வியாழன், 29 செப்டம்பர், 2016

சசிகலா நடராஜன் கையில் அதிமுக ரிமூட் கண்ட்ரோல் ! முதல்வர் கூறுவதாக சசிகலா கூறுவதைதான் அமைச்சர்கள் கூறுகிறார்கள்?


மின்னம்பலம்.காம்  :நெட் ஆன் செய்தபோது, வாட்ஸ் அப் ஏதோ டைப்பிங் செய்தபடி இருந்தது. சற்றுநேரத்தில் வந்து விழுந்தது அந்த மெசேஜ்.

“இன்று மதியம் மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்த ‘158 மணி நேரம்…. அப்பல்லோவில் நடப்பது என்ன?’ - கட்டுரையை வாசித்தேன். நியாயமான சந்தேகங்கள்தான்! சரியாக ஒரு வாரம் ஆகிறது. ஆனால், முதல்வருக்கு காய்ச்சல்… வழக்கமான உணவைச் சாப்பிடுகிறார்.. கோப்புகளைப் பார்க்கிறார்… ஆலோசனை நடத்துகிறார்… என்றெல்லாம் சொல்லி வருவது அப்பட்டமான பொய் என்பதை அதிமுக-வினரே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மருத்துவமனைக்குப் போய்விட்டுவந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரபலத்திடம் பேசினேன். ‘தரைத்தளத்தில் உள்ள ரிசப்சன் வரைதான் சென்றேன். அங்கிருந்த அமைச்சர் ஒருவர்தான் என்னிடம் பேசினார். ‘அம்மா நல்லா இருக்கிறதா சொன்னாங்க சார்… நாங்களே இன்னும் அவரைப் பார்க்கலை. இப்போதைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க. வழக்கமாக போற டாக்டர்களையே இப்போ அனுமதிக்கிறது இல்லை. இரண்டு டாக்டர்களுக்கு மட்டும்தான் உள்ளே சென்றுவர அனுமதி கொடுத்திருக்கிறதா சொல்றாங்க. ரெகுலராக அம்மாவை செக் பண்ண போய்ட்டுவந்த டீம் இப்போ போறது இல்லையாம். அதேமாதிரி டாக்டர்களே யாரும் பேசுறது இல்லை. வாட்ஸ் அப் உட்பட டாக்டர்களின் எல்லா தொடர்புகளும் உளவுத்துறை கண்காணிப்பில் இருக்கு. அதனால எல்லோரும் பயப்படுறாங்க.
அதிகாரிகள்கூட யாரும் அம்மாவைப் பார்க்கலை. சின்னம்மா மட்டும்தான் உள்ளே இருக்காங்க. அவங்க வந்து எதுவும் தகவல் சொன்னா மட்டும்தான் தெரியும்…’னு அவரு சொன்னாரு. நான் வெளியே வரும்போது மீடியா ஆட்கள் மைக்கை தூக்கிட்டு வந்தாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. அதனாலதான் பேசமாலேயே வந்துட்டேன். முதல்வரின் உடல்நிலை எப்படி இருக்கு என்பது வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இன்னும் மௌனமாக இருப்பது நல்லது இல்லை. இதை சசிகலாவிடம் யார் சொல்வது?’ என்று வருத்தப்பட்டுப் பேசினார். அதிமுக-வில் எல்லோருடைய மனநிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

நேற்று மாலையில் இருந்து முதல்வரின் உடல் நிலை பற்றி பல்வேறு செய்திகள் பரவ அப்படி எதுவும் இல்லை... நான் நலம் என, முதல்வர் ஜெயலலிதா பேசினால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்பதுதான் அந்த மெசேஜ்.
அதைப் படித்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் தயார் செய்ய ஆரம்பித்தது.
”உள்ளாட்சித் தேர்தலுக்கு நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும் மாநகராட்சியில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக. மறுநாளே அவர்கள் வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்கள். ஆனால் உள்ளாட்சி என்பது மாநகராட்சி மட்டும் இல்லையே என்பதுதான் அதிமுக-வில் கேட்கும் புலம்பலாக இருக்கிறது. ‘தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் இருக்குது. இதுல மாநகராட்சிக்கும், மாவட்ட ஊராட்சிக்கும் மட்டும்தான் வேட்பாளர்களை அறிவிச்சி இருக்காங்க. மற்ற மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என எதற்கும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஒருவேளை, இன்று இரவு அறிவித்தால் நாளைக்கு அமாவாசை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்துவிடலாம். நாளை மறுநாள் அமாவாசைக்கு அடுத்தநாள் பாட்டியமை என்று சொல்வார்கள். அன்று, எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அதனால் அன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதைவிட்டால் இருப்பது திங்கள்கிழமை. அதாவது, அக்டோபர் 3ஆம் தேதி. அன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு தாக்கல் செய்ய நாள் இவ்வளவு நெருக்கத்தில் இருக்கும்பட்சத்தில் தலைமையில் இருந்து இன்னும் எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறது. இதில், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் 919 பேர். மாவட்ட ஊராட்சிக்கு 655 பேர். இதுதான் கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 3,613 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 8288 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 6471 பேர். சிற்றூராட்சி தலைவர்கள் 12524 பேர். சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் 99324 பேர். மொத்தம் 130220 பதவிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்காங்க. அம்மா இப்படியெல்லாம் கடைசி நேரம் வரைக்கும் எப்பவுமே அலட்சியமாக இருக்க மாட்டாங்க. மாநகராட்சிக்கும் மாவட்ட ஊராட்சிக்கும் அம்மா ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடியே லிஸ்ட் ரெடி பண்ணிட்டதால வெளியிட்டுட்டாங்க. மற்ற எதுக்கும் லிஸ்ட் ரெடி பண்ணவே இல்ல. மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த லிஸ்ட்டை வெச்சு எப்படி ஃபைனல் பண்றது என்ற குழப்பத்தில்தான் தலைமைக் கழக நிர்வாகிகள் இருக்காங்க. அம்மாவைக் கேட்காம கட்சியில் இதுவரைக்கும் எப்பவும் எந்த முடிவும் யாரும் எடுத்தது கிடையாது. இதுல என்ன செய்யுறதுன்னு தெரியாமல்தான் குழப்பத்தில் இருக்காங்க. சொல்லப்போனால், எங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலைவிட அம்மாவின் உடல்நிலை பற்றித்தான் கவலையா இருக்கு. அம்மா ஹாஸ்பிட்டல்ல எப்படி இருக்காங்களோ.. அவங்க எப்போ வந்து பேசுவாங்களோ என்ற எதிர்பார்ப்புலதான் கட்சிக்காரங்க இருக்காங்க…’ என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் நிர்வாகிகள்.” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.
அந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், ‘அமைச்சர்களும், அதிகாரிகளும் சொல்வதே முதல்வரின் கவனத்துக்குப் போகிறதா என்பது தெரியவில்லை. இதில் கட்சிக்காரர்களின் புலம்பல் எங்கே அவரது கவனத்துக்கு போகப் போகிறது? சசிகலாவைத் தாண்டி யாராவது கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் ஜெயலலிதாவை சந்தித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். அது நடக்கவா போகிறது?” என்ற கேள்வியை கமெண்ட்டில் போட… பதில் எதுவும் சொல்லாமல் சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: