வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முதல்வர் உடல்நிலை வதந்திகளால் அல்லோல கல்லோலம்... போலீஸ் எச்சரிக்கை, அப்பல்லோ விளக்கம்!

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இன்றோடு அவர் அனுமதிக்கப்பட்டு எட்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதிமுகவினரிடம் சலிப்பும், ஏனையோரிடம் ‘என்ன நடக்கிறது? அப்பல்லோவில் இருந்து எப்போது போயஸ் இல்லம் திரும்புவார் முதல்வர்?’ என்ற எதிர்பார்ப்பும் கூடுகிறது. நிலவும் இந்த சூழலே பல வதந்திகளுக்கு அடிகோலுகிறது. நேற்று மதியம் தொடங்கி முதல்வர் பற்றிய பல்வேறு வதந்திகள் செவி வழிச் செய்திகளாக பரவின. சமூக வலைதளங்களில் சிலர் இப்படி எழுதினாலும்கூட, செவி வழியில் பரவிய செய்திகளே அதிகம். இப்படியான வதந்திகள் பரவியதும் பல இடங்களில் அலுவலகங்களை விட்டு பெண்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குக் கிளம்பினார்கள். பல இடங்களில் கடைகள் அடைக்கப்படும் சூழல் உருவானது. கடந்த திங்கட்கிழமை பரப்பப்பட்ட வதந்திகளால் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பத்திரமாகச் செல்லுமாறு அறிவுறுத்தி, முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் வதந்திகள் பரவிய நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

(அப்பல்லோ மருத்துவமனையின் விளக்கம்)
இந்நிலையில் சென்னை அப்பல்லோ நிர்வாகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்கு உடல்நலம் தேறி வருகிறார். அவருக்கு தேவையான அனைத்துவிதமான மருத்துவப் பரிசோதனைகளும் முடிந்து விட்டது. அவருக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுவதாலும், உடல்நலம் முழுமையாக சரியாகவும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார்” என்கிறது அந்த அறிக்கை.

கருத்துகள் இல்லை: