வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சென்னையில் RSS பேரணிக்கு அனுமதி கேட்ட வழக்கு ஒத்திவைப்பு .

மின்னம்பலம், காம்:  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவில், பேரணி நடத்துவது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடை அணிந்து, கையில் கம்பு ஏந்திச் செல்வார்கள் என்பதால், பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை' என, நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, மற்றொரு வழக்கிலும், ''ஆர்.எஸ்.எஸ். பேரணி, பிற மத வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் செல்ல திட்டமிட்டுள்ளதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி, விஜயதசமியை கடைப்பிடிக்கும்விதமாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் சீருடைகளை அணிந்து அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இணைச் செயலாளர் ஜோதிந்திரன் என்பவர், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி, அம்பேத்காரின் 126 வது ஜெயந்தி, விஜயதசமியை கடைப்பிடிக்கும்விதமாக கோவை, திருச்சி, குமரி, மதுரை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதி ராஜேந்திரன் முன்பு வந்தது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜராகி, இதுபோன்ற அணிவகுப்பை வருடாவருடம் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. ஆனால் காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி வழங்காமல், அனுமதி மறுத்துவருவதாகக் கூறினார். இதையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர், பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசிடம் பதிலை கேட்கவேண்டியுள்ளது. எனவே, கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து, நீதிபதி ராஜேந்திரன் வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: