புதன், 19 அக்டோபர், 2016

திரு .ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது

நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இந்தக்கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. துறைகள் மாற்றம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் செப்டம்பர் 22-ந்தேதி நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 11-ந்தேதியன்று கவர்னர் (பொறுப்பு) அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து அரசுத் துறைகளும், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. மேலும், அமைச்சரவை கூட்டங்களுக்கும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.


இன்று காலை கூடுகிறது

இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (19-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்துக்கு நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.

தற்போது தமிழகம், காவிரி நதிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதோடு, இதே பிரச்சினை தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிலும், குருவை சாகுபடிக்குத் தேவையான உடனடி தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த பிரச்சினை, அமைச்சரவைக் கூட்டத்தில் எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.

பருவமழை முன் எச்சரிக்கை

மேலும், வடகிழக்குப் பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

எனவே மழை காலத்தை இலகுவாக விட்டுவிடாமல் அதை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிய வருகிறது. அவைதவிர மேலும் சில பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்படலாம்.

இது 2-ம் கூட்டம்

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் அமைந்த புதிய அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை ஒரு அமைச்சரவைக் கூட்டம் நடந்துள்ளது. அந்த அமைச்சரவைக் கூட்டம், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் கடந்த ஜூலை 6-ந்தேதி நடந்தது. அப்போது நடக்க இருந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி அந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எனவே, தற்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டம், இந்த ஆட்சியில் நடக்கும் 2-வது கூட்டமாகும்  தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை: