதா ஷிண்டேவை வேலைக்குத்
தகுதியில்லாவர் என முத்திரைக்குத்தி சிகப்பு பென்சிலில் கூட்டல் குறி
போட்டுள்ளார். அவருடைய கருத்தை வலுப்படுத்த, ’சமூகத்தில், அரசு துறை மிக
மோசம்; தனியார் துறையினர் திறமைசாலிகள்’ என்ற கோபத்தை மிகைப்படுத்தி,’அரசு
நிறுவனங்களில் தகுதியில்லாதவர், சோம்பேறிகள் மற்றும் வயோதிக நோயர் வேலையே
செய்யாமல் வெட்டியாக இருக்கைகளுக்கு சுமையாக உள்ளார்கள், அவர்களை விரட்ட
வேண்டும்’ என்ற மத்திய வர்க்க உணர்வுகளைத் தட்டியெழுப்பி, அந்த
சிகப்புக்கூட்டல் குறியை வலுப்படுத்தி நியாயப்படுத்தவும் செய்துள்ளார்.
இப்போது நிலவிவரும் பொருளாதார மந்தத்தன்மை, பொதுத்துறை
நிறுவனங்களை வேகவேகமாய் சுக்கு நூறாய் உடைத்து ஊதித்தள்ளும் அரசு,
தனியார்மயமாக்கலின் கொடூரத் தாக்கதல் என்று புதிய தாராளமயமாக்கலின்
கோரப்பற்கள் கடித்துக் குதறுவதற்கு, ஆட்களை காவு கேட்கிறது. பொருளாதாரம்
மந்தமாக இருக்கும் சூழலில் தேவையற்றவரைக் களையெடுக்கவேண்டும், ஆட்குறைப்பு,
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய ஓய்வு தேவையான ஒன்று; அப்போது
தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்; நாட்டை வல்லரசாக தூக்கி நிறுத்த
முடியும் என்ற வலதுசாரி அரசின் கர்ஜனைகளும் நாளை காதைப் பிளக்கும். மத்திய
வர்க்கத்தின் கூட்டு மனசாட்சியைத் தூண்டி, அரசு தன் செயல்களை
நியாயப்படுத்தி வேகவேகமாய் நடைமுறைப்படுத்தும்.ஜெயமோகனின் அந்த வரிகள் நாளை
வரவிருக்கும் புதிய திட்டத்தின் முன்வரைவாகவே அமைந்துள்ளது.
சமூகத்தில் யார் வாழவேண்டும் , வேலை நிறுவனங்களில் எத்தகையவர்
பணிபுரியவேண்டும், எவரெவரை களையெடுத்து ’சமூகத்தைத் தூய்மைப்படுத்தும்
(societal cleansing)’ பணியை மேற்கொள்ளும் ஜெயமோகனின் ‘ஆக்டியன் டி4’
எழுத்துக்களை நாம் சுலபமாய் புறந்தள்ளிவிட முடியாது. மிகக் கொடுரமான ஓர்
இறுதித்தீர்வை நோக்கிய பயணத்தின் முன்னுரையாகவே ஜெயமோகனின் வரிகள்
அமைந்துள்ளன . கொல்கலன்களின் புகைக்கூண்டிலிருந்து வரும் பிணவாடையின்
துர்நாற்றமும், எலும்புகளை நொறுக்கி உடைக்கும்போது ஏற்படும் அருவருப்பான
சத்தமும் சாம்பல் துகள்களுமே அந்த வரிகளில் உறைந்துகிடக்கின்றன.
Dr.அரவிந்தன் சிவகுமார், மனநல மருத்துவர். thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக