
இன்று கூட தொலைக்காட்சிகளிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப்படும் பாட்டுப் போட்டி, நடனப்போட்டி, பேச்சுப் போட்டி என்று ஒவ்வொரு கலைப் போட்டிகளிலும் பெண்களில் பலர் எத்தனை ஆசையோடு கலந்து கொள்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் கை நிறைய பரிசு வாங்கினதற்காக, ஆல் ரவுண்டர் ஷீல்டு வாங்குவார்கள். ஆனால், காலப் போக்கில் இவர்கள் எங்கு போகிறார்கள்?
ஒரு நாற்பது வயது பெண்மணி தன் மகளுடனோ, மகனுடனோ சேர்ந்து நடனம் ஆடுவதை நம் குடும்பங்களில் பார்க்க முடியுமா? ஒரு வீட்டில் மனைவியோ, அம்மாவோ உறக்கப் பாடி சந்தோஷப்பட முடியுமா? கலாச்சாரத்தின் பெயரால், பெண்ணின் உடல் மீது எப்போதும் ஒரு சுமை அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் தன் உடலை, தான் ஆசைப்பட்டது போல் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. அதனால் தான், பதினான்கு வயதில் துறந்த ஆசையை, 24 வருடங்கள் கழித்து, தானே சுயமாக எடுத்த முடிவின் மூலம் தெருவில் ஒரு பெண்ணால் தான் ஆசைப்பட்டது போல் ஓட முடிந்திருக்கிறது. ஒருவேளை அந்த கிராமத்தில் அப்படி ஒரு விழா நடக்கவேயில்லை என்றால், அவருடைய ஆசை நிறைவேறியே இருக்காது அவர் மரணம் வரை. இதுதான் இங்கு வாழும் பலகோடி பெண்களின் நிலை.
ஒரு பெண் தான் ஆசைப்பட்டது போல திருமணம் செய்ய முடியாது; ஆசைப்பட்டது போல படிக்க முடியாது; ஆசைப்பட்டது எதுவுமே செய்ய முடியாது. அதுவும் அவளது உடலை அவள் விருப்பத்துக்கிணங்க ஒன்றும் செய்ய முடியாது. பெண்களே… உங்கள் உடம்பை எப்போது உங்கள் இஷ்டப்படி வளைத்து இருக்கிறீர்கள்? எப்போது கடைசியாக குதித்து இருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது உங்கள் ஆசைப்படி ஓடியாடி டென்னிஸ் விளையாடி இருக்கிறீர்கள்? அப்படி எதுவும் செய்திருந்தால் கூட, அதுவும் உடற்பயிற்சி என்ற காரணத்தால், அவர்கள் சொன்னபடி உங்கள் உடம்பை குனிந்து, நிமிர்ந்து, வளைந்து… அதற்கு என்று ஒரு ஆசனத்தின் பெயரை வைத்திருப்பீர்கள்.
இதற்கு காரணம் இந்த கலாச்சாரம் கொடுக்கும் அழுத்தம் மட்டுமல்ல; நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் அழுத்தமும் காரணம். நம் உடம்பை அப்படி வளைக்கக்கூடாது; ஆடக்கூடாது; பாடக்கூடாது. அப்படி செய்தால் என் கணவருக்குப் பிடிக்காது; மகனுகுப் பிடிக்காது; மாமியாருக்குப் பிடிக்காது; அவருக்குப் பிடிக்காது; இவருக்குப் பிடிக்காது என்று நமக்கு நாமே பல கண்டிஷன்களைப் போட்டுக் கொள்கிறோம். அந்த கண்டிஷன்களை காலம் முழுவதும் நீடித்து வைத்திருக்கிறோம். இது நமது உடல், இதை நமது விருப்பதுக்கு ஏற்ப வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை நமக்குள் வந்தால் மட்டுமே, மாற்றம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் ஏற்படும். பெண்ணாகப் பிறந்து விட்டோம் என்பதற்காக ஏன் இந்த உடம்புக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்? ஒரே ஒருநாள் உங்களுக்குப் பிடித்தது போல் அட்லீஸ்ட் ஒரு பாடலுக்கு நடனமாடிப் பாருங்கள். உங்கள் மனம் எத்தனை ரிலாக்ஸாக இருக்கிறது என்று தெரியும். நம் உடல், நமக்கன்றி வேறு யாருக்கு?!
- நாச்சியாள் சுகந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக