புதன், 19 அக்டோபர், 2016

திருப்பதி வருமானத்தில் தெலுங்கானாவின் பங்கு கேட்டு மனு தாக்கல்

ஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தான வருமானத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 1000 கோடியை பங்காக தர வேண்டும் என்று கோரி + ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் அர்ச்சகர் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா உருவாக்கப்பட்டது. அப்போது திருப்பதி கோவில் வருமானத்தை இரு மாநிலங்களுக்கும் சமமாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தெலுங்கானா மாநிலத்திற்கு உரிய வருவாயை திருப்பதி தேவஸ்தானம் தராமல் உள்ளது. இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலிகுரி பாலாஜி வெங்கடேஸ்வரா கோவில் பரம்பரை அர்ச்சகரும், கோவில் டிரஸ்டியுமான செளந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் 2002- 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1000 கோடி வருவாய் பங்கை திருப்பதி தேவஸ்தானம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அது வரவில்லை. மிகவும் சொற்பத் தொகையே தரப்பட்டுள்ளது. எனவே ரூ. 1000 கோடி வருவாயை தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் திருப்பதி தேவஸ்தானம், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு வருடா வருடம் ரூ. 2400 கோடி பட்ஜெட் போடப்படுகிறது. பல்வேறு பிக்ஸட் டெபாசிட்கள் மூலம் ரூ. 8500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 12 டன் தங்கம் உள்ளது. தெலுங்கானாவில் 42 கோவில்களுக்கும், ஆந்திராவில் 61 கோவில்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம்தான் நிதியுதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: ttp://tamil.oneindia.co

கருத்துகள் இல்லை: