திங்கள், 29 டிசம்பர், 2014

ஐஐடி டெல்லி இயக்குநர் பதவி விலகினார்! சுப்பரமணியம் சாமியின் மிரட்டல் காரணம்?

டெல்லி: தனக்குரிய சம்பளப் பாக்கி ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு சுப்பிரமணியன் சாமி கொடுத்த நெருக்கடி காரணமாக, தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 வருடம் இருக்கும் நிலையில் டெல்லி ஐஐடியின் இயக்குநர் ரகுநாத் செவ்கோங்கர் பதவி விலகியுள்ளார். இவரது விலகல் குறித்து மத்திய மனிதவளத்துறை இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் செவ்கோங்கர் பதவி விலகி விட்டதாக மூத்த ஐஐடி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவரது விலகலுக்கு முக்கியக் காரணமே சுப்பிரமணியன் சாமி கொடுத்த பிரஷர்தான் காரணம் என்கிறார்கள். சம்பளப் பாக்கி கேட்டு சாமி, டெல்லி ஐஐடியின் முன்னாள் டி பிரிவு ஆசிரியராக இருந்தவர். இவர் அங்கு ஆசிரியராக இருந்தபோது அதாவது 1972ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தனக்குரிய சம்பளப் பாக்கித் தொகையான ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு ஐஐடியை தொடர்ந்து நெருக்கி வந்துள்ளார் சாமி.
ஆனால் இந்தத் தொகையைத் தர முடியாது என்று இயக்குநர் செவ்கோங்கர் கூறி வந்துள்ளார். இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் சாமி நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய மனித வளத்துறை மூலம் சாமி நெருக்கடி கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பணிய விரும்பவில்லையாம் செவ்கோங்கர். இதனால்தான் தனது பதவியிலிருந்து அவர் விலகி விட்டதாக சொல்கிறார்கள். சம்பளப் பாக்கியை செவ்கோங்கர் கொடுக்க மறுத்து வந்ததற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது என்னவென்றால், ஐஐடி கேட்ட தகவல்களை சாமி தரவில்லை. தர மறுத்து வந்துள்ளார். ஐஐடி கேட்ட விவரம் என்னவென்றால், 1972ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாமியின் வருமானம் என்ன என்பதாகும். ஆனால் கேட்ட தகவலைத் தராமல், தனக்குரிய சம்பளப் பாக்கியை 18 சதவீத வட்டியுடன் தர வேண்டும் என்று நெருக்கி வந்தாராம் சாமி. முதலில் இந்தக் கோரிக்கையை ஐஐடியும், மனித வளத்துறையும் நிராகரித்து விட்டன. இதையடுத்து சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று ஐஐடி பதில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஐஐடியின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக மோடி அரசு பதவிக்கு வந்ததும் மத்திய மனித வளத்துறை பல்டி அடித்தது. மேலும் "கட்டப் பஞ்சாயத்து" வேலையிலும் அது இறங்கியது. அதாவது செவ்கோங்கர் மற்றும் மூத்த ஐஐடி அதிகாரிகளையும், சாமியையு்ம் சந்தித்துப் பேச வைத்தது. ஆனால் இப்படி கோர்ட்டுக்கு வெளியே சமரசம் ஏற்படுவதை செவ்கோங்கர் விரும்பவி்ல்லை. சட்ட ரீதியாக இதை தீர்க்க அவர் உறுதியாக இருந்தார். கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் அஞ்சினார். அதை விட முக்கியமாக இதில் அரசியல் கலந்து விட்டதாகவும் அவர் கருதினார். இதனால்தான் தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: