
ஆந்திர மாநிலம், திருப்பதியில் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் வேணு என்பவர் திருப்பதி மற்றும் அருகிலுள்ள ஆன்மீக இடங்களுக்கு ஐந்து நாள் சுற்றுலாவை ஒருங்கிணைத்துள்ளார். இதற்காக, அதிக பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். புதன்கிழமை, வெங்கட்ராவ் பேட் என்ற கிராமத்துக்கு மக்களை ஏற்றுவதற்கு பேருந்து சென்றது. அப்போது, முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவுசெய்த மூன்று பேர் ஏறினர். அங்கு பேருந்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்ற தலித் ஒருவரும் அமர்ந்திருந்தார்.
அதைப்பார்த்த அம்மூவரும், அந்தப் பேருந்தில் பயணம் செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் ’பாலையா அருகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாது. அவரை பேருந்திலிருந்து இறக்கிவிடாவிட்டால், நாங்கள் எங்கள் பயணச்சீட்டை ரத்து செய்துவிடுமோம்’ என்று ஒருங்கிணைப்பாளர் வேணுவை மிரட்டியுள்ளனர். மூவரும் அப்படிக் கூறியதால், மொத்த சுற்றுலாவும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் வேணு, பாலையாவை பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார் என்று, டொகுதா பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமனராயன் சிங் கூறினார்.
இதுகுறித்து வேணு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையொட்டி, அம்மூவர்மீதும் எஸ்.சி./ எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
அண்மையில், பீகாரில் உயர்சாதி மாணவர்களைக் காட்டிலும் தலித் மாணவர் ஒருவர் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டார் என்பதற்காக மாணவர்கள் தலித் மாணவனை சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி நிமிடம்தோறும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை நடந்துகொண்டே இருக்கிறது.
2014ஆம் ஆண்டில் தலித்துகள் மீதான வன்முறை தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 388 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2015ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1198 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் தாக்கப்படுவதில் இந்திய அளவில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்து, இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக