
காவிரி
நதிநீர் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகம், தமிழ்நாடு,
புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் தற்போதைய நீர் இருப்பு, நீர் தேவை
உள்ளிட்டவை தொடர்பான உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, மத்திய
அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா
தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு நேரில் ஆய்வு
மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ‘இந்தக் குழு,
நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தமிழ்நாட்டுக்கு பல பாதகங்களை இழைத்துள்ளது’
என ஆதங்கக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.">பாதகங்களின் பட்டியல்

மாண்டியாவில்
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பணத்தைக்
கொடுக்காததுபோன்ற காரணங்களாலேயே அங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
ஆனால், அவர்கள் வறட்சியால் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வுக் குழு சொல்கிறது.

தமிழகத்தில், 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். ஆனால், இந்தத் தகவலை ஆய்வுக்குழு பதிவு செய்யவே இல்லை.

கர்நாடகம்,
காவிரி நீரை தராததால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் காவிரி டெல்டா
மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடக்கவில்லை. இதனால், இங்குள்ள
விவசாயிகளுக்கு வாழ்வாதார இழப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நடப்பு
ஆண்டில் ஏற்பட்டுள்ள 4 லட்சம் ஏக்கர் குறுவை இழப்பையாவது ஆய்வுக் குழு
அறிக்கையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

கர்நாடகாவில்
4.27 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு 36.38 டி.எம்.சி
தண்ணீர் தேவைப்படுவதாக ஆய்வுக் குழு சொல்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 4.25
லட்சம் ஏக்கரில் கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிர்கள் குறித்து ஆய்வுக்
குழு கொஞ்சமும் கவலைப்படவில்லை. சுமார் 5 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி
ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை எல்லாம் ஆய்வுக் குழு
மறைத்து விட்டது.

தற்போது
சம்பா சாகுபடிக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ஆய்வுக் குழு
பரிந்துரைக்கவில்லை. இதை, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்,
கர்நாடகாவுக்குச் சாதகமாக உச்ச நீதி மன்றத்தில் எடுத்துரைத்தார்.
இதனால்தான் ஏற்கனவே உத்தரவிடப்பட்ட 2 ஆயிரம் டி.எம்.சி நீரையே திறந்துவிடச்
சொல்லி, அக்டோபர் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளை ஆய்வுக் குழு பார்வையிடவே இல்லை.


காவிரி
டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை 30 முதல் 35
சதவிகிதம் பற்றாக்குறை. வடகிழக்குப் பருவமழை இரு வாரங்களின் கணக்குப்படி,
50 முதல் 85 சதவிகிதம் பற்றாக்குறை. காவிரி தண்ணீரும் கிடைக்கவில்லை.
மழையும் இல்லை. இதை, ஆய்வுக் குழு பதிவுசெய்யவில்லை.

கோடை
சாகுபடிக்கு காவிரி நீரை பயன்படுத்தக் கூடாது என நடுவர் மன்றத் தீர்ப்பில்
சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகம் காவிரி நீரை பயன்படுத்தித்
தாராளமாகக் கோடை சாகுபடி செய்கிறது. இதனால்தான், மே மாதத்துக்குப் பிறகு
கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைகிறது. இந்த உண்மையை ஆய்வுக் குழு
மறைத்துவிட்டது.

கிருஷ்ணராஜசாகர்,
கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளை மட்டுமே ஆய்வுக் குழு ஆய்வு
செய்தது. காவிரி ஆறோடு இணைக்கப்பட்டுள்ள அணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான
ஏரிகளை ஆய்வு செய்யவில்லை.

இரு
மாநிலங்களிலும் வறட்சி என ஆய்வுக் குழு சொல்வது நேர்மையான செயல் அல்ல. இரு
மாநிலங்களும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும்
சொட்டுநீர், தெளிப்புநீர் உள்ளிட்ட நுண் பாசன முறைகளை மேற்கொள்ள வேண்டும்
எனவும் ஆய்வுக் குழு சொல்வது ஏற்கக்கூடியதல்ல.

காவிரி
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மட்டுமே செய்ய முடியும். இந்தப்
பகுதிகளில் பெய்யக்கூடிய சராசரி மழை அளவு 1100 மில்லி மீட்டர். இதனால்
நுண்நீர் பாசனத்தில் செய்யக்கூடிய புஞ்சைப் பயிர்களை இங்கு சாகுபடி செய்ய
முடியாது.

கர்நாடகாவின்
காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் அனைத்துமே மேடுகள் நிறைந்த
புஞ்சை நிலங்கள். அங்கு பெய்யக்கூடிய மழையின் சராசரி அளவு, 600-680 மில்லி
மீட்டர். முன்பு, இந்தப் பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம்
உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள்தான் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.
இயல்புக்கு முரணாக நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு மாறியதால்தான்
அங்கு காவிரி தண்ணீரின் தேவை அதிகரித்தது.. இந்தத் தகவல்களையும்
ஆய்வுக்குழு பதிவு செய்யவில்லை.

பெங்களூரு
குடிநீருக்கு காவிரி நீர் தேவை என கர்நாடகம் சொல்கிறது. கர்நாடகாவின்
கிருஷ்ணா நதியில் உள்ள அகமாட்டி அணைக்கு ஜூன் முதல் அக்டோபர் வரை 420
டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. நாரயணபுரம் அணைக்கு 305 டி,எம்.சி. தண்ணீர்
வந்துள்ளது. இதுபோல், இன்னும் பல ஆற்றுநீர் ஆதாரங்கள் அங்கு ஏராளமாக உள்ளன.
அவைகளில் உபரி நீர் அதிகளவில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி
பெங்களூருவின் குடிநீர்த் தேவையை எளிதாக நிறைவு செய்து கொள்ளலாம். இதனை ஏன்
ஆய்வுக்குழு வலியுறுத்தவில்லை? கர்நாடகாவில் மேற்கு நோக்கிப் பாயக்கூடிய
13 ஆறுகளின் 2 ஆயிரம் டி.எம்சி. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஏன் அதை
முறைப்படுத்தி பயன்படுத்த கர்நாடகம் மறுக்கிறது? இது குறித்து ஆய்வுக்குழு
ஏன் வாய் திறக்கவில்லை.


தமிழ்நாட்டிற்கு
பெரிய அளவிலான ஆற்றுநீர் ஆதாரம் காவிரி மட்டும்தான். கர்நாடகாவில் காவிரி
உள்பட கிருஷ்ணா, கோதாவரி, பாலாறு என ஆற்றுநீர் ஆதாரங்கள் ஏராளமாக
இருக்கின்றன. இதையும் ஆய்வுக்குழு பதிவு செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாடும்,
புதுச்சேரியும் தங்களது தண்ணீர் தேவையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதை கர்நாடகம் மதிக்க வேண்டும் என ஆய்வுக்குழு சொல்லியுள்ளது. இதில்
திட்டவட்டமான, தெளிவான அறிவுரை கர்நாடகாவுக்கு சொல்லப் படவில்லை. அதேசமயம்,
கர்நாடகாவின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவையை தமிழ்நாடு மனதில் கொள்ள
வேண்டும் என ஆய்வுக்குழு அறிவுரை சொல்கிறது.
‘‘இது
முழுக்க முழுக்க கர்நாடகாவுக்கு சாதகமான அறிக்கை. காவிரி விவகாரத்தில்
கர்நாடகாகவுக்கு ஆதரவாக ‘காவி’ வாடைதான் வீசுகிறது” என்று
குற்றம்சாட்டுகிறார்கள் தமிழக விவசாயிகள்.
- கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷீத், க.சதீஷ்குமா விகடன்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக