ஞாயிறு, 20 நவம்பர், 2016

RSS ஆடிட்டர் குருமூர்த்தி :மக்களின் சிரமம் தவிர்க்க முடியாது..மக்களின் ஆதரவு பாராட்டதக்கது

புதுடில்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது என பொருளாதார நிபுணர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவர் தொலைகாட்சி ஒன்றிற்கு விரிவான பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் குருமூர்த்தி பேசிய முக்கிய அம்சங்கள்: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை முன்னெப்போதும் எடுக்கப்படாத, மிகுந்த ஆபத்துகள் நிறைந்த அரசியல் முடிவு. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு எதிரானது. தேச பாதுகாப்புடன் தொடர்புடையது.இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டு மிக ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது.
சிரமங்கள் தவிர்க்க முடியாதது


மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது. இந்த நடவடிக்கையை சிரமமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இந்திய அரசியல் சூழலில் இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததே மிகப்பெரிய விஷயம். மக்களின் சிரமங்களை தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. சிலர் சொல்வதை போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் திட்டம் கசிந்திருக்கும்.
புதிய நோட்டுகள் தேவையான அளவு அச்சடிக்கப்பட்டு அவை நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டால் அனைவருக்கும் முன்பே திட்டம் தெரிந்து விடும். திட்டம் பயன் அளிக்காமல் போய்விடும்.

பிரதமர் மோடி ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் 2 நாட்கள் வங்கி ஏ.டி.எம்.,கள் செயல்படவில்லை. முதல் 2 நாட்களில் 1.25 லட்சம் மையங்களுக்கு புதிய நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டது. அடுத்து 2 நாட்களில் 3 லட்சம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பண கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்


குறிப்பாக, நக்சல் பாதித்த பகுதிகள், பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள் என அபாயகரமான பகுதிகளுக்கு மிக ரகசியமாக பாதுகாப்புடன் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பார்ப்பதை போன்று சில நாட்களுக்குள்ளாகவே அனைத்து இடங்களுக்கு தேவையான பணத்தை கொண்டு செல்ல முடியாது. அதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளது. இருப்பினும் மக்களின் பணத் தட்டுபாடு படிப்படியாக குறையும்.

தேச பாதுகாப்பு


ரூபாய் நோட்டு ஒழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. பயங்கரவாத அமைப்புகளிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் செல்லாமல் போனது. 50 - 60 ஆயிரம் கோடி அளவிலான பணம் நக்சல் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணம் முழுவதும் தற்போது வெறும் காகிதமாக மாறியுள்ளது.

நிதி பற்றாகுறையை குறைக்கும்


இந்தியா பொருளாதாரத்தில் 90 சதவீதம் பணப்புழக்கம் சார்ந்த ரொக்க பொருளாதாரம் ஆகும். நாட்டில் புழக்கத்தில் உள்ள பண மதிப்பில் 87 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் என சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட 14 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் உள்ளது. 4 லட்சம் கோடி கறுப்பு பணமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவை மீண்டும் புழக்கத்திற்கு வராது. இதன் மூலம் அரசு கஜானாவில் 4 லட்சம் கோடி வரவு செய்யப்படும். இது அரசின் நிதி பற்றாகுறையை குறைப்பதற்கு பெரிதும் உதவும். மீதி உள்ள 10 லட்சம் கோடி மக்களிடம் புழக்கத்தில் சுற்றி வரும்.

வங்கிகள் வளர்ச்சி பெறும்


அரசின் நடவடிக்கையால் வங்கிகளில் சேமிப்பு பெரும் அளவு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் பணம் இல்லாத பொருளாதாரத்திற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், குறைந்த மற்றும் எல்லையுடைய பண பொருளாதாரத்திற்கு மாற உள்ளோம்.

வீட்டில் முடங்கிய பணம் வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் பல நன்மைகள் விளையும். உதாரணமாக, வங்கிகள் தங்களிடம் உள்ள பண இருப்பில் 75 சதவீதத்தை கடனாகவோ அல்லது தொழில்களுக்கு முதலீடாகவோ அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்


அதன்படி, நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிகப்படியான கடன் வழங்கப்படும். அந்த கடனுக்கான வட்டி தற்போது உள்ளதை காட்டிலும் குறையும். தற்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகாக வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த நிலை முற்றிலும் மாறும்.

வங்கியில் உள்ள அதிகளவு பண இருப்பு கடன், முதலீடு போன்றவற்றால் அதன் மதிப்பு 3 அல்லது 4 மடங்கு உயரும்.

இதன் மூலம் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஜி.டி.பி., வளர்ச்சி உயர்வதால் மட்டும் நாட்டின் வேலைவாய்ப்பு அதிகரிக்காது. வேலைவாய்ப்பு துறையில் அதிக முதலீடுகள் செய்வதன் மூலமே வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.

நிலங்களின் விலை குறையும்


ரியல் எஸ்டேட் துறையை பொறுத்த வரை 100 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பினாமிகளிடம் உள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும். நகர்புறங்களில் உள்ள நிலங்களின் மதிப்பு 30 லிருந்து 40 சதவீதம் குறையும்

மக்கள் பாராட்டுக்குரியவர்கள்


பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தந்துள்ளார்கள். இந்திய நாட்டு மக்களின் பொறுமை பாராட்டத்தக்கது. வங்கிகள், ஏ.டி.எம்.,மையங்களில் மிகுந்த பொறுமையுடன் 5 மணி நேரம் வரை கூட காத்திருந்து பணத்தை எடுத்து செல்கின்றனர். மக்களின் ஆதரவு பாராட்டுக்குரியது.

துணிச்சல் மிகு நடவடிக்கை


ஊழலால் நாட்டின் பொருளாதாரம் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. நாட்டின் அரசியல், சமூக கட்டமைப்பு, தார்மீக பொறுப்புணர்வை பாதிக்க கூடியது.

ஊழலுக்கு எதிரான பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமான துணிச்சல் மிகு நடவடிக்கை.
இவ்வாறு அவர் பேசினார்
தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: