சனி, 26 நவம்பர், 2016

அப்போலோவிற்குள் ரோபோடிக் இயந்திரம்... மருத்துவர்கள் வேலையை இனி இயந்திரம் பார்க்குமோ?

அப்போலோ
“முதல்வர் ஜெயலலிதா மனவலிமை மிக்கவர் என்பதால் விரைவாக குணமடைந்துவிட்டார். இயல்புநிலைக்கு திரும்பி உள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் உடல்நிலை குறித்து பிரதாப் ரெட்டி இப்படிக் கூறுவது முதல்முறை அல்ல. “முதல்வர் நலமுடன் உள்ளார், வீடு திரும்புவதைப் பற்றி அவர்தான் முடிவு செய்யவேண்டும்” என்று முதலில் பேசியவர், அடுத்த முறை “முதல்வரின் உடல் உறுப்புகள் சீராவதற்கு ஏழு வாரங்கள் ஆகும்” என்று சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் இன்று “பிசியோதெரபி சிகிச்சை” என்று மீண்டும் பிரதாப் ரெட்டி சொல்லியுள்ளார். முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடும் தகவல், கடந்த மாதமே வெளியானது. குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து இந்த சிகிச்சை அளிக்க இரண்டு பெண் மருத்துவர்கள் அப்போலோவுக்கு வருகை தந்தனர். ஆனால், ஒரு மாதம் கடந்த பிறகும் ஏன் இப்போது பிசியோதெரபி சிகிச்சை பற்றி மீண்டும் பிரதாப் ரெட்டி பேசுகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

 முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து முழுமையான தகவல் எதுவும் இதுவரை யாராலும் உறுதியாக சொல்லப்படவில்லை என்பது நிதர்சன நிலை. அதுமட்டுமின்றி முதல்வரைத் தனி அறைக்கு மாற்றியதாக அ.தி.மு.க-வினர் கொண்டாடி வந்த நிலையில் அந்தத் தனி அறையும் கிட்டதட்ட ஐ.சி.யூ நிலைதான் என்ற தகவல் அ.தி.மு.க-வினரை சோர்வடையச் செய்துவிட்டது.
இந்நிலையில், இன்று காலை அப்போலோ மருத்துவமனைக்கு ரோபோடிக் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த இயந்திரம் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டிருப்தாகக் கூறப்படுகிறது. இந்த இயந்திர விவகாரம் குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்கள் இதுதான் “முதல்வருக்குக் கழுத்தில் துளைபோடப்பட்டு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப் பட்டுள்ளதால், பேசுவது கடினமாக இருக்கிறது. எனவே, படுக்கையில் இருந்தபடியே அவரைப் பேச வைப்பதற்கு இப்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரோபோடிக் தெரபி முறையில் இயந்திரத்தின் உதவி கொண்டு உடல் அசைவை மேற்கொள்ளும் சிகிச்சை முறை பிரசித்தி பெற்றது. அந்த இயந்திரத்தை இப்போது அப்போலோவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சையோடு, ரோபோட்டிக் தெரபி சிகிச்சையையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது முடிவு செய்யப்படவில்லை. வீடு திரும்பும் அளவுக்கு அவரது உடல்நிலை இப்போது இல்லை என்பது தெரிகிறது” என்கிறார்கள்.

மருத்துவர்களைத் தாண்டி இப்போது இயந்திரத்துக்குப் போய் விட்டார்கள் அப்போலோ நிர்வாகத்தினர்.   விகடன்.காம்

கருத்துகள் இல்லை: