வியாழன், 20 அக்டோபர், 2016

ஜெ.வுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி சிகிச்சை விவரம்

minnambalam.com :முதல்வர் ஜெயலலிதா, கடந்த கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். 29ஆவது நாளாக தீவிர சிகிச்சையில் உள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 29 நாட்களாக படுக்கையிலேயே இருப்பதால் புதிய சில பிரச்னைகள் உருவாகியிருக்கிறது. நுரையீரல் தொற்றால் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்க டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவசர சிகிச்சை நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகிய மருத்துவக் குழுவினரும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சையளித்தனர். இரண்டாம்கட்ட சிகிச்சைகள் முடிவடைந்தநிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் லண்டன் மருத்துவரும், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரும் திரும்பிச் சென்றனர்.
ஆனால் திரும்பி வரும்வரை அவருக்கு அளிக்கவேண்டிய சிகிச்சைகள் தொடர்பாக பல ஆலோசனைகளை வழங்கிச் சென்றிருக்கிறார்கள் மருத்துவர்கள். இங்கிருந்து தொலைபேசி, இ-மெயில், வீடியோ கான்பரன்ஸிங் மூலமும் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பேல், எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான குழுவினருடன் இந்த தொடர்பு வசதிகள் 24 மணி நேரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
29 நாட்களாக படுக்கையில் இருக்கும் ஜெயலலிதாவின் உடலில் சில இடங்களில் புண் ஏற்பட்டிருக்கிறது. அது உடம்பு முடியாமல் படுக்கையில் இருக்கும் எவர் ஒருவருக்குமே வரக்கூடியதுதான் என்றாலும், சர்க்கரை நோயாளியாக இருக்கும் ஒருவருக்கு புண் வரும்போது அது புதிய ஆபத்துகளை தோற்றுவிக்கலாம் என்பதால், பிசியோதெரபி சிகிச்சைமூலம் அவர் தசைகளை துடிப்போடு வைத்திருக்கவும், ரத்த நாளங்களை இயல்போடு வைத்திருக்கவும் பிசியோதெரபி சிகிச்சை முக்கியம் என்பதால் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் வந்து இன்று, மூன்றாவது நாளாக சிகிச்சையைத் தொடர்கின்றனர்.
படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு முதுகில் பிரஷர் சோர் எனப்படும் புண்கள் உடலில் வராமல் இருப்பதற்கான நிலையை அடிக்கடி மாற்றி தலையணையில் படுக்கவைக்கும் சிகிச்சைகளையும் பிசியோதெரபிஸ்ட்தான் செய்வார். எனவே, நீண்டநாட்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு பேசிவ் பிசியோதெரபி என்பது அவசியமான சிகிச்சையாகும். எனவே, சிங்கப்பூர் பெண் பிசியோதெரபி நிபுணர்கள் இருவரும் அடிக்கடி படுத்திருக்கும் நிலையை மாற்றுவது, கை கால்களுக்கு பேசிவ் பிசியோதெரபி அளிப்பதும் தொடரும். சிறிய வகை படுக்கைப் புண்கள் முதுகில், இடுப்பில்கூட படுத்திருக்கும்நிலையில் உருவாகலாம். இதற்கு ஐஸ் தெரபி கொடுப்பதன்மூலம் படுக்கைப் புண்களை ஆறவைக்கும் சிகிச்சையும் செய்ய முடியும். புண்கள் பெரிதாக இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகள் போட்டு, டிரஸ்ஸிங் செய்து புண்களை ஆற்றுவார்கள். பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் எளிதில் ஆறாது. எனவே, அதற்கு தனிக்கவனம் எடுக்க வேண்டும். மருத்துவர்களின் மேற்பார்வையில் இவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படும். பொதுவாக, படுக்கைப் புண் இருப்பவர்களுக்கு அழுத்தமில்லாமல் இருக்க வாட்டர் பெட் அளிக்கப்படும். ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு வாட்டர் பெட் அளிப்பதில்லை.
கை, கால்களை அசைக்காமல் வைத்திருந்தால் ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து கட்டிகளை ஏற்படுத்தும். இந்தக் கட்டிகள் ரத்த ஓட்டத்தில் சென்று நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடும். இதனால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இந்த நிலையை 'பல்மனரி எம்போலிசம் ' என்பார்கள். இந்த நிலை வராமல் இருக்கத்தான் 'பேசிவ் பிசியோதெரபி' பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. கை, மற்றும் கால்களுக்கு போதுமான பயிற்சிகளை அளிப்பார்கள். இயற்கையாக நம்மால் செய்யமுடிந்த மூவ்மெண்டுகளை, பிசியோதெரபி நிபுணர் அவரது கையால் அந்த மூவ்மெண்டுகளை நோயாளிக்கு வரும்படி கொடுப்பார். அதைத்தான் 'பேசிவ் பிசியோதெரபி' என்று சொல்கிறார்கள்.
நீண்ட நாட்கள் வென்டிலேட்டர் மூலம் சுவாசம் செய்வதால் நுரையீரலில் சளியும், தேவையற்ற திரவங்களும் சேரும். இதை வெளியே வரச் செய்வதற்கு சில பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக, வென்டிலேட்டரில் உள்ளவர்களுக்கு சக்சன் அப்பரட்டஸ் கருவியின் துணைகொண்டு அதிலிருக்கும் சிறு டியூபை தொண்டைக்குள் லேசாக விட்டு நுரையீரலில் சேர்ந்திருக்கும் சளியை, திரவங்களை எடுத்துவிடுவார்கள். இதனால் நுரையீரல் சுத்தமாக இருக்கும். தேவையற்ற நோய்த்தொற்று ஏற்படாது. அவர்களாகவே இருமி, சளியை துப்பும்நிலையில் இருந்தார்கள் என்றால் கிளாப்பிங் டெக்னிக்கைப் பயன்படுத்தி, மார்பில் சில இடங்களில் லேசாகத் தட்டுவதன்மூலம் இருமல் வந்து, சளியை வெளியே வரவைத்துவிடலாம். ஆனால் சுயநினைவில், பாதி நினைவில் உள்ளவர்களுக்கு சளியை துப்பச் சொல்லி வெளியேற்ற முடியாது. அவர்களுக்கு சக்ஸன் அப்பரட்டஸ் மூலம் மட்டுமே சளியை வெளியே எடுக்க வேண்டும். இந்த சிகிச்சைகளை அவர்கள் செய்ய வேண்டியிருக்கும். நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தால் தசைகள் வலிமையிழந்து வீணாக்கக்கூடும். இதை Muscle wasting என்று அழைப்பார்கள். தசையை நெடுநாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது வலிமையை இழக்கும் அல்லது செயலைக்கூட இழக்கக் கூடும். இந்த நிலை வராமல் இருக்க, தசைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். அதைத்தான் பிசியோதெரபி நிபுணர்கள் செய்கிறார்கள்.
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் மருத்துவமனை, பிசியோதெரபி சிகிச்சைக்கு பெரிய பகுதியை வைத்துள்ளது. முதுகு, கழுத்துப் பிரச்னைகளுக்கு தனிப்பிரிவு, விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு தனிப்பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொடுக்கப்படும் பயற்சிகளுக்கு தனிப்பிரிவு, வயதானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு, மூளை நரம்பியல் பிரச்னைகளுக்கு தனிப்பிரிவு என விரிவான அளவில் பிசியோதெரபி கொடுக்கும் வசதிகளைக் கொண்டது மவுண்ட் எலிசபத் மருத்துவமனை. எனவே, தீவிர சிகிச்சைப் பிரிவில் பிசியோதெரபி அளிப்பதில் தேர்ந்த நிபுணர்களான சீமா, மேரி ஆகியோரை மவுண்ட் எலிசபத் மருத்துவமனை முதல்வருக்கு சிகிச்சையளிக்க அனுப்பியுள்ளது. அவர்களும் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் முதல்வருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளித்துவருகிறார்கள். இந்த நிலையில், 27ஆம் தேதி ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சையைத் தொடரும் முன்பு, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலும், எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் சென்னை வருவார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: