புதன், 19 அக்டோபர், 2016

தலித் என்றால் நன்றாக படிக்கக் கூடாதா?: வகுப்பறையில் சக மாணவர்களால் நொறுக்கப்பட்ட 16 வயது மாணவன்


thetimestamil.com :சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில், வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ ஒன்றில் இரண்டு பள்ளி மாணவர்கள் சேர்ந்து சக  மாணவனை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது, அதை பார்த்தவர்களை எல்லாம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இது நடைபெற்றது இந்தியாவிலா ? நிஜமாகவே பள்ளிதானா அது ? இல்லை சினிமா கட்சிகளா ? என்று பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், பீகாரின் முஸாபர்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில்தான் அந்த சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அடித்த இரண்டு மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ள சூழலில், மிருகத்தனமான அடி வாங்கிய பனிரெண்டாம் வைப்பு மாணவன், NDTV-க்கு அளித்துள்ள பேட்டி, படிப்பவர்களை பரிதவிக்க வைக்கிறது. கடித வடிவிலான அந்த மாணவனின் பேட்டி கீழே…..
பீகாரின் முஸாபர்நகரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் நான்.

என்னை ஏன் அப்படி மிருகத்தனமாக தாக்கினார்கள் ? நான் ஏன் அமைதியாக இருக்கிறேன் ? என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக என்னிடம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.போலீசிடம், உடன்  படிக்கும் மாணவர்களிடம், சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவினால், காரணம் கேட்கும் மீடியாவிடம் என்று அனைவரிடமும் அந்த ஒரே காரணத்தை சொல்லி சொல்லி எனக்கு மிகவும் சோர்வாகவும் , விரக்தியாகவும் இருக்கிறது.
என்னுடைய அப்பா ஒரு ஆசிரியர். எல்லாவற்றிலும் நான் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வைத்த பெயரின் அர்த்தம் “The Best”. சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, என்னை முஸாபர்நகரில் உள்ள  பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து படிக்க வைத்தார். நானும் அவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பை அளித்தேன்.
உழைப்பு காரணமாக படிப்பில் நான் சிறந்து விளங்கியது அப்பாவை மகிழ்ச்சிப்படுத்தினாலும், என்னை தனியனாக்கியது. பிரச்சனைகளுக்கும் உள்ளாக்கியது.
தலித்தாகிய நான் நன்றாக படிப்பது என்னுடைய வீட்டினருக்கு நம்பிக்கை சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும்,  வகுப்பறையில் அவமானத்தையும், கொடுமைகளையும் மட்டுமே எனக்கு பெற்றுத் தந்தது.
உங்களுக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். கடந்த இரண்டு வருடங்களாகவே நான் ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட அந்த இரண்டு சகோதர மாணவர்களால் தாக்கப்பட்டு வந்திருக்கிறேன். வாரத்திற்கு ஒரு முறையாவது என் முகத்தில் துப்புவார்கள். ஒருவர் என்னுடைய வகுப்பில் படிப்பவர். மற்றவர் என்னை விட இளையவர். அவரும் இதே பள்ளியில்தான் படிக்கிறார்.
அந்த இரண்டு மாணவர்களின் தந்தை, அரசியல் செல்வாக்கு மிகுந்த கிரிமினல் என்பதால், எனக்கு நடக்கும் கொடுமையை பற்றி என்னுடைய வீட்டில் சொல்வதற்கும் நான் பயந்திருகிறேன்.
நீங்கள் சமூக வலைதளங்களில் பார்க்கும் அந்த வீடியோ ஆகஸ்ட் 25-ம் தேதி எடுக்கப்பட்டது.
என்னை அடிப்பது என்பது தனக்கு மிகுந்த இன்பத்தை அளிப்பதாக கூறிய, என்னை அடித்த மாணவன், அதன் காரணமாகவே அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டான்.
வகுப்பில் நான் அதிக மதிப்பெண்கள் பெறுவது, அந்த இரு மாணவர்களில் என்னுடைய படிப்பவனுக்கு ஆத்திரத்தை அளித்திருந்தது. இதற்காகவே என்னை வம்பிழுத்து கொண்டிருப்பார்கள் அவர்கள்.
நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவன் என்று தெரிந்த நாளில் இருந்து எனக்கான சித்திரவதைகள் தொடங்கியது.
அந்த வீடியோவில் நீங்கள் பார்த்திருக்கலாம். நாற்காலியில் அமர்ந்திருக்கும் என்னை, அவர்கள் இருவரும் தலையில் அடிப்பதை, நாற்காலியில் இருந்து கீழே தள்ளப்படுவதை, மிதிக்கப்படுவதை, சுவரில் நிற்க வைத்து, என் முகத்தில் அறையப்படுவதை, எல்லாவற்றையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.
மார்ச் மாதம் என்னுடைய இறுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. ஆனால் நான் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்.
நீங்களே சொல்லுங்கள். நான் எப்படி இந்த பிரச்சனைகளை சமாளிப்பது. எப்படி பரீட்சைக்கு தயாராவது ??? …..

கருத்துகள் இல்லை: