வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பெருவாழ்வு வாழ்ந்த பெரியார் .. உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் எல்லாமே அவரிடம் இருந்தது !

பெரியாரை சிறு வயதில் இருந்து படித்திருந்தாலும் இந்த வரிகளை படித்த
போது தொண்டை கட்டிக் கொண்டது எழுதிய தோழருக்கு வணக்கங்கள்.  ...... 1879ஆம் ஆண்டு பிறந்த பெரியார்
1973ஆம் ஆண்டுவரை
நீண்டநெடிய பெருவாழ்வு
வாழ்ந்தார்!
கடவுள் உண்டு என்று
உறுதியாக நம்பியவர்கள்,
கடவுளின் பாதாரவிந்தங்களை பற்றியவர்கள்,
கடவுளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்,
கடவுளின் தூதுவர்கள்,
கடவுளின் நேரடி முகவர்கள்
இவர்களின் வாழ்நாட்களை விட
தந்தைபெரியாரின் வாழ்நாள் அதிகமாகவும்
அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.
இதில், பல நடமாடும் தெய்வங்களை அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து உயிரோடிருப்பதை உறுதி செய்யவேண்டியிருந்தது.
ஆனால்,
பெரியார் இறுதிவரை இயங்கிகொண்டேயிருந்தார்

தொண்ணூறு வயது கடந்தும்,
முதுமையும் - தள்ளாமையும் பின்னால்
விரட்டிக் கொண்டுவர...
சாவு கையை பிடித்து முன்னால்
இழுத்துக் கொண்டிருக்க...
தமிழ்நாட்டின் வீதிகளில்
கிழட்டுச் சிங்கம் போல,
பிடறிமயிர் அசைந்தாட
வீரகர்ஜனை புரிந்தவர் பெரியார் ஒருவரே!
இத்தனைக்கும் அவர் உடல்நிலை முழுமையாக அவருக்கு
ஒத்துழைத்ததுமில்லை.
ஒரே சீராக இருந்ததுமில்லை.
ஒரே நாளில் பல மைல்கள் பயணம்
காலையில் ஒரு ஊர்,
மாலையில் வேறு ஊர்,
இரவு இன்னொரு ஊரில் பொதுக்கூட்டம்.
இத்தனை அலைச்சலால்...
திடீரென வரும் காய்ச்சல்,
வயிற்றுப் போக்கு,
ஒவ்வாமை காரணமாக வாந்தி,
குடலிறக்கத்தால் ஏற்படக்கூடிய
உயிர்போகும் வலி...
ஒவ்வொரு சொட்டு சிறுநீர் வெளியேறும்போது உண்டாகும்
ஊசிகுத்துவது போல எரிச்சல்...
சிறுநீர் வெளியேற சொருகப்பட்டிருக்கும்
ரப்பர் குழாய் சிறிது அசைந்தாலும்
அடிவயிற்றில் இடி இறங்கியது போல வலி...
இத்தனையும் பொறுத்துக்கொண்டுதான்
பெரியார் எனும் இயந்திரம்
இயங்கி கொண்டிருந்தது. எதற்காக?
எனக்கு ஒட்டுபோடுங்கள் என்று கேட்பதற்காக அல்ல...
என்னைப் பதவிக்கு அனுப்புங்கள் என்று
கேட்பதற்காக அல்ல...
தன் உறவுகளை, தன் சாதிக்காரர்களை
உயர்த்துவதற்காக அல்ல...
அவரால் உருவாக்கப்பட்டவர்கள்,
ஆதரிக்கப்பட்டவர்கள் அனைவரும்
பெரிய பதவிகளை எட்டிப் பிடித்தபோதும்
தனக்கோ, தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ
பட்டம், பதவி, பாராட்டு என எதையும் எதிர்பாராமல்,
வசைச்சொல்லுக்கு அஞ்சிடாமல்
தொண்டு செய்தே
பழுத்தபழம்,
அந்த ஈரோட்டு கிழம்!
குளித்து முடித்து, ஒப்பனை செய்து,
முகத்தை திருத்திக் கொண்டு,
வாசனாதி திரவியங்களை பூசிக்கொண்டு,
உயர்வான உடையணிந்து
மக்களிடத்தில் வலம் வந்தவரல்ல அவர்.
தன் சட்டை துவைத்து
எத்தனை நாளாயிற்று?
அனிந்திருக்கும் சட்டையில்
பொத்தான்கள்இருக்கிறதா?
பொத்தல்கள் இருக்கிறதா?
இடுப்பிற்கு கீழே...
இறங்கிய குடலையும்,
பெருத்த விதைப்பையையும்
மறைத்துக்கட்டிய கைலி
சொட்டுகின்ற சிறுநீரால்
ஈரமாகிறதே...
முன்னறிவிப்பின்றி
வெளியேறும்மூத்திரத்தை
வாளியில் பிடித்து வைத்துக்
கொண்டு மேடையில் பேசுகிறோமே?
மக்கள் முகம்சுளித்தால்
மவுசு போய்விடுமே?
என்றெல்லாம்
அவர் கவலைப் பட்டதே இல்லை!
இறுதிவரை இயங்கிகொண்டே இருந்தார்.
அவர் கவலைப்பட்டதெல்லாம்....
வீழ்ந்து கிடக்கும் இந்த மக்களின் விடுதலைக்கு வழி எது?
என்பதைப் பற்றித்தான்
பெரியாருக்கு சிகிச்சையளித்த
வேலூர் சிஎம்சி மருத்தவமனையின் மருத்துவர் ஜான்சன் பெரியாரின் உடல் நிலையை பரிசோதித்துவிட்டு சொன்னார்;
"முற்றிலும் பழுதடைந்த கடிகாரம்
நம்ப முடியாத வகையில் சரியான நேரத்தைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது"
இந்த கடிகாரத்தை இறக்குமதி கடிகாரம் என்று கூறி ஏற்க மறுப்பவர்கள்,
எண்கள் தமிழாக இல்லையென்று
இடக்கு பேசுபவர்கள்,
கடிகார முட்களின் நிறம் கருப்பாக இருக்கிறதே என்று வெறுப்பவர்கள்,
கடிகாரத்தின் ஓசை இனிமையாக இல்லையெனும் இன்னிசை விரும்பிகள்
எவரும்...
ஏற்கனவே இருந்த கடிகாரங்கள் ஏன் ஓடவில்லை என்பது பற்றியோ,
சாவி கொடுத்தும் இயங்காத
காரணம் பற்றியோ,
இந்தக் கடிகாரம்தான் நமக்கு சரியான நேரத்தை காட்டிக் கொண்டிருந்தது
என்பது பற்றியோ சிந்திப்பதில்லை.<>தமிழ்நாசர்
!
நன்றி
பழனிவேல் மானிக்கம் முகநூல் பதிவு Damodaran Chennai

கருத்துகள் இல்லை: