திங்கள், 29 டிசம்பர், 2014

தமிழகம் முழுவதும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

மதுரை மாட்டுத்தாவணியில் கல்வீசி அரசு விரைவுப் பேருந்தின்  கண்ணாடி உடைக்கப்பட்டது.    பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே  வந்த பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சென்னைக்கு புறப்பட்ட பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலால்  பயணிகள் தவித்து வருகின்றனர். நெல்லையிலும் பேருந்து மீது கல்வீச்சு நெல்லை: நெல்லையிலும் வடக்கு புறவழிச்சாலையில் 2 அரசு விரைவுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சென்ற பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பெண் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.


போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்

கோபி: கோபிச்செட்டிப்பாளையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்து இயக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் உத்தரவால் பாதுகாப்புடன் இயங்குகின்றன பேருந்துகள் மேலும் உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் காவல் துறை பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றது. வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கும் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்:

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், 12வது ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர். மாநிலம் முழுவதும் 95 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அறிவித்ததற்கு ஒரு நாள் முன்னதாகவே போராட்டத்தை தொடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை உள்பட 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இவர்களுக்கான 11வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு 30.8.2013ல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 12வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி 29ம் தேதி முதல் (நாளை) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்பட 11 சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தனித் துணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் 2 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, 11 போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ‘அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடக்கும் என நேற்று மாலை தெரிவித்தன. இந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக அதாவது, இன்று காலை 4 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

சென்னையில் தாம்பரம், கோயம்பேடு, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். காலையில் பஸ்களை எடுத்துச் சென்ற ஓட்டுனர்களும், ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி விட்டு போராட்டத்தில் பங்கேற்றனர். தாம்பரம் டெப்போவில் (எம்டிசி) 800 பஸ்கள் உள்ளன. இதில் 3 பஸ் மட்டுமே வெளியே சென்றது. அந்த பஸ்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 67 பஸ்களும் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. குரோம்பேட்டை டெப்போவில் உள்ள 102 பஸ்களில், 16 பஸ் மட்டுமே வெளியே சென்றுள்ளது. அண்ணா நகர் மேற்கு டெப்போவில், 217 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 27 டெப்போ அலுவலகங்கள் முன்பும் ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, சிஐடியு (மாநகர போக்குவரத்து கழகம்) தலைவர் சேகர் கூறுகையில், ‘சென்னையில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிபுரிந்து வருகிறோம். இதில் 95 சதவீதம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்க தலைவர்கள் பஸ்களை இயக்க வேண்டும் என்று கூறினாலும், தொழிலாளர்கள் முழு அளவில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை என்ற பெயரில் 2 நாள் நாடகத்தை நடத்தி முடித்து உள்ளது தமிழக அரசு. இதன் காரணமாகவே ஒரு நாள் முன்பே போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்‘ என்றார்.

இதே போன்று, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட அனைத்து இடங்களிலும் 80 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பஸ் நிறுத்தங்களில் ஏராளமானோர் காத்து கிடப்பதால், பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.  dinakara.com

கருத்துகள் இல்லை: